சந்திராவின் ‘கள்ளன்’

சந்திராவின் ‘கள்ளன்’
Published on

-ராகவ் குமார்  

ன்றைய தமிழ் சினிமாவில் பல பெண் இயக்குனர்கள் சாதனை புரிந்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் சினிமா பின்புலமும், பொருளாதாரரீதியாக பலமும் பெற்றவர்கள். ஆனால் முதல் முறையாக இது போன்று எந்த பின்னணியும் இல்லாமல், போராடி இயக்குனராகி இருக்கிறார் சந்திரா தங்கராஜ். இவர் தற்சமயம் 'கள்ளன்' என்ற படத்தை இயக்கி உள்ளார். இவர் ஒரு சிறுகதை எழுத்தாளரும் கூட. சந்திராவின் கணவர் வி. கே. சுந்தர் தமிழ் சினிமாவில் மக்கள் தொடர்பாளராக இருக்கிறார்.

இனி சந்திராவுடன்...

பத்திரிகை எழுத்து இப்போது சினிமா. இந்த பயணம் எப்படி இருக்கிறது? 

மிகுந்த போராட்டமாகத்தான் இருக்கிறது. என் சொந்த ஊர் தேனி மாவட்டத்தின் கூடலூர். மலைகளும், இயற்கை எழிலும், கூப்பிடும் தூரத்தில் கேரளாவும், அமைந்த நகரம். இந்த ஊரின் அமைப்பே ஒரு படைப்பாளியை உருவாக்கும் தன்மை கொண்டது. நான் பன்னிரெண்டாவது வரை படித்து இருக்கிறேன். பள்ளிப் படிப்பு மட்டுமே படித்து இருந்தாலும் என் அப்பா தங்கராஜ் பல்வேறு ரஷ்ய மொழி இலக்கியங்களை அறிமுகம் செய்தார். எனது அப்பா  கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் கிடைக்க போராடியவர். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது சோவியத் ரஷ்யா என்ற புத்தகம் படிக்க ஆரம்பித்தேன். சில வருடங்கள் கழித்து அலெக்சாண்டர் புஷ்கின் எழுதிய  நாவல்களை படிக்க ஆரம்பித்தேன். திருமணதிற்கு பின்பு எனது கணவர் சுந்தரும் பத்திரிகையாளராக இருந்ததால் என்னை ஊக்கப்படுத்தினார். ஆறாம் திணை என்ற இலக்கிய பத்திரிகையில் எழுத ஆரம்பித்தேன், பின்பு வெகுஜன பத்திரிகைகளிலும் எழுத ஆரம்பித்தேன்.

எழுத்து துறையில் இருந்து சினிமாவுக்கு நுழைவது சுலபமாக இருந்ததா? 

டினமாகத்தான் இருந்தது. அமீர், மற்றும் ராமிடம் உதவியாளராக பணிபுரிந்தேன். ஒரு ஆண் அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்து வெற்றி பெறுவதே கடினம், ஒரு பெண் என்றால் போராட்டங்கள் அதிகம். ஒரு பெண் தங்கள் இடத்திற்கு வந்தால் ஆண்கள் முதலில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ஏற்றுக் கொள்வார்கள். 'கள்ளன்' கதையை ஐந்து வருடங்களாக பல தயாரிப்பாளர்களிடம் சொன்னேன். பலரை அணுகினேன். நீண்ட போராட்டத்திற்குப் பிறகுதான் தயாரிப்பாளரும் ஹீரோவும் கிடைத்தார்கள்.

'கள்ளன்' படத்தை பற்றி சொல்லுங்க

ள்ளன் என்றால் திருடன் என்று அர்த்தம். திருடன் என்று பெயர் வைக்க முடியாது என்பதால் 'கள்ளன்' என்று தலைப்பு வைத்தேன். கிராம பின்னணியில் நடக்கும் கிரைம் ஆக்ஷன் படம். நமது கலாசாரம் பற்றியும் இப்படம் பேசுகிறது.

ஒரு பெண் இயக்குனராக இருந்து கொண்டு ஆக்‌ஷன் படம் இயக்குவதா? 

ன்ன சார் இப்படி கேட்டுட்டீங்க! ஏன் இயக்கக் கூடாதா? பெண் டைரக்டர் என்றால் காதல் காமெடி கதைகள்தான் எடுக்க வேண்டும் என்று கட்டாயமா? அந்த பிம்பத்தை உடைக்க நினைத்தேன். அதில் வெற்றி பெற்றுவிட்டேன்! மார்ட்டின் கர்ச்சின், டொரண்டினோ, ஹைரிச்சி போன்ற டைரக்டர்கள் நிழல் உலக சம்பவங்களை படமாக்குவார்கள். இவர்கள்தான் என் இன்ஸ்பிரேஷன்.

'கள்ளன்' பட ஹீரோ கரு. பழனியப்பன் ஏன் படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொள்ளவில்லை? 

நிர்வாகக் கோளாறு காரணமாக எனக்கும், பழனியப்பனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது உண்மை. எங்கேதான் கருத்து வேறுபாடு இல்லை? பழனியப்பன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது வருந்தத்தக்கச் செயல். ஒரு பெண் டைரக்டரின் சாதனை என்ற வகையில் எனக்கு அவர்  சப்போர்ட் செய்திருக்க வேண்டும்.

எழுத்துத் துறையில் சமீபத்திய சாதனை? 

மிளகு என்ற கவிதை தொகுப்பு நூலை வெளியிட்டேன். இதற்கு தேவதேவன் விருது கிடைத்தது. என் எழுத்துக்களில் பெண்னின் போராட்ட வாழ்க்கை இருக்கும். நிலம், நிலம் சார்ந்த வாழ்க்கை இருக்கும்.

குடும்பம்?

னக்கு அபிநவ் என்ற மகனும் பொளஷ்ஷியா என்ற மகளும் இருக்கிறார்கள். இவர்கள் ஆங்கிலத்தில் எழுதுவதில் ஆர்வமாக இருக்கிறார்கள். என் பிள்ளைகளும் எழுதுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com