பருப்பு போளியில் பாங்கான வாழ்க்கை!

பருப்பு போளியில் பாங்கான வாழ்க்கை!
Published on
-சேலம் சுபா 

 வியாழன்தோறும் சேலம் முல்லை நகர் பாபா கோவிலுக்குச் செல்பவர்கள் இவர்களைக் கவனித்திருக்கலாம். அப்படி கவனிக்கவில்லை எனினும் இவர்கள் சுடும் போளியின் நெய் மணத்தை நிச்சயம் இவர்களின் நாசிகள் சுவாசித்தே செல்ல வேண்டும்.

சாலையில் என்றாலும் மிகவும் சுகாதாரமாக நம் கண்ணெதிரே இவர்கள் செய்து தரும் போளி (ஒப்பிட்டு) வகைகளுக்கு உணவுப் பிரியர்களிடையே பெரும் வரவேற்பு. மிதமாக எரியும் ஒற்றை அடுப்பில் சதுர அளவில் கல் சட்டியை வைத்து பருப்பு தேங்காய் காய்கறிகள் காளான் போன்ற வகைகளில் நெய் மணம் மணக்க போளிகளை இட்டு கணவர் மனைவி மகன் என குடும்பமே பரபரவென்று இயங்கிக் கொண்டிருந்தனர். நம்மையும் மணம் இழுக்க அறிமுகம் செய்து அவர்கள் தந்த போளியை சுவைத்துக்கொண்டே அவர்களைப் பற்றி அளவளாவினோம் .

"என் பெயர் ஜெயசுதா. எனக்குப் பொறந்த ஊர் மேட்டூர். நாமக்கல் குமாரபாளையம்தான் கட்டித்தந்த ஊர். கணவர் சந்திர பிரபு. மகன் ஸ்ரீ கார்த்திக். எங்களுக்கு இரண்டு பெண்கள் தேன்மொழி நிவேதா. மூவருமே பட்டப்படிப்பு முடித்துள்ளனர். மகன் சிவில் முடித்துவிட்டு தகுந்த வேலைக்காக காத்திருக்கிறார். எனக்கு கல்யாணம் ஆகி 31 வருஷம் ஆகுது. என் பொறந்த வீடும் பெரிய குடும்பம். புகுந்த வீடும் பெரிய குடும்பம்.

என் மாமனார் நாராயணனும், மாமியார் சிவகாமியும்,  சூப்பரா சமைப்பாங்க. அதிலும் ஸ்வீட் ஸ்பெசலிஸ்ட். நாராயணன் ஜிலேபின்னா குமாரபாளையத்துல பேமஸ். வீட்டுலேயே எல்லா ஸ்வீட்டும் ஆர்டருக்கு செய்து தருவாங்க. மாமனார் வீட்டுல இவரோட சேர்த்து நாலு மகன்கள் நாலு பொண்ணுங்க. எல்லோருக்குமே சமையல்தான் வாழ்வாதாரம் தருது. வழி வழியா சமையல் திறமையும் வருது லட்டு, ஜிலேபி, மைசூர்பாகு, பாதுஷா இப்படி எல்லா ஸ்வீட்டும் செய்யத் தெரிஞ்சாலும் போளி எங்களோட குடும்பத் தொழில் போலவே இப்ப ஆயிற்று. ஒரு நாத்தனார்  கொழுந்தனார் திருச்சியில் போளிக் கடை போட்டுருக்காங்க. ஈரோட்டுல இரண்டு நாத்தானாருங்க போளிதான் போடறாங்க. சேலத்துல நாங்க.

நான் கல்யாணம் ஆகி வந்தப்ப என் வீட்டுக்காரர் லாட்டரி சீட்டுக் கடைதான் வெச்சுருந்தாரு. இவர்தான் வீட்டுக்கு மூத்த மகன். மூன்று வருஷத்துலயே லாட்டரி சீட்டுகளுக்குத் தடை வரவும் கடையை மூடவேண்டியதா போச்சு. அதுக்கப்புறம் வேற வேலை செய்யணுமே. இவருக்கும் அவர் அப்பா மாதிரி சமையல்னா அவ்வளவு இஷ்டம். சூப்பரா எல்லா ஸ்வீட்டும் செய்வாரு.

அதுல ஏதாவது ஒண்ணை மட்டும் போடலாமேன்னுதான் இந்த போளி வகைகளை போட ஆரம்பிச்சோம். பதினஞ்சு வருசமாச்சு போளி போடத்துவங்கி. குமாரபாளையத்துலதான் போட்டோம். இங்க சேலத்துல சாய்பாபா கோவில்கிட்ட வாங்க நல்லா சேல்ஸ் கிடைக்கும் என்று சொன்னார்கள். அதனால் மக்கள் அதிகமா வர வியாழக்கிழமை மட்டும் இங்க வந்து கடை போடுகிறோம்.

இங்க வந்து வாங்கி சாப்பிடறவங்க கட்டாயம் ரெகுலரா வாங்கிட்டுப் போறாங்க டேஸ்டும் சுகாதாரமும் நல்லா இருக்குன்னு நின்னு சொல்லிட்டுத் தான் போவாங்க. ருசியா இருந்தா மக்கள் பாராட்டு நிச்சயம் கிடைக்கும். கொஞ்ச நாளைக்கு முன்னாடி பேன்ட் சட்டையோட பதவிசா இருந்த ஒருத்தர் இரண்டு பேரோட எங்க கடைக்கு வந்து சாப்பிட்டாரு. நானும் வழக்கம்போல கஸ்டமர்தானேனு பேசிக்கிட்டே கவனிச்சேன். அவர் சாப்பிட்டுக் கிளம்பும்போதுதான் சொன்னாரு. சேலம் ஹெல்த் இன்ஸ்பெக்டராம் அவர். "டேஸ்ட்டும் ரொம்ப நல்லா இருக்கு. ரொம்ப சுத்தமாகவும் பண்றீங்க. பாராட்டுக்கள்மா"னு சொல்லிட்டுப் போனாரு.

இப்படி சொல்றவங்கதான் எங்களுக்கு எனர்ஜி தராங்க. இதோ இப்ப சில வருசங்களா கல்யாணம் போன்ற மற்ற விசேசங்களுக்கும் "நாகா கேட்டரிங்" கற பேருல ஆர்டர் எடுத்து சமையல் செய்து தருகிறோம். அஞ்சு பேரிலிருந்து அஞ்சாயிரம் பேர் வரை சீசனில் எங்களிடம் ஆர்டர் வருகிறது. எங்களிடம் அந்த சமயங்களில் பத்துப் பதினஞ்சு பேர் வேலை பார்ப்பாங்க.

அது மட்டுமில்லாம தனியா போளி மட்டும் வேண்டும் என்று கேட்பவர் களுக்கும் அவர்கள் இடத்திற்கே சென்று சுட சுட போட்டுத் தருவதுண்டு. எப்படி இவ்வளவு டேஸ்டா இருக்குன்னு எங்கிட்ட எல்லோரும் கேட்பாங்க. பெரிய ரகசியம் எல்லாம் இல்லை. விலை மலிவாத் தரணும்னு தரமில்லாத உணவுத் தந்தா யாரும் விரும்ப மாட்டார்கள். நாங்கள் சுத்தமான நெய்யை விட்டு செய்யறோம். அதற்குத் தகுந்த விலையை வைக்கிறோம். மக்கள் எவ்வளவு வேண்டுமானலும் தரத் தயாராக உள்ளனர். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பது ருசியும் சுகாதாரமும் கொண்ட உடல் நலத்திற்கு பாதிப்பைத் தராத உணவு வகைகளைத்தான். நாங்கள் எங்கள் மாமனார், மாமியாரிடமிருந்த கற்றுக் கொண்ட தொழில் ரகசியமும் அதான்.

ப்புறம் இன்னொன்னும் நான் சொல்லணும். எல்லா இடத்திலும் அன்பான மனிதர்கள் இருக்காங்க. ரோட்டுக் கடைகளுக்கு என்னிக்குமே பக்கத்துல இருக்கிற குடித்தனங்களோட சின்ன சின்ன பிரச்சினைகள் வர வாய்ப்புண்டு. ஆனால் எங்களுக்கு அப்படி எதுவும் இல்லை. டேபிள் சேர் அடுப்பு போன்ற எங்கள் பொருள்களை வைத்துக்கொள்ள தங்கள் வீட்டு முன் எங்களுக்காக இடம் ஒதுக்கித் தந்த வீட்டுப் பெரியவரையும் அந்த அம்மாவையும் நாங்கள் என்னிக்கும் மறக்க மாட்டோம். காலையில் ஒன்பது மணிக்கு பஸ்ஸில இங்க வந்து அவங்க வீட்டு முன்னாடி கடை போட்டா இரவு எட்டு மணியாயிடும் நாங்க திரும்ப. எங்களுக்கு உதவியா அவங்க இருக்கிறது எங்க பாக்கியம்தான்.

முக்கியமா இங்க ஒண்ணு சொல்லியாகணும். எந்தத் தொழில் என்றாலும் கணவன் மனைவிக்குள் ஒற்றுமையும் புரிதலும் இருந்தால் அது வெற்றிதான். எனக்கு என் கணவர் அமைந்தது கடவுளின் வரம்தான். சமையலை சலிக்காம விரும்பி செய்வாரு. அவர்தான் இதற்கு அடிப்படை. என் மேல் அவ்வளவு அன்பா இருப்பாரு."

கணவரின் பெருமைகளுடன் முடித்தார் ஜெயசுதா. அவரின் கணவரோ "அப்படியெல்லாம் இல்லைங்க. எனக்கு என்னோட மனைவிதான் பலமே… குடும்பம்னு வந்துட்டா நம்ம கடமைகளை கண்டிப்பா தவறாம செய்யணும். அதற்குத்தானே கடவுள் நமக்கு இந்தப் பிறப்பை தந்துள்ளான். கையில இருக்கிற எந்தத் திறமையானாலும் முயற்சியுடன் இறங்கினா சாலையோரத்திலும் ஜெயிக்கலாம்… சனங்களிடமும் பேர் வாங்கலாம்."

இருவரும் ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்காமல் அன்பை பொழிந்து அதே  அன்புடன் இட்டுத் தரும் போளியும் இனிமையாக இருப்பதை நாவில் இறங்கிய அதன் சுவையில் அறிந்து அவர்களுக்கு வாழ்த்துகளுடன் நன்றியும் சொன்னோம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com