இறந்தும் பெற்ற இறவாப் புகழ்!

இறந்தும் பெற்ற இறவாப் புகழ்!
Published on

-ஜி.எஸ்.எஸ்.

டேனிஷ் சித்திகி மும்பையைச் சேர்ந்தவர். மிகச்சிறந்த புகைப்படங்களை பத்திரிகைகளுக்காக எடுத்தவர். ரூடர்ஸ் குழுமத்துக்காகக் பணி புரிந்தவர்.

இவர் 2018ஆம் ஆண்டு புலிட்சர் பரிசை வென்றார். (புலிட்சர் பரிசு என்பது, ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம், இசையமைப்பு என்ப வற்றுக்காக அமெரிக்க நாட்டில் வழங்கப்படும் ஒரு விருது. கொலம்பியா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டு வரும் இது மேற்படிப் பிரிவுகளில் மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது).

மியான்மரில் இருந்து துரத்தப்பட்ட ரோஹிங்கியா அகதிகளின் அவலங்களை தன் புகைப்படங்களின் மூலம் ஆவணப்படுத்தியதற்காக இந்த பரிசு டேனிஷ் சித்திகிக்கு வழங்கப்பட்டது.

சமீபத்தில் 2022 க்கான புலிட்சர் பரிசுப் பட்டியலில் மீண்டும் இவர் இடம் பெற்றிருக்கிறார்.  இவரையும்  சேர்த்து நான்கு இந்தியர்கள் இந்தப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். 'கோவிட் காரணமாக இந்தியாவில் நேர்ந்த சீரழிவுகள் மற்றும் அதை எதிர்கொள்ள மக்கள் இணைந்து விதம் ஆகியவற்றை அற்புதமாக படம் எடுத்ததற்காக' இந்தத் தேர்வு என்று காரணம் கூறப்பட்டிருக்கிறது.

டேனிஷ் சித்திகி
டேனிஷ் சித்திகி

ஆனால், டேனிஷ் சித்திகி இந்தப் பரிசுக்காக சமீபத்தில்  தேர்வு செய்யப்பட்டபோது ஆஹா என்று பாராட்டியவர்களை விட அடடா என்று பரிதாபப்பட்டவர்கள்தான் அதிகம். காரணம் அவர் மறைந்துவிட்டார்!  அதுவும் தன் பணியில் ஈடுபட்டிருந்த போது கொ​டூரமான முறையில் கொல்லப்பட்டார். ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும் தாலிபான் படையினருக்கும் சென்ற ஆண்டு கடும் மோதல் நடைபெற்றது.  இந்தக் காட்சிகளை மறைந்திருந்து அற்புதமாக புகைப்படமெடுத்து பாராட்டுகளைப் பெற்றார்.   ஆனால் ஒருமுறை  அப்படி மறைந்திருந்து புகைப்படங்கள் எடுத்தபோது இவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.  ஆக உலகம் போற்றிய இந்தத் திறமைசாலி தனது முப்பத்தெட்டாவது வயதிலேயே இறந்துவிட்டார்.

சமீபத்தில் இவருடன் புலிட்சர் பரிசு அறிவிக்கப்பட்ட மற்ற மூன்று பேர் அட்னன் அபிடி, சன்னா இர்ஷத் மட்​டூ, மற்றும் அமித் தவே ஆகியோர்.

புலிட்சர் ப​ரிசை முன்பு கூட சில இந்தியர்கள் பெற்றிருக்கிறார்கள். இதை முதலில் வென்ற இந்தியர் கோபி பெஹாரி லால். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றாலும் அமெரிக்காவில் வசித்தவர். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் அறிவியல் கொண்டாட்டம் தொடர்பான புகைப் படங்களை சிறப்பாக எடுத்தற்காக இவர் அப்படி கெளரவிக்கப்பட்டார்.  பின்னர் 2003ல் நிறுவன ஊழல்கள் தொடர்பாக எழுதிய கட்டுரைக்காக மும்பையில் பிறந்த கீதா ஆனந்த் இந்தப் பரிசைப் பெற்றார்.

கலிபோர்னியாவில் 2015 இல் துப்பாக்கிச் சூடு நடக்க அதில் பொதுமக்களும் இறந்தனர்.  இதற்கான விசாரணையும் நடைபெற்றது.  இந்தச் செய்திகளை சரியான முறையில் வெளியிட்டதற்காக லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் இதழின் நிர்வாக ஆசிரியராக இருந்த இந்திய அமெரிக்கரான சங்கமித்ர கலிதாவுக்கு புலிட்சர் பரிசு வழங்கப்பட்டது. .

லண்டனில் பிறந்த இந்திய எழுத்தாளரான ஜும்பா லஹிரிக்கு, அவரது சிறுகதைத் தொகுப்புக்காக பரிசு வழங்கப்பட்டது. பின்னர் 2011 ஆம் ஆண்டு, இந்தியாவில் பிறந்த அமெரிக்க மருத்துவரான சித்தார்த்த முகர்ஜி புற்றுநோய் குறித்த தெளிவான கட்டுரைகளை வழங்கியதற்காக புலிட்சர் பரிசைப் பெற்றார்.

யார் இந்த புலிட்சர்?  எதற்காக அவர் பெயரில் இந்த விருதுகள்? இவரது முழு பெயர் ஜோசப் புலிட்சர். யூத இனத்தைச் சேர்ந்தவர். இவர் ஹங்கேரியிலுள்ள செல்வச்செழிப்பான குடும்பமொன்றில் 1847 இல் பிறந்தவர்.  'ஓய்வெடுப்பதையே விரும்பாத பத்திரிகையாளர்' என்று பெயரெடுத்தவர்.  ஒரு ஜெர்மானிய மொழி தினசரியில் சேர்ந்த இவர் பின்னர் தனது 25வது வயதிலேயே ஒரு நாளிதழின் பதிப்பாளர் ஆனார்.  அரசு மற்றும் கோடீஸ்வரர்களின் பல தில்லுமுல்லுகளை அவர் அப்போது அம்பலப்படுத்தினார். காலப்போக்கில் அமெரிக்க நாளிதழான நியூயார்க் வேர்ல்ட் என்ற நாளிதழை வாங்கி, சரிந்து கொண்டிருந்த அதன் விற்பனையை அதிகமாக்கினார். பின்னர் அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். சுதந்திர தேவி சிலை நியூயார்க் நகரத்தில்தான் வைக்கப்பட வேண்டும் என்பதற்காக பெரும் போராட்டத்தை முன்னெடுத்தார். தனது உயிலில் தன் பெயரில் இப்படி விருதுகளும் பரிசுகளும்  ஆண்டுதோறும் வழங்கப்பட வேண்டும் என்று கூறி அதற்கான தொகையையும் ஒதுக்கினார். கதை, நாடகம், இசை ஆகிய பிரிவுகளில் போட்டியிட மட்டும் சம்பந்தப்பட்டவர்கள் அ​மெரிக்கர்களாக இருக்க வேண்டும் என நிபந்தனை விதித்தார். இதற்காக அவர் ஒதுக்கியது 20 லட்சம் டாலர். 1911ல் அவர் இறந்தார். 1917 இல் இருந்து புலிட்சர் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட தொடங்கின.

பெருமைமிகு இந்தப் பரிசைத்தான் புது டெல்லியில் பிறந்து ஆப்கானிஸ் தானில் மறைந்த டேனிஷ் சித்திகி பெற்றுள்ளார்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com