
அழகாபுரி கிராமத்தில் வசித்தார் பாகவதர் ஒருவர். கிருஷ்ணர் மீது பக்தி பாடல்கள் பாடுவதில் வல்லவர். தனக்கு வந்த புகழால், கர்வம் ஏற்பட்டது. வருமானம் பெருகவே தலைகால் புரியாமல் ஆடினார். அவருக்கு கடவுள் புத்தியைப் புகட்டும் காலம் நெருங்கியது.
ஒருமுறை நெசவாளர் தெருவில் பாகவதர் நடந்துக்கொண்டிருந்தார். ஒரு பெண் பக்தி பாடல் பாடியபடியே சேலை நெய்தபடி இருந்தாள். ஆஹா… இந்த ஊரில் நம்மை மிஞ்ச ஒருத்தி இருக்கிறாளே? இவள் பாடும் விஷயம் மன்னருக்குத் தெரிந்தால் அரசவையில் பாடகி ஆக்கிவிடுவாரே எனப் பயந்தார். அவளது வீட்டுக்குள் நுழைந்தார். ஆங்காங்கே நூல்கள் சிதறிக் கிடந்தன. "ஏனம்மா! இங்கு குப்பையாக கிடக்கிறதே… பாடினால் மட்டும் போதாது. வீடும் சுத்தமாக இருக்க வேண்டும். கண்ணன் சுத்தமான இடங்களில்தான் இருக்க விரும்புவார். இல்லாவிட்டால் பாடுவதை நிறுத்து" என்றார்.
"அட, நீங்க வேற பாகவதரே! இந்த நிலைமைக்குக் காரணமே கண்ணன்தான்! நான் எத்தனை முறைதான் சுத்தம் செய்வது? அலுப்பு தெரியாமல் இருக்க பாடிக்கொண்டே தறி நெய்வேன். அப்போது சின்னக் கண்ணன் வீட்டுக்குள் வருவான். நூலிழைகளை அறுத்து, காற்றில் பறக்க விடுவான். நான் மீண்டும் இழைகளை இணைத்து நெய்வேன். மீண்டும் அறுத்து எறிவான். அவனது குறும்புகளைத் தாங்க முடியலை" என்றாள்.
பாகவதரால் நம்ப முடியவில்லை.
"என்னம்மா கதை அளக்கிறாய்? கண்ணன் வருகிறானா? நூல்களை அறுத்தெறிகிறானா? அதுவும் உன் பாட்டைக் கேட்க ஆசைப்பட்டு? காலம் காலமாக நானும்தான் பாடுகிறேன். அரசவை பாகவதராக உள்ளேன். என் பாட்டுக்கு வராத கண்ணன், உன்னை தேடி வருகிறான் என்கிறாயே… எப்படி நம்பவே முடியவில்லையே. ஏன் இப்படி பொய் சொல்கிறாய்?"" என்றார்.
"பாகவதரே! பொய் சொல்ல வேண்டும் என ஆசையா என்ன? வேண்டமானால் ஊர் மக்களை அழைப்போம். கண்ணன் இங்கு வந்து நூல்களை அறுத்தெறிவதை அவர்களே நேரில் பார்க்கட்டும்" என்றாள் அவள்.
ஊரார் முன்னிலையில் அவளும் பாடினாள். நூலிழைகள் பறந்தன. வீடே குப்பையானது. அனைவரும் ஆச்சரியப்பட்டனர். எங்கள் கண்ணுக்குக் கண்ணன் தெரியவில்லை. ஆனால், நூலிழைகள் பறக்கிறதே. வீடே குப்பையாகிறது. எல்லாம் அதிசயமாகத்தானிருக்கிறது" என்றனர்.
அப்போது மழலைக்குரல் அசரீரியாக வானில் ஒலித்தது.
"கண்ணன் பேசுகிறேன். இவளின் இனியக் குரலுக்கு ரசிகன் நான். சவால் விட்டாரே பாகவதர்! அவர் பணத்துக்காகவும், புகழுக்காகவும் பாடுகிறார். இவளோ பக்தியுடன் பாடுபவள். இனி அரசவை பாடகியாக இவளே இருப்பாள். இவளின் கண்களுக்கு மட்டுமே தெரிவேன். பக்தையான இவளைச் சோதிக்க முயன்ற உங்களுக்குத் தெரியமாட்டேன்."
இதைக் கேட்டதும் மன்னர் முடிவுக்கு வந்தவராக அந்தப் பெண்ணை அரசவை பாடகியாக்கினார்.
'உன்னைக் காணாத கண்ணும் கண் அல்ல கண்ணா' என அழுது வேண்டினாள். அதன் பயனாக பகவான் கண்ணனின் தரிசனம் அனைவருக்கும் கிடைத்தது.
**************
கங்கை நதிக்கரை காசியில் பரதன் என்ற துறவி வாழ்ந்து வந்தார். பகவத் கீதையின் நான்காவது அத்தியாயத்தை அவர் எப்போதும் பாராயணம் செய்துகொண்டே இருப்பார். பல ஊர் ஆலயங்கள் சென்று வந்த அவருக்கு களைப்பு ஏற்படவே சற்று ஓய்வெடுக்க, அங்கிருந்த இரண்டு இலந்தை மரங்களின் வேரில் ஒன்றில் தலையையும் மற்றொன்றில் காலையும் வைத்துப் படுத்துக்கொண்டே பகவத் கீதையின் நான்காவது அத்தியாயத்தைப் பாராயணம் செய்துகொண்டே உறங்கினார். பிறகு கண் விழித்து எழுந்து சென்றுவிட்டார்.
ஒருமுறை வேறொரு நகருக்கு சென்றவரிடம் இரண்டு பெண்கள் அவரது பாதங்களில் விழுந்து வணங்கினர். நீங்கள் யார் எனக் கேட்டார். நாங்கள் சில வருடங்களுக்கு முன் இலந்தை மரங்களாக இருந்தோம். எங்கள் ஊரில் வேரில் நீங்கள் படுத்து உறங்கும்போது தலையும் பாதமும் பட்டதால் சாப விமோசனம் பெற்று ஒரு பணக்காரர் வீட்டில் பெண்களாகப் பிறந்து வளர்ந்து வருகிறோம் என்று கூறினர். நீங்கள் ஏன் இலந்தை மரமானீர்கள்? எனக் கேட்டார்.
கோதாவரி நதிக்கரையில் விச்சின்ன பாவம் என்ற புண்ணிய தீர்த்தம் இருக்கிறது. அதன் கரையி்ல சத்ய தபஸ்யர் என்ற ஒரு மகான் தவம் செய்தார். அவரது தபத்தைக் கலைக்க நினைத்த இந்திரன் எங்களை அனுப்பி தவத்தைக் கலைக்கச் செய்தார். அப்படி செய்கையில் கண் விழித்த முனிவர் நீங்கள் இருவரும் கங்கை நதிக்கரையில் இலந்தை மரங்களாக இருங்கள்" என்று சபித்தார். பயந்துபோன நாங்கள் இந்திரனின் அடிமைகள். அவன் சொன்னதைச் செய்யக் கடமைப்பட்டவர்கள். எனவே எங்களை மன்னித்து சாப விமோசனம் கேட்டோம்.
அதற்கு அவர் பரதன் என்ற மகான் ஒருவர் வந்து இலந்தை மரங்களாக இருக்கும் உங்கள் நிழலில் படுத்து, பகவத்கீதையின் நான்காவது அத்தியாயத்தைப் பாராயணம் செய்துகொண்டே இளைப்பாரி விட்டுப் போவார். அதைக் கேட்ட நீங்கள் இருவரும் சில நாட்களில் சாபவிமோசனம் பெற்று நகரத்தில் உள்ள ஒரு பணக்காரர் வீட்டில் பெண்ணாகப் பிறப்பீர்கள். அதன்படி தங்களைத் தரிசித்து விட்டோம். எங்களை ஆசீர்வதியுங்கள்" என்று கூறி வணங்கினர். பெண்களுக்கு ஆசி வழங்கிய பரதர், "கீதையின் நான்காவது அத்தியாயத்துக்கு இவ்வளவு பெருமையா என்று எண்ணி ஆச்சரியப்பட்டார். அன்று முதல் பகவத்கீதையின் பெருமையை அவரே மக்களுக்கு எடுத்துரைக்கத் தொடங்கினார்.
**************
தேவை: பச்சரிசி – 500 கிராம், உளுத்தம் பருப்பு – 200 கிராம், வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், தேங்காய் துருவல் – 1 கப், பெருங்காய பொடி – 1 டேபிள் ஸ்பூன், பயிற்றம் பருப்பு – 4 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், பொட்டுக்கடலை – 2 ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையானது.
செய்முறை: அரிசியை ஊறவைத்து, களைந்து, நிழலில் உலர்த்தி மாவாக திரித்து உலர்த்தி, காயவைத்து, அடுப்பில் வாணலியைப் போட்டு காய்ந்ததும் மாவை வறுக்க வேண்டும். இந்த மாவு உளுத்தம் பருப்பை மாவாக்கி, அதையும், பெருங்காயம், உப்பு சேர்த்து கரைத்த நீர், தேங்காய் துருவல், வெண்ணெய், சீரகம், பொட்டுக்கடலை போட்டு நன்றாக பிசைய வேண்டும். சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்நததும் சீடைகளை போட்டு வெந்தெடுக்க வேண்டும்.
தேவை: வரகரசி – 400 கிராம், உளுந்து – 50 கிராம், பாசிப் பருப்பு – 50 கிராம், கடலைப் பரப்பு – 50 கிராம், வெண்ணெய் – 1 கரண்டி, ஓமம் – 1 ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையானவை.
செய்முறை: வரகரசி, உளுந்து, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு இவற்றை வறுத்து, மிஷினில் மாவாக்கி வெண்ணெய், உப்பு, ஓமம் போட்டு பிசறி பின் தேவையான தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து முறுக்குஉழக்கில் போட்டு முள்ளுஅச்சை போட்டு ஒரு துணியின் சிறிது சிறிதாக பிழிய வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து அந்த எண்ணெய் காய்ந்ததும் முள்ளு தேன்குழலைப் போட்டு வெந்து எடுக்க வேண்டும்.
தேவை: அரிசி மாவு – 200 கிராம், வேர்க்கடலைப் பருப்பு – 100 கிராம், உளுத்தம் மாவு – 1 மேஜைக்கரண்டு, எள் – 1 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் – 1 தேக்கரண்டி, மிளகாய்த்தூள் – இரண்டு மேஜைக்கரண்டி, உப்பு, எண்ணெய் – தேவையானது.
செய்முறை: வேர்க்கடலையை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு தண்ணீர் சிறிது விட்டு, வேர்க்கடலைப் பருப்பை மிக்சியில் கெட்டியாக அரைக்க வேண்டும். அத்துடன் அரிசி மாவு, உளுத்தம் மாவு, எள், பெருக்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து கொஞ்சமாக எடுத்து வெண்ணெய்த் தாளில் முறுக்குகளாகப் பிழிய வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கரண்டியால் முறுக்கை எடுத்து, எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.