
இல்லத்திலும் அலுவலகத்திலும் தேசியக் கொடி ஏற்றினீர்களா மேடம்?
– எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி
அமுதப் பெருவிழாவாச்சே! ஆட்டோ அண்ணாச்சி முதல் அமெரிக்க நயாகரா வரை, மூவர்ணம் பட்டொளி வீசிப் பறக்கும்போது, நான் ஏற்றாமல் இருப்பேனா ஹெச் எம் மேடம்? பூங்காக்கள், கடைகள், ஏன் சாதாரண குடிசைவாசிகளில்கூட தேசியக் கொடிகளைக் கண்டபோது, மனசுக்குள்ள ஏதோ ஒரு பெருமை நிச்சயம் வருது! இத்தனைப் பேர் இவ்வளவு ஆர்வம் காட்டி பங்குகொண்டது நிஜமாகவே ஆச்சரியம்தான்! 'தேசபக்தி'யைக் கூட யாராவது தூண்டுகோலாக இருந்து, தூண்டி விட வேண்டியிருக்கே! என்ற வருத்தமான எண்ணம் ஓடினாலும், தாய்மண்ணின் மீது அனைவருக்கும் சொல்லவொண்ணா மதிப்பும் கெளரவமும் இருப்பது மகிழ்ச்சியே!
*****************
மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்குவதற்குத் தடையாமே?
-வாணி வெங்கடேஷ், சென்னை
வெச்சா குடுமி, சிரைச்சா மொட்டையா? கைவிரல் ஒடியும் அளவுக்கு குழந்தைகளை பள்ளியிலும் எழுதச் செய்துவிட்டு, ஹோம்வர்க்கும் கொடுப்பதைத்தான் குறைக்க வேண்டுமே தவிர… ஒரேயடியாக அல்ல! குழந்தைகளுக்கு எண் + எழுத்து இரண்டிலும் பயிற்சி முக்கியம்! பல பள்ளிகளில் 'ப்ராஜெக்ட்' என்ற பெயரில் என்னென்னவோ அஸைன்மென்ட் கொடுக்கிறார்கள்.
பாவம்! பெற்றோர்கள்தான்
ஃபேன்ஸி ஸ்டோர்களுக்கு
அலைந்துத்திரிந்து 'பணி'யை சரியாகச்
செய்யாமல் பிள்ளைகளிடமும் ஆசிரியர்களிடமும் திட்டு
வாங்குகிறார்கள்.
அதை நிறுத்தலாம் மொதல்ல!
*****************
பிரபல இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன் ஜுன் வாலா மறைந்துவிட்டாரே!
-என். கோமதி, நெல்லை
1985! நானெல்லாம் காலேஜ் கேன்டீன்ல மசாலா டீ குடிச்சுட்டு, 'முரட்டுக்காளை' படம் பார்க்க க்யூவில் நின்னபோது, இந்த ஜுன் ஜுன் வாலா, அந்த வயசுல 'டாடா டீ' பங்குகளை வாங்கி, லட்சாதிபதி ஆனதோட, பிறகு, மும்பைப் பங்குச்சந்தையின் பெரியகாளை (Big Bull) ஆயிட்டாரு! சும்மா 5,000 ரூபாய்க்கு ஆரம்பிச்சாரு… சாகும்போது அவருடைய சொத்து மதிப்பு 46,000 கோடியாம்! அம்மாடியோவ்!
இந்தப் பொருளாதாரப் புலி தொட்டதெல்லாம் பொன் ஆனது! அதனால ஜுன் ஜுன் என்ன ஷேர் வாங்குறார்னு மத்தவங்க உன்னிப்பா பார்த்துக்கிட்டு இருப்பாங்க! ஆரோக்கியம் விஷயத்துல அய்யா கொஞ்சம் "அடகிடக்கு… பாத்துக்கலாம்"னு இருந்துட்டாரு போல. பத்து வருஷமா வீல்சேர் வாழ்க்கைதான்! ஜாலி ஆசாமி, சினிமா காதலர்… 'இங்கிலிஷ் விங்கிலிஷ்', 'ஷமிதாப்'- படமெல்லாம் இவர் தயாரிச்சதுதான். நிறைய தரும காரியங்களையும் செய்து வந்த பரோபகாரி!
மும்பையில், 70 ஆயிரம் சதுர அடியில் 13 அடுக்கு சொகுசு மாளிகையை ஆசையாகக் கட்டிக்கொண்டிருந்தார். அதில் குடியேறுவதற்கு முன் காலமாகிவிட்டார். சமீபத்துலதான் 'ஆகாசா ஏர்' என்ற விமான நிறுவனத்தைத் தொடங்கினார். அதற்குள் ஆகாசம் ஏறிவிட்டார்.
இது அவருடைய பொன்மொழி:- 'Nobody can predict weather, death, Market and women!' சொன்ன வாய்க்கு சர்க்கரை போட முடியவில்லை. ஸாரி மிஸ்டர் ராக்கேஷ் ஜுன் ஜுன் வாலா!
*****************
ஒரு ஜோக் ப்ளீஸ்…
-மஞ்சு வாசுதேவன், பெங்களூரு
மாமியார்: நல்லா பாத்துக்கம்மா… இதுதான் கிச்சன்.
மருமகள்: ஒ.கே. ஆன்ட்டி… இதுல நான் எங்க நின்னு செல்ஃபி எடுக்கணும்?