அம்மனைப் போற்றும் ஆடி வழிபாடு!

அம்மனைப் போற்றும் ஆடி வழிபாடு!
Published on
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!
ஆடிச் சிறப்பு!

'டிக் காற்றில் அம்மியும் பறக்கும்' எனும் பழமொழி அனைவரும் அறிந்ததே.. ஆனால் அதன் உண்மையான அர்த்தம் அதுவல்ல…
'ஆடிக் காற்றில் அம்மையும் பறக்கும்' என்பதே சரியான பழமொழி. அதாவது, அம்மை உட்பட சகல வியாதிகளையும் குணப்படுத்த வல்லது ஆடிக் காற்று.
– ஆர். பிரசன்னா, ஸ்ரீரங்கம்

சக்தியின் மாதம்

'ஆடி அழைக்கும். பொங்கல் போகச் சொல்லும்' என்பதற்கேற்ப ஆடி மாதம் பிறந்து விட்டால் பண்டிகைகள் வரிசை கட்டி நிற்கும்.  ஆடி முதல் தை வரை தட்சிணாயன புண்ணிய காலமாகும். ஆடியில் சந்திரனின் ஆளுமை கூடுவதாலும், சிவனைவிட சக்திக்கு ஆற்றல் அதிகமாவதாலும், இம்மாதம் சக்தியின் மாதமாக கருதப்படுகிறது. ஆடியில் கோடை முடிந்து, பருவ மழை தொடங்குவதால் பூமி உஷ்ணமாகும். இதனால் இம்மாதத்தில் அம்மனுக்கு கூழ், வேப்பிலை, எலுமிச்சை ஆகியவை படைத்து அவற்றை பிரசாதமாக சாப்பிடும்போது உடல் நலம் சீராகும் என்பது நம்பிக்கை.
– ராதிகா ரவீந்திரன், திருவான்மியூர்

அம்பிகைக்கு உகந்த ஆடி மாதம்

டி மாதம் புண்ணிய மாதம், ஆஷாட மாதம் என்று அழைக்கப்படும்.
ஆடி மாதத்தில், பிராணவாயுவின் சக்தி வழக்கத்தை விட கூடுதலாக இருக்குமாம். பெண்கள் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு ஆகிய நாட்களில் விரதம் இருந்து அம்மனை வழிபடுவர்.

டி கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பூரம், ஆடி சுவாதி,
ஆடிப் பெருக்கு என்று வரிசையாக பண்டிகைகள் அணி வகுத்து வரத் துவங்கும்.

டி வெள்ளிக்கிழமைகளில் புற்றுக்கு பால் தெளித்து, பூஜை செய்தால் நாக தோஷம் நிவர்த்தி ஆகும்.

துளசி வழிபாடு, அவ்வையார் நோன்பு போன்றவையும் ஆடி மாதத்தில்தான் வரும்.

க்தி மாதமாகக் கருதப்படும் ஆடி மாதத்தில், பித்ருக்களை வணங்கி, அம்மனுக்கும் பூஜைகள் செய்வது மிகவும் நல்லது.
– ஜெயா சம்பத், சென்னை

விட்டலா, விட்டலா…

ஹாராஷ்டிராவில் ஆடி மாதமென்றாலே பண்டர்பூரில் கொண்டாடப்படும் 'ஆஷாட' ஏகாதசியே நினைவில் வரும். 'விட்டலா, விட்டலா' என்ற கோஷத்துடன் 'வார்கரி' என்றழைக்கப்படும் பக்தர்களின் நடைப் பயணமானது 'அபங்க்'  மற்றும் பஜனைப் பாடல்களுடன் பண்டர்பூருக்கு கோலாகலமாக தொடரும். சாதி பேதமற்ற, ஏழை-பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் பக்தியினால் இணைந்த பக்தர்கள் அவர்கள்.
ஜெயஸ்ரீ எம். சாரி, நாந்தேட்

ஆடி மாதத்தின் சிறப்புகள்

*ஆடி மாதத்தைச் சிறப்பிக்கும் வகையில் பல பழமொழிகள் உள்ளன.

* 'ஆடி அடியெடுக்கும்' ஆடி மாதத்தில் இருந்துதான் பண்டிகைகள் அணிவகுக்க ஆரம்பிக்கும்.

* 'ஆடிப்பட்டம் தேடி விதை.'

ஆடி மாதத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கி, காவிரி ஆற்றில் தண்ணீர் வரும். அப்பொழுது விவசாயிகள் நிலத்தை உழுது விதை விதைக்கத் தொடங்குவார்கள்.

* 'ஆடிக் காற்றில் அம்மியும் நகரும்.'

கோடை காலம் முடிந்து மழை காலம் துவங்குவதன் காரணமாக ஆடி மாதத்தில் பலத்த காற்று வீசும் என்பதை குறிப்பிட இப்ப பழமொழி ஏற்பட்டது.

இக்கருத்தை ஒட்டியே  ஏற்பட்ட மற்றொரு பழமொழி,

* 'ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும்' என்பதாகும்.

* ஆடிச் செவ்வாய் தேடி, அரைத்த மஞ்சள் பூசிக் குளி."

ஆடி மாதம் காவிரியில் தண்ணீர் இருப்பதால் சுமங்கலிப் பெண்கள் அனைவரும் ஆற்றுக்குச் சென்று மஞ்சள் உரைத்துப்பூசிக் குளிப்பார்கள்.

* 'ஆடிக் கூழ் அமிர்தமாகும்.'

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். அம்மன் கோயில்களில் கூழ் காய்ச்சி அம்மனுக்குப் படைத்து, அனைவரும் பகிர்ந்து கொள்ளுவது வழக்கம்.
– பி . லலிதா திருச்சி

முளைப்பாலிகை

மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொங்கல் வைத்து மிகவும் சிறப்பாக வழிபாடு செய்யப்படுகிறது. பொங்கல் வைக்க பயன்படும் வரட்டியின் சாம்பல்தான் கோயில் விபூதி பிரசாதமாக தரப்படுகிறது.

  • ஆடி மாதத்தில் அம்மனுக்கு முளைப்பாரி எடுக்கும் வழக்கும் உண்டு. இந்த நேர்த்திக்கடன் மழை வளம் வேண்டியும், திருமணத்தடை நீங்கவும் மேற்கொள்ளப் படுகிறது. 'முளைப்பாலிகை' என்ற சொல்லே பின்பு திரிந்து முளைப்பாரி என்று ஆயிற்று. சிறிய மண்சட்டியில் பயறு வகை விதைகளைத் தூவி கோயிலுக்கு அருகில் வைத்து வளர்த்து ஒவ்வொரு நாளும் இரவு அதனை தெய்வமாக கருதி கும்மி அடித்தபடி வலம் வந்து பாடுவார்கள். திருவிழாவின் கடைசி நாளில் பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து வந்து நீர்நிலைகளில் அல்லது கிணற்றில் கரைப்பார்கள்.
ஆடி ஸ்பெஷல் மா விளக்கு

ரெசிபி: பச்சரிசி ஒரு கப், வெல்லம் ஒரு கப்,  ஏலக்காய் 2 , நெய் 50 கிராம் . பச்சரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து, களைந்து  துணியில் உலர்த்தி, சிறிது ஈரம் இருக்கும்போதே மிக்ஸியில் போட்டு பொடித்து, மாவாகி சலிக்கவும். இத்துடன் பொடித்த வெல்லம், பொடித்த ஏலக்காய் சேர்த்து ஒரு தட்டில் வைத்து,  அந்தத் தட்டில் நான்கு புறமும் சந்தனம், குங்குமம் வைத்து சிறிது பூவையும் வைத்து நடுவில் குழி பண்ணி நெய் ஊற்றி திரியை போட்டு விளக்கேற்றவும்.  ஆடி வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, ஆடி கிருத்திகை ஆகிய நாட்களில் மாவிளக்கு  போடும் பழக்கம் உள்ளது. சிலர்  அம்மனுக்கும் சிலர் முருகனுக்கும்  மாவிளக்கு போடுவார்கள்.
– கிருஷ்ணவேணி, சென்னை

'தலை ஆடி'

ன் பிறந்த ஊர், விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம், சுற்றியுள்ள ஊர்களில், புது மணத்தம்பதிகளை தலை  ஆடிக்கு அழைப்பது விசேஷம்.

திருமணமான மகளையும், மருமகனையும் முறைப்படி அழைக்க, அவர்களும் ஆசையாக  வருவார்கள்.  குளித்ததும், இருவருக்கும் புத்தாடை கொடுத்து அணியச் சொல்லி, காலை விருந்தே கலகலக்கும். மதியம் கறி விருந்து, கொண்டாட்டம் சொந்த பந்தங்களுடன். விருந்துக்கு வரும் பெரியவர்கள் ஆசிர்வதிப்பார்கள். மாப்பிள்ளை கிளம்பும்போது, சீர்ப்பணத்துடன் வழியனுப்புவது வழக்கம். 'ஆடிக்கு அழைக்காத மாமியாளை தேடிப் பிடித்து அடி' என்ற பழமொழியும் உண்டு. ஹைலைட்  என்னன்னா, எழுபதுகளில், தலை ஆடிக்கு பள்ளிகளுக்கு விடுமுறை .
என்.கோமதி, நெல்லை

ஆடிப்பட்டம் தேடி விதை!

டி மாதம் பிறக்கும் முதல் நாளே ஆடிப் பண்டிகைதான். அன்று துவங்கும் பண்டிகை, அடுத்தடுத்து வரப்போகும் பண்டிகைகளுக்கு அச்சாரம். *ஆடிப்பட்டம் தேடி விதை*  என்பது போல ஆடிப்பெருக்கு தினத்தன்று காவோித்தாயை, பெண்கள் நினைவு கூறும் விதமாய் காவோிக்கு சென்று  மஞ்சள் கயிறு கட்டி, புத்தாடை தாித்து, பழங்கள் வைத்து, வளையல்கள் அணிந்து கோலாகலாமாய் கொண்டாடுவது, தமிழ் மண்ணின் மரபு.

புது மணதம்பதிகள் தாலி பிாித்து கட்டும் நிகழ்வும் பாரம்பா்யம். ஆடிப்பெருக்கு தினத்தில் சித்ரான்னங்கள் செய்து, குடும்பத்தோடு நிலாச்சோறு, மற்றும் கடற்கரை சென்று சாப்பிடுவதும் சிறப்பு, அதேபோல் மூதாதையா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபடுவதும் சிறப்பு வாய்ந்த ஆடி அமாவாசையில்தானே நடக்கிறது.
– நா.புவனாநாகராஜன், செம்பனார்கோவில்

தமிழ் மூதாட்டி ஔவையாரம்மன் கோயில்
  • குமரி மாவட்டம் தோவாளை தாலுகாவில் உள்ள தாழக்குடி கிராமத்தில் தமிழ் மூதாட்டி ஔவையாரம்மன் கோயில் உள்ளது.
    இங்கு, ஆடி மாத செவ்வாய்கிழமைகளில் பொங்கல் வைத்து, கொழுக்கட்டை அவித்து வழிபடுகிறார்கள். வளமான எதிர்காலம் அமைய இப்பிரார்த்தனை செய்யப்படுகிறது.
ஆடி மாதம் வளையல் அலங்காரம்:
  • எட்டயபுரம் வெக்காளி அம்மன் கோயிலில் ஆடி 18 அன்று
    வளையல் அலங்காரம்.
  •  திருநெல்வேலி காந்திமதி அம்மனுக்கு ஆடி 18 அன்று வளைகாப்பு.
  •  சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில்
    ஆண்டாளுக்கு ஆடி மாதத்தில் கண்ணாடி வளையல் மாலை
    அணிவிக்கப் படுகிறது.
  •  திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மனுக்கு ஆடிப் பூரத்தன்று
    வளையல் அலங்காரம் செய்யப் படுகிறது.
  • -எஸ். ‌‌ராஜம், ஸ்ரீரங்கம்.
ஆடி மாத சிறப்புகள்…

மாதங்களில் பல சிறப்புகளைக் கொண்டது ஆடி மாதம்.
தமிழ் மாதங்களை இரண்டு அயனங்களாகப் பிரித்துள்ளனர் தஷ்ணாயாணம், உத்ராயணம்.
தஷ்ணாயண காலத்தின் துவக்கமே ஆடி மாதம். இம்மாதத்தில் சிவனின் அம்சமான சூரியன், சக்தியின் அம்சமான சந்திரனில் சஞ்சாரம் செய்கிறார். அதனால் ஆடி மாதம் சக்தியின் அம்சமான மாதமாக கருதப்படுகிறது. இக்காலத்தில் வெளிப்படும் சூரியக்கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும் என்பதாலேயே 'ஆடிப் பட்டம் தேடி விதை' என்ற பழமொழி ஏற்பட்டது.

ஆடி மாதம் வெப்பம் தணிந்து காற்று அதிகமாக வீசும் காலம் என்பதால் நோய் தொற்றுக்கான சாத்தியக்கூறுகள் அதிகம். நோய் தொற்றிலிருந்து நம்மை காக்கவே  அம்மனுக்கு கேப்பை கூழ், (முருங்கைக்கீரை,
சின்ன வெங்காயம் சேர்த்து) எலுமிச்சை, வேப்பிலை போன்றவற்றை படைத்து உண்கிறோம்.
– தி.வள்ளி, திருநெல்வேலி

சித்திரை மாதமும்… புதுமணத் தம்பதிகளும்.

மிழ் மாதங்களில் சித்திரை மாதத்தில்தான் மிக அதிகமாக வெயில் அடிக்கும் என்பதால் அந்த நேரத்தில் பிரசவம் இருந்தால் பிரசவிக்கும் குழந்தையும் பிரசவித்த தாய்மார்களும் மிகவும் கடினமான சூழ்நிலையை சந்திப்பார்கள் என்பதற்காகவே ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகளை பிரிந்து இருக்க சொல்லுவார்கள். இந்த விஞ்ஞான காலத்தில் இதெல்லாம் மூட நம்பிக்கை என்று சொல்வது அபத்தமான ஒன்று. நம் முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள் அல்ல… அவர்கள் சொல்வதில் எந்த ஒரு பொருளும், ஒரு நல்ல கருத்தும் இருக்கும் என்பதால் அதை நாம் மதித்து நடந்தால் நாம் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழலாம்.  
உஷா முத்துராமன், திருநகர்  

அம்மன் வழிபாடு மற்றும் முன்னோர் வழிபாடு 

டி செவ்வாய் தேடி மஞ்சள் தேய்த்து குளி. ஆடியில் பூமியில் இருந்து உஷ்ணம் அதிக அளவில் வெளியேறும். இதனால் நோய் தொற்றுலிருந்து மக்களைக் காப்பாற்ற ஆடிக் கூழ், வேப்பிலை, மஞ்சள் ஆடை, போன்றவைகளை  நம் முன்னோர்கள் பின்பற்றினர். ஆடி அமாவாசையில் பித்ருக்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து அவர்களை வழிபாடு செய்தால் நாம் மட்டும் அல்ல நம் பின் வரும் சந்ததியினரும்  அளவற்ற புண்ணியங்களைப் பெறுவர். ஆடி அம்மன் வழிபாடும் நம் பாவங்களை போக்கி நற்பலன்களை பெற்று தரும். ஆடி மாதத்தில்  ஆண்டவன் வழிபாடு மற்றும் முன்னோர் வழிபாடு இரண்டையும்  செய்வதினால் அளவற்ற நற்பலன்களை நாமும் நமது சந்ததியினரும் அடைய முடியும்.
– உஷா சங்கரன், சென்னை

அழிஞ்சி மரக்குச்சி…

ங்கள் ஊரில், ஆடி பிறகும் முதல் நாளை 'தேங்காய் சுடும் நோம்பி (பண்டிகை)' என்றுதான் கூறுவார்கள். தேங்காயை நன்கு தரையில் தேய்த்து, வழுவழுப்பாக ஆனதும், தேங்காயின் ஒரு கண்ணை ஓட்டையிட்டு தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவேண்டும். பிறகு  தேங்காயினுள் ஊறவைத்த பச்சரிசி, பொட்டுக்கடலை, சிறிது எள், நாட்டுச்சக்கரை என சிறிது சிறிதாக  உள்ளே போட்டு தண்ணீரை விட்டு  நிரப்பவேண்டும்.

பின் நீண்ட கூராக சீவப்பட்ட  அழிஞ்சி மரக்குச்சியில், அந்த தேங்காயை சொருகி, அந்த குச்சியை சுற்றி மஞ்சளை பூசி, வீட்டு வாசலில் ஒரு இடத்தில் நெருப்பு மூட்டி, அந்த நெருப்பில்  தேங்காயை  சுடுவார்கள். தேங்காய் லேசாக வெடிக்கும்பொழுது எடுத்து விடவேண்டும். பிறகு அருகில் இருக்கும் பிள்ளையார் கோயிலுக்கு கொண்டு சென்று வழிபட்டதும், தேங்காயை உடைத்து பிரசாதமாக சாப்பிடுவார்கள்.

சேலம் மாவட்டத்தில் இன்றும், ஆடி முதல் தேதியில் கொண்டாடும் விழா இது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை கொண்டாடுவதே இதன் சிறப்பு.!
-பானு பெரியதம்பி, சேலம்

ஆடிப்பூரம்   ஆண்டாள் அவதார தினம் (ஆகஸ்ட் 01, 2022)

* ஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூரத்தன்று ஸ்ரீவில்லிப்புத்தூரில்
தேர்த் திருவிழா நடைபெறும். தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேராகக்
கருதப்படும் இதில் சுமார் ஆயிரம் தேவ, தேவியர், ரிஷிகள் ஆகியோரின்
உருவங்களும், ராமாயண, மகாபாரதக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இத்தேரை வடம் பிடிக்க மூவாயிரம் பேராவது தேவைப்படுவர். வானமாமலை ஜீயரால் வழங்கப்பட்ட இத்தேரில் திருவிழாவன்று ஆண்டாளும்,
ரங்க மன்னாரும் எழுந்தருளி வீதியுலா வருவார்கள்.

* சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீமாதவப் பெருமாள் கோயிலில்
ஆடிப்பூரத்தன்று ஆண்டாளுக்கு அரங்கன் அலங்காரம் செய்வார்கள். அன்று  ஆண்டாள் தரிசனம் செய்வது புண்ணியம்.

* பெருமாள் கோயில்களில் ஆண்டாள் தனிச் சன்னிதியில்தான் காட்சி
அளிப்பது வழக்கம். ஆனால் ஆந்திர மாநிலம் தெரணி வைகுண்டநாதர்
கோயிலில், பெருமாள் சன்னிதியிலேயே ஆண்டாள் காட்சி தருகிறாள்.

* ஸ்ரீவில்லிப்புத்தூர் வட பெரும் கோயிலுக்கும், ஆண்டாள் கோயிலுக்கும்
இடையே உள்ள திருப்பூர நந்தவனம், பெரியாழ்வாரால் ஏற்படுத்தப் பட்டது.
ஆடிப் பூர நாளில் ஆண்டாள் இங்கே அவதாரம் செய்ததை நினைவு கூறும்
வகையில் மாதந்தோறும் பூர நட்சத்திர நாளில் ஆண்டாள் இங்கே
எழுந்தருளுகிறாள்.

* ஆண்டாள் பூமிதேவி அம்சமாக அவதரித்தவள்.

* ஆண்டாள் திருப்பாவை முப்பது பாசுரங்களும், நாச்சியார் திருமொழி
நூற்றி நாற்பத்தி மூன்று பாசுரங்களும் ஆக 173 பாசுரங்கள் பாடியுள்ளார்.
– எஸ், ராஜம், ஸ்ரீரங்கம்

 மகிழ்வோம்! மகிழ்விப்போம்!

ம் முன்னோர்கள் பண்டிகை என்பதை வெறும் சாமியோடு மட்டுமே தொடர்புடைய விஷயமாக மட்டுமே பார்க்கவில்லை. எவ்வளவு சாமிகள், எவ்வளவு பண்டிகைகள்… அப்பாடா!  என மலைத்து போவோம். ஒவ்வொரு பண்டிகைகளுக்கும் வெவ்வேறு பூஜைகள், பல்வேறு உணவு வகைகள் என நம் முன்னோர்கள் ரசனை மிக்கவர்கள். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு மூல தெய்வம் மற்றும் பல்வேறு வழிபாடுகள்.

மழைகாலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும், ஆரோக்கிய மான உடல் நலம் பெறவும், நோய்கள் பரவாமல் இருக்கவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தினார்கள். இக்காலத்தில் அம்மன் கோயில்களிலும் வீடுகளிலும் வேப்பிலையை அதிகமாக பயன்படுத்துவதும் நோய்கிருமிகள் நம்மை அண்டாமல்  காக்கவே.

நம் முன்னோர்கள் வகுத்து கொடுத்ததை நாம் செய்தாலே போதும். அது நம் வாழ்வியலோடு பெரிதும் தொடர்புடைய வழிபாட்டு முறைகளே!  இவை அனைத்துமே நம் மகிழ்ச்சிக்காகவும் நலனுக்காகவும்  வகுக்கப்பட்டதே தவிர வேறொன்றுமில்லை.

ஆடி அழைத்து வரும் பண்டிகைகளை சந்தோஷமாக வரவேற்று மகிழ்ந்திருப்போம்!  மற்றவரையும் மகிழ்ச்சிப் படுத்துவோம்!
-தனுஜா ஜெயராமன்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com