
– வெங்கடராமன் ராமசுப்ரமணியன்
நினைப்பிற்கும் நடப்பிற்கும் இடையே உள்ள வித்தியாசம் கவலையாக மலர்கிறது என்று வேதாத்திரி மகரிஷி கூறுகிறார். psychosomatic அதாவது மனதிற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பின் காரணமாக, மனதில் கவலை இருந்தால், அது உடம்பின் நோயாகவும் மாறுகிறது. இதனால், நரம்புத் தளர்ச்சி, இரத்த அழுத்தம், நாளமிலா சுரப்பிகள் குறைபாடு, இதய நோய் என்று பல்வேறு பிரச்னைகள் உருவாகலாம். கவலைப்படுவதை எவ்வாறு நிறுத்தி, வாழ்க்கையை வாழத் தொடங்குவது (How to stop worrying and start living) என்ற கவலை ஒழித்தல் புத்தகத்தில் கவலைகளை எவ்வாறு வெற்றிகொள்வது என்பதற்குப் பல்வேறு வழிமுறைகளை டேல் கார்னகி அவர்கள் பகிர்ந்துக் கொள்கிறார். அவற்றிலிருந்து சிலவற்றைப் பார்ப்போம்.
உதாரணமாக, அலுவலகத்தில் ஆட்குறைப்பு என்ற கவலை இருந்தால், படுமோசமான விளைவான வேலை இழப்புக்கு மனதளவில் தயாராகி விடுங்கள். வேலை இழப்பு நிகழ்ந்தால், குடும்பத்தைச் சமாளிக்க, பணம் போதிய அளவு சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். புதிய நிறுவனங்களுக்கு நேர்முகத் தேர்வுக்கு, உங்களைத் தயார் செய்துக் கொள்ளுங்கள். உங்களது கவலை ஒழியும்.
உதாரணமாக, வீட்டு வரி பாக்கிகளை அரசாங்கம் வசூலிக்கிறது என்றால், உங்களுக்கு வரி பாக்கி இருக்கிறதா என்று தரவுகளைச் சேகரித்து, ஏதேனும் இருந்தால், அதை எடுத்து, வரியை அபராதத்தொகையுடன் கட்டிவிடுங்கள். வரி பாக்கி இல்லாவிட்டால், கவலைப்பட ஒன்றுமில்லை.
உதாரணத்திற்கு, கடன்காரர் உங்களை நச்சரிக்கிறார் என்றால், எவ்வாறு கடனை அடைப்பது என்று எண்ணி, தங்கநகை அல்லது வேறு ஏதாவது சொத்தினை விற்று பணமாக மாற்றி, குறிப்பிட்டத் தேதியில் கடனை அடைப்பது என்று முடிவெடுங்கள்.
உதாரணத்திற்கு, சுயத்தொழிலில் அதிக செலவு எனில், எதன் காரணமாக, அதிகச் செலவு என்று கண்டறிந்து, அதனைத் தீர்க்க வழிகளைப் பட்டியலிட்டு, சிறந்த வழியைத் தேர்ந்தெடுத்து, செயல்படுத்துங்கள்.
தாங்கக்கூடிய இழப்பு (stoploss) விதியைப் பின்பற்றுங்கள்;
ஒரு நபருக்காக காத்திருக்கிறீர்கள். அவர் வரவில்லை. அதிகபட்சம் 15 நிமிடம் காத்திருந்துவிட்டு, அங்கிருந்து கிளம்பிவிடுவீர்கள். இதனைப் போலவே, கவலைகளுக்கு நேரத்தை ஒதுக்கிவிட்டு, அதற்குமேல் அந்தக் கவலைக்கு இடம் தராதீர்கள். அடுத்த வேலையைக் கவனிக்கப் பாருங்கள்.
உதாரணமாக, திடீரென்று ஒரு தங்க மோதிரம் காணாமல் போய்விட்டால், அதனை நினைத்து ஒரு 1 மணி நேரம் காரணங்களை அலசுங்கள். அதிலிருந்து பாடத்தைக் கற்றுக்கொண்டு, அடுத்த நடவடிக்கையை நோக்கிச் செல்லுங்கள்.
அற்ப விஷயங்களை எண்ணி கவலைப்படாதீர்கள்;
அலுவலகத்தின் காபியின் சர்க்கரை அளவு குறைவாக இருப்பது, ஒரு நாள் வீட்டில் சாப்பாட்டில் உப்பு அதிகமாக இருப்பது, செய்தித்தாள் தாமதமாக வருவது போன்ற அற்ப விஷயங்களை, புற்று நோய், நாடுகளுக்கு இடையே போர் போன்ற வாழ்க்கையை அச்சுறுத்தும் பெரிய பிரச்னைகளுடன் ஒப்பிட்டு, அந்த அற்ப விஷயங்களைப் புறந்தள்ளுங்கள்.
நீங்கள் கவலை ஒழித்து, மன நிம்மதி அடைய வாழ்த்துகள்.