சாதனை? சோதனை!

சாதனை? சோதனை!
Published on
– ஜி.எஸ்.எஸ்.

லக சாதனை ஒன்று சமீபத்தில் முறியடிக்கப்பட்டு இருக்கிறது. மாலி நாட்டைச் சேர்ந்த ஹலீமா என்ற பெண்மணி ஒரே நேரத்தில் ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுத்து இருக்கிறார். அவர் கருவுற்றிருந்தபோது பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏழு குழந்தைகளை சுமந்து கொண்டு இருப்பதாகக் கூறி, அதிசயித்துப் போனார்கள். ஆனால், நிஜத்தில் மேலும் இரண்டு கருக்களை அவர் சுமந்து கொண்டிருந்தார் என்பது பிறகே தெரிந்தது. ஒன்பது குழந்தைகளில் நால்வர் ஆண்கள். ஐந்து பெண் குழந்தைகள்.

சிக்கல் நிறைந்த பிரசவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதால், அவரை மாலியில் இருந்து மொராக்கோவுக்கு அனுப்பினர் மருத்துவர்கள். கோவிட் தடைகள் காரணமாக கணவரால் உடன் செல்ல முடியவில்லை.

பிரசவத்திற்கான மருத்துவச் செலவு சுமார் பத்து கோடி ரூபாய். இதில் பெரும் பங்கை மாலி அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

'ஒவ்வொரு குழந்தையாக வெளிவந்து கொண்டிருந்தபோது, உங்கள் மனதில் ஏதாவது எண்ணம் ஓடியதா?' என்று ஹலீமாவைப் பின்னர் கேட்டபோது, 'இந்தக் குழந்தைகளையெல்லாம் எப்படிப் பார்த்துக்கொள்ளப் போகிறேன் என்ற எண்ணம்தான் என் மனதில் தோன்றிக்கொண்டே இருந்தது' என்று பதில் கூறி இருக்கிறார்.

ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதையே மறுபிறவி என்பார்கள். அப்படியானால், ஹலீமா அடுத்தடுத்து ஒன்பது பிறவிகளைக் கண்டிருக்கிறார் இல்லையா?! சிசேரியன் பிரசவம்தான் (பிரசவங்கள்தான்?). எல்லாக் குழந்தைகளுக்குமாகச் சேர்த்து தினமும் நூறு முறையாவது துணி மாற்றவேண்டி இருப்பதே பெரும்பாடுதான்!

மாலி பெண்மணி அளவுக்கு, 'சாதனை' படைக்காவிட்டாலும் இரட்டை (மற்றும் அதைவிட அதிக) குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பிரசவிக்கும் பெற்றோர், (முக்கியமாக தாய்) சந்திக்கும் பிரச்னைகள் பல. அவற்றை உள்வாங்கிக் கொண்டு அந்தத் தாய்க்குப் போதுமான ஆதரவளிக்க வேண்டியது அவளைச் சுற்றி உள்ளவர்களின் கடமை.

மேற்படி குழந்தைகள் வளர வளர, அந்தத் தாய் தனது முழு கவனத்தையும் இவர்களுக்கே அளிக்க வேண்டியிருக்கும். பணிக்குச் செல்லும் தாய் என்றால், அவளால் பணியில் முழு கவனம் செலுத்த முடியாமல் போகலாம். குழந்தைகளுக்கு மாறி மாறி ஏதாவது உடல் நலப் பிரச்னை வர வாய்ப்பு உண்டு. தன்னுடைய பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்த அவளுக்கு சிறிதும் நேரம் இருக்காது.

கணவனுடனான இல்லற வாழ்விலும் இது எதிரொலிக்கும் (இரட்டைக் குழந்தைகளின் பெற்றோர் அதிக அளவில் விவாகரத்து செய்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு).

சமூக வாழ்வும் பெரிதும் பாதிக்கப்படும். தெரிந்தவர்கள் வீட்டு விசேஷங்களுக்குத் தனி ஒருவராக குழந்தைகளை எடுத்துக்கொண்டு போக முடியாது. எனவே, கூட யாராவது வந்தால் மட்டுமே இது சாத்தியப்படும். போகும் இடங்களிலும் வந்திருப்பவர்களோடு மனம் விட்டு உரையாட முடியாமல் தனது குழந்தைகளையே மாறி மாறி கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கும். தவிர, வந்திருப்பவர்கள் அனைவரும் ஏதோ கண்காட்சிப் பொருள்கள் போல குழந்தைகளைப் பார்ப்பார்கள். அவர்களோடு கொஞ்சி விளையாடுவார்கள். இது இயல்பானது என்றாலும், இந்தக் காலத்தில் இதன் காரணமாக குழந்தைகளுக்கு எந்தத் தொற்றும் வராமல் இருக்கவேண்டுமே என்பதால் அவர்களைக் கண்காணிக்க வேண்டியிருக்கும். இரண்டு குழந்தைகளை இரு வேறு நபர்கள் இரு திசைகளில் எடுத்துச் சென்றால், எந்தக் குழந்தையை கண்காணிப்பது? எதை கண்காணிக்காமல் விடுவது?

பொதுவாகவே, ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தையை ஒரே பிரசவத்தில் பிரசவிக்கும் தாயின் உடல் நலம் அதிகம் பாதிக்கப்படுகிறது. படபடப்பும் கவலையும் கருவுற்ற காலத்திலிருந்தே தொடங்கிவிடும். 'ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை நல்ல விதத்தில் பிரசவிக்க வேண்டுமே' என்ற கவலை. இதோடு, பிரசவத்துக்குப் பிறகு வரக்கூடிய மன இறுக்கம் என்பது அதிக அளவில் உண்டாகிறது. இரு குழந்தைகளை வளர்க்க பிறரது உதவி தேவைப்படுகிறது என்பதால் பிறரை நம்பி இருக்க வேண்டியிருக்கிறதே என்ற சோர்வு உண்டாகும். தவிர, அப்படி உதவுபவர்கள் முகம் சுளிக்கும்போது வேதனை அதிகமாகும்.

ஒரே சமயத்தில் பாலுக்காக இரண்டு குழந்தைகளும் அழுவது என்பது அடிக்கடி நடைபெறும். இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் என்றால் இன்னும் சிக்கல். எந்தக் குழந்தையை முதலில் கவனிப்பது என்பது உணர்வுபூர்வமாகவும் சிக்கலை உண்டாக்கக்கூடியது.

ஒரு குழந்தை என்றாலே, அதனுடைய வருங்கால பொருளாதாரத்துக்கு திட்டமிடுதல் சவாலானது. பல குழந்தைகளென்றால் இது மேலும் பெரிய சவால். கீழ், நடுத்தர குடும்பங்கள் என்றால், அவர்களின் தற்காலப் பொருளாதாரமே இந்த அதிகப்படி குழந்தைகளால் கேள்விக்குறியாகிவிடும். காலப்போக்கில் ஒரே சமயத்தில் பள்ளி செலவு, கல்லூரி செலவு, மருத்துவச் செலவு, திருமணச் செலவு ஆகியவை நிகழுமே என்று ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்க்கையில் தலைச் சுற்றும்.

மேற்படி பிரசவங்களில், பிரசவத்துக்குப் பிறகு கணிசமான காலம் போதிய ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பார்கள். இரண்டு அல்லது அதிகக் குழந்தைகளை வைத்துக்கொண்டு ஓய்வு என்பது ஒரு சவாலாக இருக்கும். மூத்த குழந்தைகள் இருந்தால், அவர்களை கவனித்துக்கொள்வது மிகவும் குறைந்து போய், அதனாலும் உளவியல் விலகல் உண்டாகலாம்.

அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் பிறக்கும்போது அவர்களில் ஒருவருக்கு ஏதாவது உடல் நலக் குறைபாடுகள் உண்டாக வாய்ப்பு உண்டு. அவர்களை கவனிப்பதற்காக அலுவலக வேலையை விட வேண்டி இருந்தால் மனச்சுமை அதிகரிக்கும்.

தூங்கும் நேரம் குறைந்து விட வாய்ப்பு உண்டு. ஏனென்றால், ஒரு குழந்தை தூங்கினாலும் மற்றொரு குழந்தை விழித்திருந்து அழலாம்.

இப்படிப்பட்ட தாய்மார்கள் தங்களை சில விஷயங்களில் தயார் செய்துகொண்டால், குழந்தைகளை வளர்க்கும்போது உண்டாகும் சிரமங்களைக் குறைத்துக் கொள்ளலாம்.

இவர்கள் தங்களை எப்படி தயார் செய்து கொள்வது
என்பது குறித்து குழந்தைகள் நல மருத்துவர்
நா.கங்காவின் விளக்கம் அடுத்த இதழில்…

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com