எள்ளாமை!

எள்ளாமை!
Published on
கதை: -ஹேமலதா சுகுமாரன்
ஓவியம் : தமிழ்

னக்குக் கல்யாணமாகி நேற்றோடு எட்டு வருடம் முடிந்து விட்டது. இருவருமே ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கிறோம். உடனே  நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்று ஊகிக்க முடியும். காதல் திருமணம் என்று தானே. உண்மைதான். பெற்றோருடைய முழு சம்மதத்துடன்-  பார்க்கப் போனால் மிகவும் மகிழ்ச்சியோடு நடந்த திருமணம் எங்களுடையது. இப்பொழுதெல்லாம் ஒரே பிரிவாக இருந்தால் பெற்றோர்கள் தடை கூறுவதே கிடையாது. அதிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி சமூக அந்தஸ்து, படிப்பு என்று இருந்து விட்டால் தேடும் சிரமம் மிஞ்சியது என்று தான் ஆறுதல் கொள் கிறார்கள். சொந்த பந்தங்களிடம் நாங்கள் தேடினால் கூட இப்படி அமைந்திருக்காது என்று பீற்றிக் கொள்பவரும் உண்டு.

பக்கத்தில் இருந்த  அலுவலகம் நகரத்தின் வேறு இடத்திற்கு மாறிவிட்டது. 30 கிலோமீட்டர் தினமும் போய் வருவது கொஞ்ச நாட்களுக்கு மேல்  எங்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.  டிராபிக்கில் அங்குலமங்குலமாக நகர்ந்து கொண்டு போன ஒரு நாள் வீட்டை மாற்றுவோம் என்று முடிவு  செய்தோம்.  அலுவலகத்திற்கு அருகிலேயே,  தனி தனி வீடுகளான போதிலும் ஒன்றை ஒட்டி ஒன்று அருகருகாக இருந்த குடியிருப்பில் வாடகைக்குக் கிடைத்து நேற்று ஷிப்டிங் முடிந்து ஒருவாறு குடிபெயர்ந்தோம்.

மாலை வீட்டுக் கதவை சாவி போட்டு திறந்து கொண்டிருந்த பொழுது பக்கத்து வீட்டு அம்மாள் என்னை பார்த்துப் புன்னகை புரிந்தாள். நான் ஒரு லேசான புன்சிரிப்புடன்  அவசர அவசரமாக வீட்டுக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டேன்.

வைரமூக்குத்தியும், காதில் மாட்டலும், சுங்கடி புடவையுடனும் இருந்த அந்தப் பெண்மணியோடு அனாவசிய பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளக் கூடாது என்பதுதான் என் எண்ணம். இவர்களெல்லாம் நான் போட்டுக் கொள்ளும் ஷார்ட் பாண்டையும், வெட்டிக்கொள்ளும் முடியையும் விமர்சனம் செய்யும் ரகம்.  அது கூட பரவாயில்லை. முதல் கேள்வியே, குழந்தைகள் எத்தனை? என்பார்கள். இல்லை என்று சொன்னால், உடனே கர்ப்பரட்சாம்பிகாவில் இருந்து ஆரம்பித்து தனக்கு தெரிந்த அத்தனை பரிகாரத்தையும் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.  கண்டிப்பாக நான் மாட்டிக் கொள்ள மாட்டேன்.

ஆச்சு, இங்கே குடி வந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் போல் ஆகிவிட்டது. நானும் என் டீம் மேனேஜர் கீதாவும் ரொம்ப நெருக்கம். அவளுடைய அக்கா சுபா நிறைய சமூக சேவை செய்து கொண்டிருக்கிறாள். இன்று டிவியில் அவளுடைய புரோகிராம் வருகிறது,  கட்டாயம் பார் என்று சொன்னாள்.  இதோ அந்த ஆங்கில சானலை ஆன் செய்கிறேன்.

சிரித்த முகத்துடன் சுபா பேசிக் கொண்டிருக்கிறாள்.  'இப்பொழுது நான் உங்களுக்கு திருமதி கீதா கோபால்  அவர்களை அறிமுகம் செய்யப் போகிறேன். இவர் அனாதை இல்லம்  ஒன்றுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். தவிர மன அழுத்தத்திற்கு ஆளும் பெண்களுக்கு கவுன்சிலிங் செய்கிறார். தற்கொலை எண்ணத்திற்குச் சென்று இவர் பேச்சினால் தன் முடிவை மாற்றிக் கொண்டு நன்றி கூறியவர் பலர்.  இதோ  கீதா கோபால்', என்று சொன்னதும் டிவியில் வந்தவரைப் பார்த்து அதிர்ந்து போனேன். பக்கத்து வீட்டு அம்மணி.  அழகான ஆங்கிலத்தில் அவர் அருமையாகப் பேசினார்.  இன்றைய யுவதிகள் ஆனந்தமாக, தங்கள் இஷ்டத்திற்கு இருக்கிறார்கள் என்று தான் எல்லோரும் நினைக்கிறோம்.  தான் நினைத்த வேலையைச் செய்து கொண்டு பிடித்த ஆடை அணிந்து , ரெஸ்டாரன்ட் உணவு ஆர்டர் செய்து கொண்டு ஜாலி லைஃப்.  எங்கள் தலைமுறை சமையலறையிலையும் வீட்டு வேலையிலும் நிறைய நேரத்தை செலவழித்து, பெரியவர்களுக்குக் கட்டுப்பட்டு, அலுவலகம் சென்றால் கூட வீட்டுக்கு வரும் விருந்தினர்களை உபசரித்து  நிறைய கஷ்டப்பட்டது போல ஒரு தோற்றம் இருக்கிறது. உண்மையில் நாள் முழுவதும் கம்ப்யூட்டரில் உட்கார்ந்து இருப்பதும்,  இந்த தேதிக்குள் குறிப்பிட்ட வேலையை முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் பணி செய்வதும் அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. பத்து பேருக்கு சமையல் செய்வதை விட நாள் முழுவதும் கம்ப்யூட்டரில் பணி புரிவது அதிக ஆயாசத்தைத் தரும். உணவு, தூக்கம்,  இரண்டிலும் ஒழுங்கின்மையாலும், பணிச்சுமையாலும் மன உளைச்சல் ஏற்படுகிறது.  போதாக்குறைக்கு, காரணம் எதுவாக இருப்பினும் இப்பொழுது இன்பர்ட்டிலிட்டி  அதிகரித்துள்ளது உண்மை.   என்னிடம் கௌன்ஸலிங்குக்கு வந்த சில பெண்கள்,  எங்களுக்குக் குழந்தை பிறக்காததை விட அக்கம் பக்கத்தில் இருப்பவர் தரும் அட்வைஸ் தான் தாங்கவில்லை என்று வருத்தப் படுகின்றனர். ஒருத்தியின் அண்டை வீட்டார், உன் வெயிட் அதிகம். அதுதான் காரணம். எடையைக் குறை என்றார்கள் என்று அழுதாள். அந்த மூடர்களின் பேச்சுக்கு  முக்கியத்துவம் கொடுக்காதே. எனக்கு குண்டாக இருக்கத்தான் பிடிக்கிறது என்று பதில் சொல் என்றேன். அதன் பின் அவளுக்குக் கிடைத்து வந்த ப்ரீ அட்வைஸ் நின்றுவிட்டது. இப்பொழுது அவள் தத்துப்பெண்ணுடன் மகிழ்ச்சியாக இருக்கிறாள். குழந்தை இல்லாத பெற்றோரைப் போன்றே, பெற்றோர்கள் இல்லாத குழந்தைகளும் பல்லாயிரம்.  ஆனால் அடாப்ஷனும் அவரவர் எண்ணத்தைப் பொருத்து அவரவர் தீர்மானிக்க வேண்டிய விஷயம். ஆனால் யாரேனும் தத்து எடுத்துக் கொள்ள விரும்பினால் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை இலவசமாக செய்ய எங்கள் குழு எப்பொழுதும் தயாராக இருக்கிறது. டிப்ரெஷனினால் பாதிக்கப்படும் பொழுது எங்களுக்கு ஒரு கால் செய்தால் போதும், அவர்களை  நேர்மறையாக எண்ணத்தூண்டி  உற்சாகப்படுத்துவோம்… இன்னும்  பேசிக் கொண்டே போனார். என்னை யாரோ கன்னத்தில் பளார் என்று அறைவது போல் இருந்தது. ஒருவரின் தோற்றத்தை வைத்து அவர் இப்படித்தான் என்று எடை போடுவது எவ்வளவு தவறு. கண்டிப்பாக நாளை நானே அவரைப் பார்த்துப் புன்னகைத்து உங்கள் பேட்டியை  பார்த்தேன் என்பேன்…  ஈகோ இடம் கொடுத்தால் மன்னிப்பும் கேட்கலாம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com