
கதை எழுதுவது எப்படி என்ற தலைப்பில் தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான ரா.கி. ரங்கராஜன் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். கதை எழுதுவது என்ற கலையினை, மிகவும் வெளிப்படையாக, அணு அணுவாக விளக்கும் புத்தகம். தமிழ் உலகின் வருங்கால எழுத்தாளர்களுக்கு ஒரு பெரிய தூண்டு கோலாக இந்தப் புத்தகம் அமைகிறது. மூலம் மாறியுள்ளார். இந்தப் புத்தகத்தின் வாயிலாக அவர் விளக்கி இருக்கும் (கதை எழுதுவதின்) முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.
ஒரு கதைக்கு பின்வரும் விஷயங்கள் மிகவும் முக்கியம்.
ஒரு கதையின் ஆரம்பம் என்பது, அந்தக் கதையில் உள்ள பிரச்னை அல்லது சிக்கல். ஒரு கதாபாத்திரம் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறது. அந்தச் சிக்கலில் என்ன நடக்கப்போகிறது என்ற ஆர்வத்தினைத் தூண்டும்போதே, கதையின் ஆரம்பம் தொடங்கிவிடுகிறது.
உதாரணமாக, சண்முகம் காலையில் எழுந்தார். அலுவலகம் சென்றார். திரும்பி வந்தார் என்று கதை எழுதினால், என்ன சுவாரசியம் ஏற்படும்.
இதற்கு மாறாக, சண்முகம் காலையில் எழுந்தார். அவரது அலுவலகத்தில் ஆட்குறைப்பு நடக்கப்போவதைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டே, அலுவலகம் செல்கிறார். அவருக்கு ஏற்கனவே வயதான காரணத்தால், அலுவலகத்தில் இளைஞர்களுக்கு மத்தியில் கணிணி தொழில்நுட்பத்தில் கொஞ்சம் பின்தங்கியுள்ளதை எண்ணி, தான் ஆட்குறைப்பில் பாதிக்கப் படுவேனா என்று கவலையுடன் செல்வதாக, கதை தொடங்கினால், சண்முகத்திற்கு என்ன ஆகுமோ என்ற கவலை வாசகனையும் பற்றிக்கொள்கிறது. கதையின் ஆரம்பம் இதுதான். கதை சூடுபிடிக்கிறது.
கதை ஆரம்பம் மட்டும் முக்கியமல்ல. வளர வேண்டும். சுவாரசியமாக, வளர வேண்டும். கதைக்கு மூன்று விஷயங்கள் முக்கியம். அவையாவன;
1.ஆரம்பம், 2. நடு, 3. முடிவு.
இந்த நடுப்பகுதிதான் வளர்ச்சி. இவ்வாறு கதையினை வளர்ப்பதற்கு, கதையின் நாயகன் அல்லது நாயகியின் சிக்கலைத் தீர்ப்பதை வளர்ப்பதற்கு பின்வரும் விஷயங்கள் முக்கியம். அவையாவன;
இத்தகைய கதை வளர்ச்சியினை கட்டுக்கோப்பாகக் கையாளவேண்டும். கோர்வையாகச் சொல்ல வேண்டும். முன்னுக்குப் பின்னாக எழுதக்கூடாது. கதை கதாநாயகனின் சிக்கலின் பின்புலம் (இறந்தகாலம்), தற்போதைய பிரச்னை(நிகழ்காலம்), நடக்கும் நிகழ்ச்சிகள் (இது கதையின் வளர்ச்சி) போன்றவற்றைக் கோர்வையாகக் கையாளவேண்டும்.
முடிவினை முன்கூட்டியே
முடிவு செய்து, வளர்ச்சியானது
முடிவினை நோக்கி வளர வேண்டும்.
உதாரணமாக, ஒரு காதலன் காதலி, கடற்கரையில் சந்தித்துக்கொண்டால், கடற்கரையின் சூழ்நிலை, அவர்களின் பார்வைக் கோணங்கள், அவர்களது நெருக்கம், அவர்கள் அணிந்திருந்த உடை, அவர்கள் பேசிய உரையாடல் போன்றவற்றினை காட்சியமைப்பாக கூறும்போது, கதை சுவாரசியமாகிறது.
மேலோட்டமாக எழுதாதீர்கள். அது படிப்பவர்களுக்கு அலுப்பூட்டும். மேற்சொன்ன காதலர் சந்திப்பு உதாரணத்தில், காதலர் சந்தித்தனர். சுண்டல் சாப்பிட்டனர். வீட்டுக்குத் திரும்பினர் என்று மேலாட்டமாக எழுதினால், அலுப்பு தட்டும்.
கதையின் நாயகன் அல்லது நாயகியின் கதாபாத்திரத்தினை நன்றாக வடிவமைக்க வேண்டும். ஒவ்வொரு கதாபாத்திரமும் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவை.
உரையாடல் கதையின் மீதான நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது. உரையாடல் நடப்பதென்பது, நமக்கு அருகே இருவர் பேசிக்கொள்வதைப் போன்ற ஒரு உணர்வைக் கொடுக்கிறது. உரையாடல் வெறுமனே இல்லாமல், கதையினை நகர்த்திச் செல்ல உதவவேண்டும்.
உதாரணமாக, காபி சாப்பிட்டியா? குளிச்சியா? என்று உரையாடல் இருக்கக்கூடாது. கதையின் சிக்கலைச் சார்ந்த முக்கியமான அம்சங்களை, உரையாடல் நமக்குக் காட்டி, கதையின் வளர்ச்சிக்கு உதவவேண்டும்.
எழுதும் பாணி. கதை சொல்லும் விதம். இது எழுத எழுத கைகூடும். கோர்வையாக எழுதவேண்டும். தெளிவாக எழுதவேண்டும். கதைக்கேற்ற நடைவேண்டும். உதாரணமாக, திகில் கதையில், நகைச்சுவை நடைகூடாது. நகைச்சுவை கதையில், திகில் நடைகூடாது.
ஆரம்பத்தில் ஏற்பட்ட பிரச்னையினை, தீர்ப்பதானது முடிவு மட்டுமே. அதுவரை மர்மமானது நீட்டிக்கப்பட வேண்டும். முன்கூட்டியே வாசகருக்கு முடிவு தெரிந்தால், கதையின் சுவாரசியம் போய்விடும்.
மர்மத்தின் முடிச்சு கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்க்கப்பட வேண்டும். ஒரு திருட்டு நடக்கிறது என்றால், அந்த திருட்டின் மர்மமானது, கொஞ்சம் கொஞ்சமாக விலக வேண்டும். அதுதான் கதையின் சுவாரசியத்தினைக் கூட்டும்.
இத்தகைய மர்மமானது, திகில் கதைகளுக்கு மட்டுமல்ல, காதல் கதைகள், நகைச்சுவை கதைகளுக்கும் பொருந்தும்.
கதையினை ஆழமாக எழுதவேண்டும். மேலோட்டமாக எழுதக்கூடாது. சட்டென்று முடிக்கக் கூடாது. கதை சம்பந்தமான ஆரம்பப் பிரச்னை, கதாபாத்திர வடிவமைப்பு, காட்சியமைப்பு, உரையாடல் போன்ற எல்லாமே ஆழமாக கையாளப்படவேண்டும்.
உதாரணமாக, ஒருவனுக்கு கடன் தொல்லை இருந்தால், அவனது மனதின் எண்ணங்கள், ஏன் கடன் வாங்கினான், அவனது மனைவி, மகள் போன்றவர்களின் கருத்து, எவ்வாறு கடனிலிருந்து மீண்டான் என்று, ஆழமாக எழுதவேண்டும். கடன் வாங்கினான். கடன் தொல்லை இருந்தது. கடனில் இருந்து மீண்டான் என்று மேலோட்டமாக எழுதக்கூடாது.
மோதல் கதையில் சுவாரசியம் கூட்டுகிறது. மோதல், கதையின் ஆரம்பமான சிக்கலினை வளர்க்க உதவுகிறது.
இது நபர்கள் மோதல் மட்டுமல்ல. தர்மசிந்தனை உள்ள மனிதன், லஞ்சம் வாங்கலாமா? வேண்டாமா? என்ற மனப்போராட்டம்கூட, மனதிற்குள் நிகழும் மோதல்தான்.காதலர்களின் ஊடல் கூட, மோதல் வகை சேர்ந்ததுதான்.
தொடக்கம், நடு (கரு, ப்ளாட் (plot)), முடிவு இவை மூன்றும் கதைக்கு முக்கியம். சீக்கிரமாக, சிக்கலினை ஆரம்பித்து வைத்து, நன்கு வளர்த்து, பின்னர், எதிர்பாராத முடிவினைக் கொடுக்க வேண்டும். வாசகர்கள் படித்து முடிக்கும்போது, முடிவானது அவர்கள் மனதில் தாக்கத்தினை ஏற்படுத்த வேண்டும். திடீரென்று முடிக்கக்கூடாது. முடிவானது, சரியான சமயத்தில் அமைய வேண்டும்.
முடிந்தால் இந்தப் புத்தகத்தினைப் படியுங்கள். அருமையான புத்தகம்.