ஒரு வார்த்தை!

ஒரு வார்த்தை!
Published on

'ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் (படம்: 'சாந்தி) பாடலைக் கேட்டிருப்பீங்க… பாட்டெல்லாம் பி.சுசீலா குரலில் அமிர்தமாக இருக்கும். ஆனா சிச்சுவேஷன்தான் எனக்குள் கோப ஊசியை ஏற்றும்!

பார்வையற்ற விஜயகுமாரியைத் தோளில் சாய்த்தபடி, தேவிகா,
"ஒரு நாள்… அந்தத் திருநாள்… உந்தன் மணநாள்தான் வாராதோ? ஓ…ஓ…ன்னு பரிதாபப்பட, விஜயகுமாரி தேம்பித் தேம்பி ஏங்குவார்.

"உன் வேலையைப் பார்த்துக்கிட்டு போடி! உன் அனுதாபமோ, ஆலாபனையோ நாட் நெஸஸரி! எங்கப்பா லட்சாதிபதி. நான் ஒரே பெண். பார்வை இல்லாட்டா என்ன? ஆனா ஆகட்டும்… இல்லாட்டி கவலையில்ல… எங்கப்பாகிட்ட சொல்லி 'ப்ளைன்ட் ஸ்கூலே கட்டுவேன்! கல்யாணம்தான் ஒரு பெண்ணோட 'ஹை என்ட் ஹேப்பினெஸ் னு யார் முடிவு செஞ்சது? ன்னு விஜயகுமாரி ஏன் சொல்லலை..?
(ஏன்னா… அது அந்தக் காலம்!)

அப்புறம் இன்னொரு படம்… 'லட்சுமி கல்யாணம் வெண்ணிற ஆடை நிர்மலாவுக்குப் பார்க்கும் வரன் எல்லாம் தட்டிக் கொண்டே போகும். அவரும் 'ராமன் எத்தனை ராமனடி? பாடிச் சலித்துப் போவார்!

சரி, விஜயகுமாரியும், நிர்மலாவும்தான் 'அவுட் மோடட் என்றால்… நாற்பது வருஷம் கழிச்சு வந்த ஐஸ்வர்யா ராயுமா?

'கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன்… படத்தில் ஐஸ்வர்யா ராய் முன்னுக்கு வரத் துடிக்கும் இளம் பாடகி… அதிலும் ஐஸ்வர்யா – தபு கல்யாணம்தான் நடு முடிச்சு!

அட… போன மாதம் வந்த 'அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷின் (கொல்கத்தாவில் படிக்கிறாராம்!) கல்யாணம்தான் மெயின் மேட்டரே!

அப்படின்னா என்னப்பா சொல்ல வர்றீங்க? ஆதாம் – ஏவாள் காலத்துல இருந்து, 'அண்ணாத்த வரைக்கும், பெண்கள் சந்தோஷமா இருக்கணும்னா கல்யாணம்தான் தி பெஸ்ட் ஆஃபரா? மற்றபடி அவளோட சுய அறிவு, ஆர்வம், முன்னேற்றம், தகுதி பற்றி்யெல்லாம் யாருக்கும் எந்த நூதனக் கண்ணோட்டமும் இல்லை… அப்படித்தானே?

**********

டித்த, பண வசதியுள்ள பெண்ணுக்கே கல்யாணம்தான் 'ஒன்லி ஹோலி டெஸ்டினேஷன் என்றால், ஏழைப் பெண்களின் கதி? எப்பேர்ப்பட்ட மூளைச் சலவை செய்து வளர்த்திருப்பார்கள்? மைனர் பெண்ணைக்கூட எவன் தலையிலாவது கட்டிவிடத் துடிப்பார்கள். கேட்டால், காலேஜ் எல்லாம் படிக்க வைக்க வசதியில்லைங்க என்று பதில் வரும். அதற்கு 'செக் வைக்கவும், பெண்களின் மேற்படிப்புக்கு வழிவகை செய்யவும் நடப்பு பட்ஜெட்டில் நல்லதொரு திட்டம் வரையப்பட்டுள்ளது! அதற்கு 'மங்கையர் மலர் சார்பாக வரவேற்பும், பாராட்டும்!

**********

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரில் 'தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு, சீரமைத்து, புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அரசுப் பள்ளியில் படித்து, கல்லூரியில் சேரும் அனைத்து மாணவியருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதே இந்தத் திட்டம். இதற்காக இதுவரை செயல்படுத்தப்பட்ட 'தாலிக்குத் தங்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றுத்திட்டம் ஏற்கக் கூடியதே! ஏனென்றால் ஏழை மாணவியின் உயர்க் கல்வி, தங்கத் தாலியைவிட மிகச் சிறந்தது. பயனுள்ளது. அவருக்கு வாழ்நாள் முழுக்க சுயசார்பு தருவது. இதை வரவேற்பதே புத்திசாலித்தனம். ஒரு முக்கியமான விஷயம்.

அந்தத் திருமண உதவித் திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் பெண்கள் பயன் அடைந்தார்களாம்… ஆனால் இந்த ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ஆறு லட்சம் மாணவிகள் பயன் அடைவார்கள் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறார் தமிழக முதலமைச்சர்.

நல்ல விஷயம்தான்… நடக்கட்டும்! அவரது பேச்சில் வெளிப்பட்ட சமூக நீதி, பெண் கல்வி, மகளிர் முன்னேற்றம் போன்ற சொற்கள் எல்லாமே நவின சிந்தனையாகத்தான் இருக்கின்றன. ஆனால், செயல்படுத்தப்படும்போது, குளறுபடிகளோ, இடைத் தரகர்களோ இல்லாமல், வெளிப்படைத் தன்மையுடன் சீராகச் செயல்படும் என்ற உத்தரவாதமும் கிடைத்தால் தெம்பாகவும் இருக்கும்.

இந்தத் திட்டமாவது, முறைகேடுகள் இல்லாமல் உரிய நேரத்தில் உயரிய நோக்கில், பயனாளிகளைச் சென்று அடையுமா?

பெண்கள் ஆவலுடன் காத்திருக்கின்றோம்.

குறிப்பாக, அரசுப் பள்ளி ஏழை மாணவிகள்… மற்றும் நலம் விரும்பிகள்… செய்வீர்களா?

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com