விவாகரத்து செய்தியை குழந்தைகளிடம் எப்படி சொல்வது?

விவாகரத்து செய்தியை குழந்தைகளிடம் எப்படி சொல்வது?
Published on
தொகுப்பு: -ஜி.எஸ்.எஸ்.

விவாகரத்தின் மிக முக்கியமான, மிக சங்கடமான விளைவுகளில் ஒன்று அந்தத் தம்பதியின் குழந்தைகளின் மனம் பாதிக்கப்படுவது. விவாகரத்து செய்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அவை அனைத்துமே நியாயமானதாக கூட இருக்கலாம். ஆனால் இந்த செய்தியை தங்கள் குழந்தைகளிடம் எப்படி சொல்வது? இந்த விஷயத்தில் அவர்களை எப்படி கையாளுவது என்பது மெத்தப் படித்தவர்களுக்குக் கூட குழப்பங்களைத் தரக்கூடிய ஒன்று.

இது தொடர்பாக சில மதிப்புமிக்க ஆலோசனைகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் உளவியல் நிபுணர் டாக்டர் சரஸ் பாஸ்கர்.

விவாகரத்து என்று முடிவெடுக்கும் கணவன் – மனைவி தங்கள் திருமண பந்தத்தைதான் முடித்துக் கொள்கிறார்கள். பெற்றோர் என்ற பந்தத்தை அவர்கள் முடித்துக் கொள்வதில்லை. அந்தக் கணவனும் மனைவியும் 'சட்டபூர்வமாகத் தாங்கள் பிரிகிறோமே தவிர பெற்றோராகத் தங்கள் பொறுப்புகளை உதறவில்லை,' என்பதை உணர வேண்டும். அப்படி உதறவும் கூடாது.

விவாகரத்து முடிவை குழந்தையிடம் (ஐந்து வயதோ, பதினேழு வயதோ குழந்தை குழந்தைதானே) எப்படிக் கூறுவது என்று சில பெற்றோர் என்னிடம் ஆலோசனை கேட்பதுண்டு. நான் அவர்களுக்குக் கூறுவது இதுதான். 'நீங்கள் இருவருமாக ஒரே சமயத்தில் உங்கள் குழந்தையுடன் உட்கார்ந்து பேசுங்கள். நாங்கள் பிரிகிறோமே தவிர உன் மீது எங்களுக்கு உள்ள அன்பு மாறாது. உன்னைப் பொருத்தவரை எங்களுக்கு உள்ள பொறுப்புகள் ஒருபோதும் குறையாது என்பதை உணர்த்துங்கள்.'

உளவியல் நிபுணர் டாக்டர் சரஸ் பாஸ்கர்
உளவியல் நிபுணர் டாக்டர் சரஸ் பாஸ்கர்

சில பெற்றோர்கள் ஒரு பெரிய தவறை செய்வதுண்டு. 'நாங்கள் பிரிவதற்கு காரணமே உன் அப்பாதான் அல்லது அம்மாதான்,' என்று குழந்தையின் மனதில் தான் ஒரு அப்பாவி என்றும் மற்றவர் மாபெரும் குற்றவாளி என்பது போலவும் ஒரு பிம்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். இது பெரும் தவறு. எனக்கு தெரிந்து எல்லாத் திருமணங்களிலும் இருதரப்பிலும் தவறுகள் நிகழும் போதுதான் அது விவாகரத்தில் முடிகிறது. யாரிடம் அதிக தவறு இருக்கிறது என்பது வேண்டுமானால் மாறுபடலாம்.

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோர் ஒரே வீட்டில் இருக்கப் போவதில்லை. அப்படியிருக்க பெற்றோர்கள் என்ற முறையில் தங்கள் கடமையை எப்படி செய்யலாம்?

முதலில் எப்படி செய்யக்கூடாது என்பதை புரிந்து கொள்வோம். விவாகரத்துக்குப் பிறகு, இதற்கு முன் கொடுக்காத சலுகைகளையெல்லாம் சிலர் தங்கள் குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கலாம், எந்த உணவுப் பொருளையும் சாப்பிடலாம், மிகச் சுதந்திரமாக இருக்கலாம் என்பதுபோல. இந்த நிலையில் குழந்தை தனக்கு வசதியான பாதையைத் தேர்ந்தெடுக்கும். இருவரில் யார் அதிக சுதந்திரம் கொடுக்கிறார்களோ அவரிடம் அதிகம் தங்க விருப்பப்படும் (அது தவறானதாகவும், கொடுக்கக்கூடாததாகவும் இருக்கலாம்). சில பெற்றோர் இந்த தவறான சுதந்திரத்தை குழந்தைகளுக்கான வெகுமதியாக எண்ணிக் கொள்வார்கள். தாங்கள் விவாகரத்து செய்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியை சரி கட்டுவதற்காக குழந்தைக்கு அதிக செல்லம் கொடுப்பார்கள். இதெல்லாம் குழந்தையின் வருங்காலத்தை பாதிக்கும். நியாயமற்ற எதிர்பார்ப்புகளை அவர்களுக்கு அளிக்கக்கூடாது.

விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்வதில் இருந்து விவாகரத்து கிடைக்க சுமார் ஒரு வருடம் ஆகலாம். ஆகவே இது தொடர்பாக நன்கு திட்டமிட நேரம் இருக்கிறது. திங்கட்கிழமையில் இருந்து வியாழக்கிழமை வரை அம்மாவிடம், வெள்ளிக்கிழமையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வரை அப்பாவிடம் என்பதுபோல் குழந்தை யாரிடம் இருக்க வேண்டும் என்பதை பிரித்துக் கொள்ளலாம்.

பள்ளி தொடர்பாக யார் எந்த பொறுப்பு எடுத்துக் கொள்வது, குழந்தைக்கான செலவுகளை எப்படி பிரித்துக் கொள்வது, வார இறுதியில் எப்படி ஒருவர் மற்றொருவர் வீட்டுக்கு விஜயம் செய்வது என்பது போன்ற விஷயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள இந்த கால அவகாசம் நல்ல சந்தர்ப்பம்.

பெற்றோர் விவாகரத்து என்ற விஷயத்தை ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் சில சமயங்களில் வேறுபட்ட விதத்தில் அதை ஏற்றுக்கொள்கின்றனர். ஆண் குழந்தை உள்ளுக்குள்ளேயே காயப்படுவான். அதை கோபத்தின் மூலம் வெளிப்படுத்துவான். பெண் குழந்தைகள் அழுது புலம்புவதன்மூலம் தங்கள் நிலையை வெளிப்படுத்திக் கொள்வார்கள்.

குழந்தைகள் வேறு விதத்திலும் சங்கடங்களை அனுபவிக்க வாய்ப்பு உண்டு. அவர்கள் நண்பர்கள் ஏதாவது கேள்விகள் கேட்பார்கள். உறவினர்களும் பரிதாபத்தை வெளிப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு சங்கடமான கேள்விகளை கேட்பார்கள். 'உங்க அப்பா அம்மா தனித்தனியா இருக்காங்களா என்று என் சிநேகிதன் கேட்டால் நான் உண்மையைச் சொல்லலாமா கூடாதா?' என்று ஒரு சிறுமி கேட்டாள். 'என் அப்பா வெளிநாட்டில் இருப்பதாகச் சொல்லட்டுமா?' என்றும் கேட்டாள்.

என்னைப் பொருத்தவரை அவள் உண்மையைக் கூறி விடுவதே நல்லது. இல்லை என்றால், உண்மை தெரியவரும்போது மிகவும் அவமானமாக உணர்வார்கள். அதை எப்படிச் சொல்ல வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை.

சில பெற்றோர்கள் விவாகரத்துக்குப் பிறகு குழந்தையின் வாழ்க்கையை அவர்களையும் அறியாமல் நரகமாக்கிக் கொண்டிருப்பார்கள். பிரிந்துபோன ஜோடியைப் பற்றி குழந்தையிடம் மிகவும் தவறாகப் பேசுவார்கள். 'நீ அங்கே போனால் உன்னை அவ கவனிக்கவே மாட்டா. உங்கம்மா எப்பவும் போனே கதின்னு இருப்பா. அவளுக்கு ஊர் சுத்ததான் பிடிக்கும்' என்றோ 'நீ அவரிடம் போனால் வேளைக்கு சாப்பாடு கிடைக்காது.  சிஸ்டம் முன்னால்தான் உட்கார்ந்திருப்பார்' என்றோ கூறி குழந்தையின் மனதில் விஷ விதைகளை விதைக்க கூடாது. இப்படிச் செய்தால் காலப்போக்கில் அந்த குழந்தை இந்த சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும்.

சில சமயம் தங்கள் கணவர் அல்லது மனைவியிடம் இருக்கும் கோபத்தை குழந்தைகளின் நலனுக்கு எதிராக திருப்பி விட்டு விடுவார்கள். என்னிடம் 'குழந்தையை வந்து பார்க்கும் உரிமையை அவருக்கு ஏன் கொடுக்க வேண்டும்? டாக்டர், அவருக்குக் குழந்தையை பாதுகாக்கும் பொறுப்புணர்ச்சியும் மனநலமும் இல்லேன்னு நீங்க ஒரு சான்றிதழ் கொடுங்க' என்று வேண்டுகோள் விடுத்த பெண்மணியை கண்டிருக்கிறேன். சிலசமயம் இவர்களின் கோபத்தை போக்க அதிக செஷன்கள் கூட தேவைப்படும்.

விவாகரத்துக்கான சங்கடமான காரணங்களை குழந்தைகளுக்கு விளக்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பது அவசியமல்ல. பெரிய குழந்தைகள் என்றால் அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். வயது குறைந்த குழந்தை என்றால் போகப் போக தெரிந்து கொள்ளும். விவாகரத்துக்கான காரணங்கள் அந்தரங்கமானவை..

ப்போதுமே ஒரு 'கூடு கலைந்தால்' அதாவது ஒரு 'குடும்பம் பிரிந்தால்' அது மன வருத்தத்தையும் வருங்காலக் கவலைகளையும் அதிகமாகவே விதைக்கும். அதே சமயத்தில் ஒரு குடும்பம் என்பதில் இணைப்பு, புரிதல், ஒருவருக்கொருவர் மரியாதை, தவறுகளை மன்னித்தல் போன்றவை அவசியம் இருக்க வேண்டும். திருமண வாழ்வில் இவையெல்லாம் இல்லை என்றால் அது திருமண பந்தத்தை நீர்த்துப் போக வைக்கிறது. அதன் அதிகபட்ச விளைவான விவாகரத்து என்பதன் தீவிர விளைவுகளை முடிந்தவரை குழந்தைகளின் மீது படரவிடாமல் இருக்க மேலே குறிப்பிட்ட ஆலோசனைகள் உதவும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com