புரகோலியை ஏன் புறக்கணித்தாள்?

புரகோலியை ஏன் புறக்கணித்தாள்?
Published on
நாடகம்.
– பத்மினி பட்டாபிராமன்
ஓவியம்: பிரபுராம்
காட்சி-1

இடம்:             கல்யாணியின் வீடு.

நேரம்:             காலை எட்டு மணி

கதாபாத்திரங்கள்: கல்யாணி, அவள் கணவர் செந்தில்நாதன

(கல்யாணியின் மொபைல் ஒலிக்கிறது.)

கல்யாணி: (ஃபோனில் உற்சாகமாக சந்தோஷமாகப் பேசுகிறாள்)

விஜியா சொல்லும்மா… ஆமா… ஆமா… கரெக்ட்… நாளைக்குத்தான்…

இடமா… தேவிஸ்ரீ ஹால்.. அங்கேதான் ஃபங்க் ஷனை வச்சிருக்காங்க.

ஆமாமா, பெண் சோலை பத்திரிகை நடத்தற போட்டிதான்.

தேவி மசாலா ஸ்பான்சர் பண்றாங்க…

அவங்களோட கேம்பஸ்லேயே பெரிய ஆடிட்டோரியம்… இருக்கில்லே அதிலேயே வச்சிருக்காக்ங்க.

……………………….

கல்யாணி: ஆமா…. பெரிய சமையல் போட்டிதான். இது .ஃபைனல் ரவுண்டாமே… முதல் பரிசு அம்பதாயிரமாம். நடிகர் சேகர் சேதுபதிதான் சீஃப் கெஸ்ட்டாம்…

கல்யாணி: என்னைத்தான் நடுவரா இருக்கச் சொல்லி கேட்டுருக்காங்க… அதையேன் கேட்கிறே போ…

கல்யாணி: ஆமா தேவி மசாலாஸ் ஸ்பான்ஸர் என்றால் சும்மாவா? ஆமாமா…  இல்லையா பின்னே… பெரிய கம்பெனியாச்சே…

கல்யாணி: நீ சொல்றது கரெக்ட் விஜி.. அந்த ப்ரைட் சேனல்லே நான் சமையல் புரோகிராம்லே கலந்துக்கிட்டேன் இல்லே… அப்ப பார்த்திருக்காங்க போல… தவிர பெண் சோலையிலேயும் நிறைய டிப்ஸ், சமையல் குறிப்பு எழுதுவேன் இல்லே…  அதான் போன வாரம் கூப்பிட்டாங்க… நான் வர முடியுமான்னு யோசிச்சேன்… நீங்கதான் மேடம் வரணும்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க..

கல்யாணி: ஆமா பெரிய பிரஸ்டீஜ்தான்… லைவ்வா அவங்க யூ ட்யூப்லே வெப்காஸ்ட் பண்றாங்க..ஆயிரக்கணக்கான பேர் பார்ப்பாங்க இல்லே… அதான் மறுக்க முடியலே..

கல்யாணி:: ரெமுனரேஷனா… அதெல்லாம் தெரியாதும்மா… என்னவோ தரட்டுமே…

கல்யாணி:: ஆமாமா நடுவரா கலந்துக்கறதே பெரிய விஷயம் ஆச்சே…  ஓ. கே.. தாங்க்ஸ்..

(ஃபோனை வைக்கிறாள். கல்யாணியின் கணவர் செந்தில்நாதன் வருகிறார்.)

செந்தில்நாதன்: காலையிலிருந்தே விடாமே எத்தனை ஃபோன் வந்தாச்சு கல்யாணி… எனக்கு ஆஃபீஸுக்கு டயமாகுது.. ப்ரைவேட் கம்பெனின்னா இஷ்டத்துக்குப் போக முடியாது..

கல்யாணி: ஸ்ஸ்ஸ்…  அப்பப்பப்பா.. ஆமாங்க.. ஃப்ரண்ட்ஸும் சொந்தக்காரங்களும் மாத்தி மாத்தி கூப்பிடறாங்க… சில பேருக்கு பொறாமை வேற… இதுல பாருங்க, உங்க தாம்பரம் அத்தை, நானும் வர்றேனுருக்காங்க… ஆடியன்ஸ்லே உக்காந்த்துக்கறாங்களாம். பாஸ் கேட்டிருக்காங்க…

செந்தில்நாதன்: பாஸ் கிடைச்சிதா?

கல்யாணி: எனக்கு அஞ்சு பாஸ் குடுத்திருக்காங்க இல்லே… நீங்கதான் ஆஃபீஸ்லே முக்கியமான மீட்டிங்னு வரலைன்னுட்டீங்க… என் ஃப்ரண்ட்ஸ் நாலு பேர் வராங்க…அத்தைக்கு இன்னொரு பாஸ்…

கொடுத்திடலாம். எல்லாம் சேகர்சேதுபதி வரதாலே இந்த கெடுபிடி.

செந்தில்நாதன்: இதுக்காகவே புதுசா பட்டுப் புடவை வாங்கினியே அதைத்தானே கட்டப் போறே.

கல்யாணி: பின்னே…? டெய்லரை விரட்டி, ப்ளவுஸும் தச்சாச்சே… இருங்க இன்னோரு கால் வருது…

(மொபைல் ஒலிக்க, உள்ளே செல்கிறாள்.)

காட்சி- 2

இடம்:             சமையல் இறுதிப் போட்டி நடக்கும் தேவி மசாலா கேம்பஸ்

நேரம் :            காலை ஒன்பதரை மணி

கதாபாத்திரங்கள்:  கல்யாணி, ரமா, மாலினி

(சமையல் போட்டி நிகழ்ச்சி நடத்தும் "பெண் சோலை"  பத்திரிகையின் ஆசிரியர் ரமா,  தேவி மசாலா நிறுவனத்தைச் சேர்ந்த மாலினி.)

கல்யாணி காரிலிருந்து ஆடிட்டோரியம் வாசலில் இறங்குகிறாள்.
(பின்னணியில் நாதஸ்வர இசை. உள்ளே பலர் பேசும் சத்தம்.)

ரமா: வாங்க மேடம்… வாங்க… வணக்கம்  நான் ரமா கோபால்… பெண் சோலை பத்திரிகையின் ஆசிரியை.

கல்யாணி: தெரியுமே…வணக்கம்மா..

ரமா: இவங்க டாக்டர் மாலினி. தேவி மசாலா எம்.டியோட பொண்ணு..

இருவரும் பரஸ்பரம் வணக்கம் சொன்ன பிறகு, கல்யாணி உள்ளே அழைத்துச் செல்லப்படுகிறாள்..

ரமா: வாங்க மேடம்…இது எம்.டி ரூம்… உக்காருங்க.. காஃபி, டீ, என்ன சாப்பிடறீங்க..?

கல்யாணி: சேகர் சேதுபதி சாரும் வந்த பிறகு சாப்பிடலாமே…

மாலினி: அவரு அப்புறமா ப்ரைஸ் டிஸ்ட்ரிபியூஷன்போது வருவாருங்க… இப்ப போட்டி நடக்கிறது வேற ஹால்லே ஃபைனல் ரவுண்டுக்கு எல்லா கன்டெஸ்டன்ட்டும் தயாரா இருக்காங்க.

நீங்க காஃபி சாப்பிட்ட பிறகு அங்கே போகலாம்.

கல்யாணி: எத்தனை பேரும்மா? எல்லாரும் சென்னைதானா?

ரமா: இல்லை மேடம். தமிழ்நாடு முழுக்க பல ரவுண்டு நடத்தி ஃபைனலா இந்த எட்டு பேரும் செலக்ட் ஆகியிருக்காங்க… திருச்சி, கோயம்புத்தூர், சேலம் எல்லா ஊர்லேருந்தும் வந்திருக்காங்க.

மொத்தம் எட்டு பேர்… இந்தாங்க லிஸ்ட்…

(கல்யாணி காஃபி அருந்திய பின், செருகியிருக்கும் பேப்பர்களுடன் ஒரு பேட் அவளிடம் தரப் படுகிறது.)

மாலினி: மேம், நீங்க மார்க் போடறதுக்காக இதிலே பத்து காலம் பிரிவு கொடுத்திருக்கோம்.

பிரசென்டேஷன், ருசி, கலர், புதுமையா பண்ணியிருக்காங்களா, எண்ணை குறைவா உபயோகிச்சு ருக்காங்களா, சத்துள்ள பொருட்களை பயன்படுத்திருக்காங்களா, கரெக்ட் இன்கிரிடியண்ட்ஸ், செய்யும் நேரம்  இப்படி… ஒவ்வொண்ணுத்துக்கும் பத்து மார்க்.. சரிங்களா..

கல்யாணி: ஓகே ஓகே..ஹாலுக்குப் போகலாமா (எழுந்திருக்கிறாள்)

ரமா: மேம் இன்னைக்கு முக்கியமான அடிப்படைப் பொருள், புரகோலி.

(கல்யாணி துள்ளாத குறையாய் திடுக்கிட்டு மறுபடியும் உட்கார்ந்து விடுகிறாள்.)

கல்யாணி: என்னது… புரகோலியா..

ரமா: ஆமா.. என்ன மேடம்… சரி, நான் ஆடிட்டோரியம் மேடைக்குப் போய் மற்ற விஷயங்களை கவனிக்கிறேன்… மாலினி மேடம் வந்து உங்களை போட்டி நடக்கிற ஹாலுக்குக் கூட்டிக்கிட்டுப் போவாங்க…

கல்யாணி: (தனக்குள் முணுமுணுக்கிறாள்) மூணு வருஷம் முன்னாடி… நடந்த கூத்தெல்லாம் திருப்பி நடக்கப் போகுதா அடக்கடவுளே.. இப்ப என்ன பண்ண..?

காட்சி – 3

(மூன்று வருடங்களுக்கு முன்பான ஃப்ளாஷ்பேக்)

இடம்:             கல்யாணியின் வீடு.

நேரம்:            மாலை ஆறு மணி

கதாபாத்திரங்கள்:   கல்யாணி, அவள் கணவர் செந்தில்நாதன்

மருத்துவமனையிலிருந்து செந்தில், கல்யாணி வீடு திரும்பியிருக்கிறார்கள்.

கல்யாணி முக்கி முனகியபடி சோஃபாவில் அமர்கிறாள்.

கல்யாணி: ஸ்ஸ்ஸ்..அம்மா.. ஆ.. அப்பா, இப்படி முதுகு, கால் எல்லாம் வலிக்கிறதே..கொஞ்சம் தண்ணி குடுங்க.. ஏங்க.. கையில இந்த அலர்ஜி அரிப்பு திரும்பி வராம இருக்கணுமேன்னு கவலையா இருக்கு.. அய்யோ..ஸ்ஸ்ஸ்.. அப்பா.. என்னா வீக்கம். செவப்பு..அரிப்பு.. சரியாகுமா சாமின்னு ஆயிடுச்சு..

செந்தில்நாதன்:  இனிமே வராதும்மா.. அதான் டாக்டர் மாத்திரை மருந்து எழுதிக் கொடுத்திருக்காரு இல்லே. ரெண்டு நாள் ஆஸ்பத்திரியிலே இருந்ததுலேயே அரிப்பு நின்னு போயிடுச்சு பாரு.. சரியாகிடும்.. ஒரு வாரம் ரெஸ்ட்லே இருந்தா போதும்னு டாக்டர் சொன்னாரில்லே..

கல்யாணி: நல்ல புரகோலி போங்க.. இப்படி அலர்ஜியை கிளப்பி விட்டுருச்சே.

இதுவரைக்கும் வாங்கினதே இல்லையே.. இப்ப மார்க்கெட்லே நிறைய வருதே.. வாங்கி சமைச்சுப் பார்க்கலாமேனுதான் வாங்கினேன்.. எவ்வளவு ஆசையா அன்னிக்கு புரகோலி மசாலா செஞ்சேன்….

ஊர்லேருந்து வந்திருந்த நம்ம பொண்ணுகூட… நல்லாருக்கும்மான்னு அதிசயமா பாராட்டிட்டா..

ஆனா எனக்குத்தான்.. என்ன வயத்து வலி, வாந்தி,.. சரியாகுமான்னு ஆகிடுச்சு…'

செந்தில்நாதன்: சரி.. இப்பதான் சரியாகிடுச்சு இல்லே… இனிமே புரகோலி வாங்க வேண்டாம்…போ…

காட்சி- 4

இடம்:             போட்டி நடக்கும் ஹால்

நேரம்:             காலை பத்து மணி

கதாபாத்திரங்கள்:   கல்யாணி, மாலினி

மாலினி: ஹலோ மேடம்.. டீப்பா என்னவோ யோசனையிலே ஆழ்ந்துட்டீங்க… வரீங்களா?

கல்யாணி: (மெதுவாக மாலினி காதருகே சென்று) மேடம், நீங்க ஒரு டாக்டர்னு சொன்னாங்களே. எனக்கு ஒரு பெரிய பிரச்னை இருக்கு. மூணு வருஷம் முன்னாடி புரகோலி சாப்பிட்டு அலர்ஜி வந்து ஆஸ்பத்திரியிலே ரெண்டு நாள் இருந்தேன். ஓரே வயித்து வலி. உடம்பெல்லாம் அரிப்பு..இனிமே புரகோலியே சாப்பிடக் கூடாதுன்னு இருக்கேன். இன்னைக்கு பாருங்க, அதுதான் முக்கிய இன்க்ரிடியன்ட் இப்ப என்ன பண்ண?

இருங்க, என் மொபைல்லேயே ரிப்போர்ட்லாம் பிடிஎஃப் ஃபார்மட்லே வச்சிருக்கேன் பாருங்க.

(தன் ஃபோனில் இருக்கும் ரிப்போர்ட்களைக் காட்டுகிறாள். மாலினி அவற்றை சற்று நேரம் ஆராய்ந்து பார்க்கிறாள்).

மாலினி: ஓஹோ… சரி .. கவலைப்படாதீங்க.. என்னோட எமர்ஜென்சி மெடிகல் கிட்லே அலர்ஜி வராம தடுக்கிற டேப்லேட் வச்சிருக்கேன்… தரேன்… அதைப் போட்டுக்குங்க.. தைரியமா போய் ஜட்ஜ்மென்ட் பண்ணுங்க.. உடனே ஒண்ணும் ஆகாது.

(தன் மெடிகல் கிட்டிலிருந்து மாத்திரை எடுக்கிறாள்.) இந்தாங்க மாத்திரை… தண்ணி வச்சிருக்கீங்களா? கல்யாணி மாத்திரை போட்டுக் கொள்ள, ரமா வருகிறாள்

ரமா: ஹாலுக்குப் போகலாமா மேடம்… டயமாயிடுச்சு எல்லாம் ரெடியா இருக்காங்க…

(கல்யாணி கவலையுடன் செல்கிறாள்.)

காட்சி – 5

இடம்:             பரிசளிப்பு நடக்கும் ஆடிட்டோரியம் வெளியே.

நேரம்:             மதியம் ஒரு மணி

கதாபாத்திரங்கள்:   செந்தில்நாதன், மாலினி

(பரபரப்புடன் நிற்கிறார் செந்தில்நாதன். ஆடிட்டோடிரியம்  கதவைத் திறந்து வெளியே  வருகிறாள் மாலினி. கதவு திறந்து மூடும் இடைவெளியில் மேடையில் யாரோ உரையாற்றும் சத்தம்)

மாலினி: யார் சார் நீங்க… நான்தான் டாக்டர் மாலினி என்னை அவசரமா பார்க்கணும்னு சொன்னீங்களாம் செக்யூரிடி வந்து சொன்னான். என்ன விஷயம்..? உள்ளே ஃபங்க் ஷன் நடக்குது..

செந்தில்நாதன்: தெரியும் டாக்டர்… நான் ஜட்ஜா வந்திருக்காங்களே கல்யாணி அவங்க ஹஸ்பண்ட். எனக்கு பத்து மணி வாக்குல ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தா.. நான் மீட்டிங்லே இருந்ததாலே அப்ப பார்க்கலே… இப்பதான் பார்த்தேன். அவளுக்கு புரகோலி சாப்பிட்டா, வாந்தி, அரிப்பு.. வயத்துல வலி.

மாலினி: (இடைமறித்து) இருங்க… இருங்க… ஒரு நிமிஷம்.. உள்ளே எட்டிப் பாருங்க..

கதவை லேசாகத் திறந்து செந்தில் எட்டிப் பார்க்கிறார். உள்ளே அத்தனை இருக்கைகளும் நிரம்பி  பலர் நின்று கொண்டிருக்கிறார்கள். மேடை நடுவில் நடிகர் சேகர் சேதுபதி அமர்ந்திருக்கிறார். அருகே பெண் சோலை பத்திரிகை, தேவி மசாலாவின் முக்கியஸ்தர்கள் அமர்ந்திருக்க, ஆறாவது நாற்காலியில் கல்யாணி உட்கார்ந்திருக்கிறாள். ஒரு பெண்மணி போடியத்தில் நின்று மைக்கில் பேசிக் கொண்டிருக்கிறார்.

மாலினி: பார்த்துட்டீங்க இல்லே… மேடையிலே உட்கார்ந்திருக்காங்களா உங்க ஒய்ஃப்.

இன்னைக்கு அவங்க என்னென்ன சாப்பிட்டுப்பார்த்திருக்காங்க தெரியுமா?. போட்டியாளர்கள் எட்டுப் பேரும் செஞ்சிருந்த பேக்ட் புரகோலி, புரகோலி சலாட், புரகோலி சூப், புரகோலி மஷ்ரூம் பாஸ்தா, மல்டிக்ரைன் புரகோலி பராத்தா, புரகோலி க்ரேப்ஸ்இன்னும் என்னென்னெவோ… போதுமா?

செந்தில்நாதன்: (விழிக்கிறார்)  அப்படியா? அவளுக்கு உடனே உடம்பெல்லாம் அரிப்பு வந்து…வயத்து வலி…

மாலினி: அதான் சொல்ல வரேன்… இப்ப பார்த்தீங்க இல்லே… அவங்களுக்கு ஒண்ணும் ஆகல்லே.

அவங்க ரிப்போர்ட் எல்லாம் பார்த்தேன்… அவங்களுக்கு ஒண்ணும் இல்லே… சில பழங்கள், காய்கள்லே சேலிசிலேட் அப்படீன்னு ஒரு வேதிப்பொருள் இருக்கும். சிலருக்கு அதனாலே மைல்டா அலர்ஜி வரலாம். முதல் முதலா புரகோலி பண்ணி சாப்பிட்டபோது அது ரொம்ப ரொம்ப மைல்டா அவங்களை பாதிச்சிருக்கு. மத்தபடி அன்னைக்கு வேற ஏதோ அவங்களுக்கு ஃபுட் பாய்சன் ஆகியிருக்கு. வெளியிலே ஏதாவது வாங்கி சாப்பிட்டிருப்பீங்க… அதுவும் ரொம்ப இல்லே… லேசாத்தான் பட், இரண்டும் சேர்ந்து அவங்களை பாதிச்சிருக்கு ரொம்ப பயந்துட்டாங்க… சைகலாஜிகலா புரகோலி சாப்பிட்டதாலேன்னு வந்திருச்சு. அது  சாப்பிட்டா அலர்ஜின்னு மைண்டை கண்டிஷன் பண்ணி வச்சிட்டாங்க… ப்யூர்லி சைக்கலாஜிகல்… அதை மாத்திடலாம்.  அப்புறமா அவங்ககிட்டே பேசறேன். புரகோலி, புரோட்டீன், விட்டமின்கள், மினரல்கள், கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, எல்லாமே இருக்கிற உடம்புல எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிற காய். பல பேர் இப்படி தேவையில்லாம பயந்துகிட்டு உடலுக்கு நன்மை தருகிற பல விஷயங்களை ஒதுக்கிடறாங்க..

செந்தில்நாதன்: ரொம்ப தாங்க்ஸ் டாக்டர்… நீங்க அலர்ஜி வராம இருக்க ஏதோ  மாத்திரை கொடுத்தீங்கன்னு மெசேஜ் பண்ணியிருந்தா..

மாலினி: (சிரித்து விட்டு) அது வெறும் பி காம்ப்ளெக்ஸ் மாத்திரைதான். அந்த நேரத்துக்கு அவங்களை தைரியப்படுத்த ஒரு நம்பிக்கைக்காகக் கொடுத்தேன். அவ்வளவுதான்… சரி நான் உள்ளே போறேன். நீங்களும் வாங்க…(செல்கிறார்கள்).

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com