பறக்கும்  பாவைகள்!

பறக்கும்  பாவைகள்!
Published on
-ஜி.எஸ்.எஸ்.

பகுதி-10

'எங்களாலும் பறக்க முடியும்'

ஜேனட் வாட்டர்ஃபோர்டு ப்ராக் – (Janet Waterford Bragg) – பெண் விமான ஓட்டிகள் குறித்த சரித்திரத்தில் இவர் மிக முக்கியமானவர். அமெரிக்காவில் வசித்த ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்த பெண்மணி. கருப்பர் இனத் தவருக்கான விமான ஓட்டிகள் அமைப்பின் தலைமையை ஏற்றவர்.

ஜார்ஜியாவில் பிறந்தார். 17 பேர் அடங்கிய குடும்பத்தில் வளர்ந்தார். 1927ல் பள்ளிப் படிப்பை முடித்தார். பின், மாக்பிகார் என்ற மருத்துவம​னைக்
கல்லூரியில் சேர்ந்து செவிலியர் படிப்பில் பட்டம் பெற்றார்.  சிகாகோவுக்குச் சென்று நர்சிங் பணியைத் துவக்கினார். அப்போதுதான் அவருக்கு பறப்பதற்கு ஆர்வம் வந்தது.

1933ல் கர்​ட்ஸ் ரைட் விமானவியல் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தார்.  ஆகாய விமானங்கள் தொடர்பான இயந்திரவியல் வகுப்புகளில் சேர்ந்து படித்தார். அங்கு பயிற்சி பெற்ற 24 கருப்பின ஆண்களுக்கு நடுவே இவர் மட்டுமே பெண்மணி!  (அந்தப் பயிற்சிக் கூடத்தி​ல் வெள்ளையர்களுக்கும் தாராளமாக அனுமதி உண்டு என்றாலும் அவர்களுக்குத் தனி வகுப்புகள். அந்த அளவுக்கு இனவெறி அமெரிக்காவில் அப்போது பரவியிருந்தது).

இவான்ஸ் வாட்டர்ஃபோர்டு என்பவரை மணந்தார். ஆனால் இரண்டே வருடங்களில் விவாகரத்து ஆனது. அதற்குப் பிறகு மீண்டும் செவிலியாகப் பணி புரிந்தார்.  பிறகு இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணி…

பறக்க வேண்டும் என்ற ஆசை அவரைப் பிடித்து ஆட்டியது. விமானவியல் துறையில் முதுகலை கல்வியை மேற்கொண்ட சமயம் ஒரு பதிவு பெற்ற நர்ஸாக பல மருத்துவமனைகளில் பகுதி நேரப் பணி புரிந்தார். கல்விக்கும் உணவு உடைக்கும்  உதவித் தொகை கிடைத்தது. ஆனாலும் மாலை வேளைகளில் ஜேனட் கடுமையாக உழைத்ததற்கு வேறு காரணம் இருந்தது.

பணத்தை சேமித்து ஒரு விமானம் வாங்க வேண்டும் என்பதுதான் அவர் திட்டம்  (அப்போதெல்லாம் குட்டி விமானங்களை தனியார் வாங்கலாம் என்பதுடன் விலையும் அதிகமில்லை). 500 டாலர்கள் சேர்ந்ததும் ஒரு விமானத்தை வாங்கினார்.  'அது அவ்வளவு சிறிய விமானம்.   ஏதோ செல்ல விலங்கிடம் பேசுவது போல நீங்கள் அதனுடன் பேசலாம். அதுவும் உங்களிடம் பேசுவது போல இருக்கும். அதுதான் என் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்தது' என்று ​பின்னர் குறிப்பிட்டார் அவர்.

பெண் என்பதால் இவருக்கு வேறு சில வாய்ப்புகள் மறுக்கப்பட்டன.  வணிக விமானங்களை ஓட்டும் உரிமை தேர்வில் இவர் வெற்றி பெற்ற பிறகும் இவருக்கான உரிமம் உடனடியாக வழங்கப்படவில்லை. இழுத்தடித்து பிறகுதான் கொடுத்தார்கள்

இரண்டாம் உலகப்போரின்போது விமான ஓட்டிகள் சேவையில் சேர கடுமையாக முயற்சித்தார் ஜேனட். ஆனால், அவர் கறுப்பு இனப் பெண்மணி என்பதால்  அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. ராணுவ மருத்துவ முகாமில் சேர முயற்சித்தார்.  'கறுப்பர்களுக்கான ஒதுக்கீடுகள் நிறைந்து விட்டன' என்று காரணம் காட்டி அதிலும் இவர் சேர்த்துக் கொள்ளப் படவில்லை.  மனம் ஒடிந்து போனார்.

போர் முடிந்த பிறகு கொஞ்சம் பெரிய விமானம் ஒன்றை வாங்கினார்.   பயிற்சிப் பள்ளியின் சார்பில்தான் அந்த விமானத்தை வாங்கினார் என்றாலும்,  தன் தனிப்பட்ட பங்காக அதற்கு 600 டாலர் அளித்தார்.

அவ்வப்போது அந்த விமானத்தை ஓட்டிப் பார்த்தார். அதில் அவருக்குப் பெரும் இன்பம் இருந்தது.

இவர் சாலஞ்சர் விமான ஓட்டிகள் கூட்டமைப்பு என்பதை உருவாக்கினார்.  இந்த அமைப்பு காஃபி ஸ்கூல் ஆஃப் ஏரோனாடிக்​ஸ் என்ற விமானப் பயிற்சிப் பள்ளியை உருவாக்கியது.  முழுவதும் ஆப்ரிக்க அமெரிக்கர்களால் மட்டுமே தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி கறுப்பர்களுக்கு மட்டுமே விமானம் ஓட்டப் பயிற்சி அளித்தது.

பின் சம்மர் ப்ராக் என்பவரை 1953ல் மணந்து கொண்டார். விமான ஓட்டியாக அவருக்குப் போதிய வாய்ப்புகள் கிடைக்காததால் வேறு பணியைத் தேடிக் கொள்ள வேண்டிய கட்டாயம் உண்டானது.

அவரும் அவரது கணவரும் சிகாகோவில் உள்ள இரண்டு சிறு மருத்துவ மனைகளை நிர்வகித்தனர்.  பின் 1972ல் அதிலிருந்து ஓய்வு பெற்று அரிசோனாவிலுள்ள டுக்ஸன் என்ற பகுதிக்குச் சென்று தங்கள் இறு​திக் காலத்தைக் கழித்தனர்.

'தடைகளை மீறி எழும்போது' (Soaring Above Setbacks) என்ற தலைப்பில் தன் சுயசரிதையை எழுதினார்.  ஆனால் அது வெளியாவதற்குள் அவர் இறந்துவிட்டார். அந்த ​நூல் 1990ல் வெளியானது.

வணிக விமானம் ஓட்டுவதற்கு உரிமம் பெற்ற முதல் கறுப்பினப் பெண்மணி இவர்தான் எனுமளவில் இவர் வரலாற்றில் இடம் பிடித்தார் ஜேனட்.

(தொடர்ந்து பறப்பார்கள்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com