வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!
Published on

-வே. இராமலக்ஷ்மி, திருநெல்வேலி

மணப்பாகு

மூலிகைச் சாற்றிலோ, மருந்துச் சரக்கின் குடிநீரிலோ, பழச் சாற்றிலோ தேவையான அளவு சர்க்கரை அல்லது கற்கண்டு சேர்த்துக் காய்ச்சி தேன்பதத்தில் இறக்கி, பதப்படுத்துவதே மணப்பாகு எனப்படும். பாகு இறக்கிய பின் மருந்துப் பொடியைக் கலந்து வைத்தாலும் உண்டு. மூன்று மாதம் வரை வன்மையுடன் செயற்படும்.

எலுமிச்சை மணப்பாகு

முதிர்ந்த எலுமிச்சம் பழச்சாற்றில் எடைக்கு 2 பங்கு வெள்ளைச் சர்க்கரை கலந்து காய்ச்சிப் பாகுபதத்தில் இறக்கி பாட்டிலில் பத்திரப்படுத்துக. இதில் 30 மி.லி.ஐ 100 மி.லி நீரில் கலந்து பருகி வந்தால் பித்த மயக்கம், குமட்டல், சுவையின்மை முதலிய பித்த நோய்கள் தீரும்.

இஞ்சி மணப்பாகு

200 கிராம் இஞ்சியை சிறு துண்டுகளாக்கி ஒன்றரை லிட்டர் வெந்நீரில் போட்டு 6 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி 1 கிலோ சீனி கலந்து பாகுபதத்தில் இறக்கி பதப்படுத்துக. இதில் 5 மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வர பசியின்மை, சுவையின்மை, பித்த மயக்கம், குமட்டல், வாந்தி ஆகியவை தீரும்.

திராட்சை மணப்பாகு

திராட்சைப் பழச்சாறு 1 லிட்டரில் அரை கிலோ சீனியும் 50 மி.லி பன்னீரும் கலந்து பாகுபதம் வரக் காய்ச்சி பாட்டிலில் பத்திரப்படுத்துக.  இதில் 30 மி.லி உடன் 60 மி.லி நீர் கலந்து பருகி வர பித்தச் சூடு, கை காலெரிச்சல் ஆகியவை தீரும்.

ரோசாப் பூ மணப்பாகு

200 கிராம் உலர்ந்த ரோசா இதழ்களை 800 மி.லி. வெந்நீரில் போட்டு
1 நாள் ஊற வைத்து வடிகட்டி 400 மி.லி ஆக வற்றக் காய்ச்சி 20 மி.லி. பன்னீரும் 400 கிராம் கற்கண்டும் கலந்து தேன் பதமாகக் காய்ச்சி இறக்கி ஆற வைத்துப் பாட்டிலில் பத்திரப்படுத்துக. 100 மி.லி. பாலில் 20 மி.லி நீர் கலந்து காலை, மாலை பருகி வர நீர்க்கட்டு, மலக்கட்டு, மூலச்சூடு ஆகியவை நீங்கி உடல் குளிர்ச்சி பெறும்.

நன்னாரி மணப்பாகு

ன்னாரி வேர் அரைக் கிலோவை இடித்து 3 லிட்டர் வெந்நீரில் போட்டு 1 நாள் ஊற வைத்து வடித்து ஒன்றரை லிட்டராக வற்றக் காய்ச்சி 1 கிலோ வெள்ளைச் சர்க்கரை கலந்து காய்ச்சிக் கம்பிப் பாகுபதத்தில் இறக்கி ஆற வைத்துப் பதப்படுத்துக. இதில் 20 மி.லி.ஐ 40 மி.லி. நாரில் கலந்து பருகி வர மேகக்காங்கை பிரேமகம், நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு, கண்ணெரிச்சல், நாவறட்சி, மருந்தீடு தாகம் ஆகியவை தீரும்.

நாவல் பழ மணப்பாகு

நாவல் பழச்சாறு 1 லிட்டரில் 1 கிலோ சீனாக் கற்கண்டு கலந்து தேன் பதமாகக் காய்ச்சி ஆற வைத்து அதில் 3 கிராம் குங்குமப்பூ 1 கிராம் பச்சைக் கற்பூரம் 100 மி.லி பன்னீரில் அரைத்து சேர்த்து பத்திரப்படுத்துக. இதில் 20 மி.லி.யுடன் 40 மி.லி நீர் கலந்து காலை, மாலை பருகி வர ரத்த மூலம், மிகுதாகம் முதலியவை தீரும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com