
எங்கண்ணே?
அண்ணே அண்ணே!
நாம ஓடி ஆடி
விளையாடிய
ஆற்றங்கரை எங்கண்ணே?
அம்பது பேருக்கு நிழல் தரும்
ஆலமரம்
அதில் பாட்டு கட்டிப் பாடும்
பறவை கூட்டம் எங்கண்ணே?
கரும்பு கொல்லையில
மடைய போட்டு
நெல்லு கொல்லையில
கதிர் அடிச்சு
அசதியா வரப்பு மேல உட்காந்து
வெங்காயம் கடிச்சு
கூழ் குடிச்ச
அந்த விளைநிலமெல்லாம் எங்கண்ணே?
விழிச்சிருந்த நேரத்துல
களவுபோன கோவணமா
காணாம போயிடுச்சே
நம்ம வயக்காட்டு கிராமம்
எங்கண்ணே?
***********************************************
ஏமாற்றம்
வருவதைப் போலில்லை
ஆனாலும்,
வந்துவிட்டது மழை!
வருவதைப் போலில்லை
ஆனாலும்,
வந்துவிட்டது புயல்!
வருவதாய்
சொல்லிவிட்டுச் சென்ற
நீ மட்டும்தான்
வரவேயில்லை
கடைசி வரையில்!
***********************************************
மிதியடி!
மனிதர்களை
தலையில் தூக்கி வைத்துக்
கொண்டு ஆடுகிறது
மிதியடி…
அதைத் தூக்கி
வாசலில் வீசிவிட்டுப்
போகிறார்கள்
மனிதர்கள்!
***********************************************
காரணம்
ஏழை என்பதால்
உனக்கும்
ஏளனமா?
எங்களிடம் வர மறுக்கிறாயே
பணமே!
***********************************************
நம்பிக்கை
யார் மீதும்
நம்பிக்கையில்லை…
தன் வீட்டை
தானே சுமக்கும் நத்தை!