
கோடை காலத்தில் , தானியங்கள் எளிதாக கிடைப்பதால் வெட்டு கிளியானது ஆடிப்பாடி உல்லாசமாக வாழ்ந்து வருகிறது. ஆனால், எறும்பு மழை காலத்திற்கு தேவையான தானியங்களை கோடை காலத்திலேயே சேமித்து வைக்கிறது. மழை காலம் வந்த போது, எறும்பானது எந்த ஒரு கவலையும் இன்றி சேமித்த தானியங்களைக் கொண்டு தனது வாழ்க்கையையே வாழ்கிறது. யாரிடமும் கையேந்தாமல் நிம்மதியான வாழ்க்கையை அடைகிறது. ஆனால் வெட்டுகிளியோ, மழைகாலத்தில் தான் வாழ்வதற்கான தானியங்கள் சேமிக்காதபடியால், தானியங்கள் இன்றி நொந்து நூலாகிப் போய் எறும்பிடம் வந்து கையேந்தி நிற்கிறது.
உழைக்கும் காலத்திலேயே, எதிர்காலத்திற்காக சேமிக்கும் அவசியத்தை எறும்பின் சேமிப்பின் மூலம், வெட்டுக்கிளி உணர்கிறது.
இதனை ஆங்கிலத்தில் 'save for the rainy day' என்று கூறுவார்கள். அதாவது மழை காலத்திற்காக சேமிக்க வேண்டும் என்று கூறுவார்கள்.
தேவை: எறும்புக்கு தேவை என்பது உணவு மட்டுமே. அது மண்ணிலோ அல்லது வேறு எங்காவதோ இருப்பிடத்தை அமைத்துக் கொள்ள முடியும். உடை என்ற தேவை இல்லை. எறும்புக்கு தேவைகள் குறைவு.
மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் என்ற மூன்றும் அடிப்படையாகத் தேவைப்படுகின்றன. இவை மட்டுமன்றி, மனிதனுக்கு போக்குவரத்து, சுகாதாரம், மருத்துவம், தொலைதொடர்பு, இணையம், காப்பீடு என்று அத்தியாவசியத் தேவைகள் அதிகமாகி விட்டன. மனிதனுக்கு தேவைகள் அதிகம்.
தேவைக்கும் இருப்பிற்கும் இடையே உள்ள வித்தியாசம் அல்லது பற்றாக்குறை.
வேலைக்கார எறும்பு வாழ்நாளில் (ஒரு வருடத்தில்), தானியங்களின் பற்றாக்குறை காலமான, மழைக்காலத்தினை ஒரு முறை மட்டுமே சந்திக்கிறது.
மனிதன் தனது வாழ்நாளில், பணப்பற்றாக்குறை காலங்களைப் பலவிதங்களில் சந்திக்க நேரலாம்.
எனவே, தேவை குறைவாகவும், பற்றாக்குறையை வாழ்வில் ஒரே ஒரு முறை சந்திக்கும் எறும்பே சேமிக்கும் போது, தேவைகள் அதிகமாகவும், பணப்பற்றாக்குறை வாழ்வில் சந்திக்கும் சூழ்நிலைகள் அதிகமாகவும் உள்ள மனிதன் கண்டிப்பாக பணத்தை சேமிக்க வேண்டும். இல்லையேல், வெட்டுக்கிளியைப் போல், பொருள் பற்றாக்குறை காலத்தில் பிறரிடம் கையேந்த நேரிடும். கடன் என்னும் அரக்கனிடம் மாட்டிக் கொள்ள நேரிடும்.
ஆனால், மனிதனுக்கு சேமிப்பு மட்டும் போதாது. பணவீக்கத்தினை சமாளிக்க முதலீடும் வேண்டும்.
எறும்பிற்கு பணவீக்க பிரச்னை கிடையாது.
மனிதனுக்கு பணவீக்கப் பிரச்சனை உண்டு. பணவீக்கத்தினால், ஒரே செலவின் மதிப்பு வருடா வருடம் கூடும். சேமித்த பணம், பணவீக்கத்தின் காரணமாக மதிப்பு குறைந்து விடும். எனவே சேமிப்பு மட்டும் போதாது. முதலீடும் வேண்டும்.
உதாரணமாக, 1980ல் 10 ஆயிரம் ரூபாய்க்கு, சென்னையில் கோடம்பாக்கத்தில் ஒரு வீட்டு மனை வாங்க முடியும். 2020ல் 10 ஆயிரம் ரூபாய்க்கு , கோடம்பாக்கத்தில் ஒரு மாத வீட்டு வாடகை மட்டுமே செலுத்த முடியும். இது பணவீக்கத்தின் கோரமுகம்.
எனவே, முதலீட்டின் மூலமே பணத்தைப் பெருக்க முடியும்.
எந்த ஒரு முதலீட்டிற்கும் மூன்று கூறுகள் உண்டு.
எந்த ஒரு முதலீட்டை தேர்ந்தெடுக்கும் போதும், அது குறிக்கோளினை சார்ந்து அமைய வேண்டும். நமது குறிக்கோளின் கால வரையறைக்கு முதலீட்டின் கூறுகள் எவ்வாறு பொருந்துகின்றன என்று பார்க்க வேண்டும்.
எறும்பிடம் இருந்து மனிதன், உழைப்பையும் சேமிப்பையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் மனிதன் அவற்றோடு நின்றுவிடாமல் சேமிப்பினை முதலீடாக மாற்றி பணப் பெருக்கத்தை செய்து பணவீக்கத்தை சமாளிக்க வேண்டும்.