
இராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு முறை கங்கை கரையில் தியானத்தில் அமர்ந்திருந்தார். தியானம் முடிந்து கண் திறந்தபோது ஒருவர் நீர் மேல் நடந்து வருவதைக் கண்டார். இதைப் பார்த்து அவர் சிரிக்கலானார்.
அம்மனிதர் இராமகிருஷ்ணர் அருகே வந்து, "இந்தக் கடினமான வித்தையை நான் பத்து ஆண்டுகளாக முயன்று கற்றுத் தேர்ந்துள்ளேன். இதைக் கண்டு நீங்கள் ஏனோ சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
"இல்லை, நீர் கற்ற வித்தை காலணாவுக்குத்தான் பயன்படும்," என்று பதில் கூறினார் இராமகிருஷ்ணர்.
"அதென்ன அப்படிச் சொல்கிறீர்கள்," என்று மீண்டும் கேட்டார் அம்மனிதர்.
"காலணா கொடுத்தால்தான் படகில் கரையைக் கடந்து விடலாமே?" என்று பதிலளித்தார் இராமகிருஷ்ணர்.
சராசரி மனிதர்களான நமக்கு ஆர்வம் இருக்கும் விஷயங்கள், நம்முடைய எதிர்பார்ப்புகள், எல்லாமே நான், எனது, என்ற சிறிய வட்டதினுள்ளேயே சூழல்கிறது. அதைத் தாண்டி நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல ஒரு குருவின் பார்வை நமக்கு நிச்சயம் தேவை படுகிறது என்பதை இக்கதை அழகாக உணர்த்துகிறது.
– ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் 'மாயா ஏஞ்சலோ' நினைவாக அவரது உருவம் பொறித்த நாணயத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
கறுப்பினத்தைச் சேர்ந்த இவர் கவிஞர், கலைஞர், சமூக ஆர்வலர் மற்றும் ஆசிரியர் என பன்முகங்களைக் கொண்டவர்.
அங்கு சம உரிமைக்காக நடத்தப்பட்ட ' அமெரிக்கன் சிவில் ரைட்ஸ்' இயக்கத்தில் மார்டின் லூதர் கிங் மற்றும் மால்கம் போன்ற தலைவர்களுடன சேர்ந்து உரிமை போராட்டம் நடத்தினவர் மேரி. அமெரிக்காவில் கறுப்பின பெண் ஒருவரின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.
– ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி