ஒரு வார்த்தை!

ஒரு வார்த்தை!
Published on

நாலு வாரமாயிடுச்சு… 'நச்'னு ஒரு கதை சொல்லி! நம்ப ஸ்டோரின்னா, ராஜா இல்லாமலா? இதுவும் அதே… அதே!

ஒரு ராஜா – ஒரு மந்திரி! இரண்டு பேரும் நதியோரமா, 'ஹாய்யா' வாக்கிங் போயிட்டு இருந்தாங்க…

அப்ப அங்க ஒரு கொடியில வெள்ளரிக்காய் காய்ச்சுத் தொங்குறதைப் பார்த்த ராஜா, "மந்திரி, அந்த வெள்ளரிக்காய பறிச்சுட்டு வா, சாப்பிடலாம்"னு சொன்னார்.

மந்திரி பறிக்கப் போனார். அங்கே உட்கார்ந்து இருந்த பார்வையற்றவன் சொன்னான்.

"ஐயா, அது வெள்ளரிக்காய் இல்ல… அது குமட்டிக்காய். அது தின்னா வாந்திதான் வரும்!"

ராஜா சொன்னார். "மந்திரி, அதைப் பறிச்சு சாப்பிடு… வாந்தி வருதான்னு பார்க்கலாம்!"

வேற வழி? மந்திரி சாப்பிட்டதும், குமட்டிக்கிட்டு ஒரே வாந்தி!

"ஐயா, அது பக்கத்துலயே அஞ்சு விரல் மாதிரி பச்சை இலை இருக்கும். அத சாப்பிட்டா வாந்தி நிற்கும்"னு பார்வையற்றவன் சொன்னான். மந்திரியும் அப்படியே செய்ய, வாந்தி நின்னுப் போச்சு.

ராஜாவுக்கு ஒரே ஆச்சரியம்! "உனக்குத்தான் கண்ணு தெரியாதே! எப்படிச் சரியா சொன்னே!"

(இனியும் 'பார்வையற்றவன்'ன்னே சொல்லாம, அவனுக்கு 'கண்ணன்'னு பேர் வெப்போம். ஒ.கே. கண்மணீஸ்?)

கண்ணன் சொன்னான், "ராஜா, இந்த நாட்டுல எங்கேயும் பஞ்சம், பசி, பட்டினி! அப்படி இருக்கும்போது, எவனாவது வெள்ளரிப் பிஞ்சை விட்டு வெச்சிருப்பானா? எப்பவும் இயற்கை ஒரு  நோய் கொடுக்குற காய கொடுத்தா, இறைவன் பக்கத்துலய ஒரு மாற்று மருந்து வெச்சுடுவாரு!"

ராஜாவுக்கு ஒரே சந்தோஷம். "இந்தா ஒரு டோக்கன். என் அரண்மனை கிழக்கு வாசலுக்குப் போ. பட்டைச் சாதம் கொடுப்பாங்க. சாப்பிட்டு சந்தோஷமா இரு"ன்னு சொல்லிட்டு ராஜா போயிட்டார்.

கொஞ்ச நாள் கழிச்சு, ஒரு வைர வியாபாரி அரண்மனைக்கு வந்து, வைரங்களைக் காட்டினான். இது ஒரிஜினலா, போலியான்னு எப்படித் தெரிஞ்சுக்கறதுன்னு ராஜாவுக்கு ஒரே குழப்பம்!

"மந்திரி, அந்தக் கண்ணனைக் கூட்டிக்கிட்டு வா! அவன்தான் காரணக் காரியத்தோட கரெக்டா சொல்வான்."

கண்ணனும் வந்தான்.

"அடேய் தம்பி! இது ஒரிஜினலா? கலப்படமும் இருக்கான்னு சொல்லுப்பா!"

நம்ப கண்ணன், எல்லா வைரத்தையும் எடுத்து, உச்சி வெய்யில்ல தரையில கொண்டு போய் வெச்சான். கொஞ்ச நேரம் கழிச்சு, "ராஜா இதெல்லாம் வைரம், மற்றது எல்லாம் கண்ணாடி"ன்னு பிரிச்சுக் கொடுத்துட்டான்.

வியாபாரியும் "ஸாரி… தெரியாம நடந்துச்சு"ன்னு சொல்லி எல்லாத்தையும் ராஜாவுக்கே பரிசா கொடுத்துட்டு நழுவிட்டான்.

ராஜாவுக்கு ஆச்சரியம்!

"எப்படிக் கண்டுபிடிச்ச?"

"ராஜா, வெயில்ல வைரம் சூடாகாது. ஆனா, கண்ணாடி சூடாகும். அதை வெச்சு பிரிச்சுட்டேன்!"

ராஜா வெரி வெரி ஹேப்பி! 'டக்'குன்னு பாக்கெட்ல கையை விட்டு, ஒரு சாப்பாட்டு டோக்கன் கொடுத்து அனுப்பி வெச்சாரு.

ப்படியே கொஞ்ச நாள் போச்சு! ராஜா தன் மகனுக்குப் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சாரு! பக்கத்து ஊர்ல இருந்து எல்லாம் நிறைய இளவரசிங்க கல்யாணம் பண்ணிக்கத் தயாரா இருந்தாங்க. ராஜாவுக்கு ஒரே குழப்பம்! யாரைத் தேர்ந்தெடுக்க?

"கூப்பிடுங்க அந்தக் கண்ணனை…"

கண்ணனும் வந்தான்.

"கண்ணா, என் மகனுக்குப் பொண்ணு தேடறேன். எந்த ராஜாவோட குமாரி சரியா இருப்பான்னு தெளிவா சொல்லுப்பா!"

"ராஜா, அடுத்த நாட்டை விட்டுட்டு, அதுக்கு அடுத்த நாட்டு ராஜாவோட பொண்ணைக் கட்டுங்க. அந்த ராஜா, உங்க சம்பந்தி ஆயிட்டா, பக்கத்து ராஜா, உங்க இரண்டு பேருக்கும் நடுவுல இருப்பான். அப்போ எல்லைப் பிரச்னை வராது. பொண்ணைக் குடுத்ததால, அந்த இடைப்பட்ட பகுதியில பிரச்னை வராம பார்த்துப்பான்!"

ராஜாவுக்கு ஒரே குஷி!

"சபாஷ்! இந்தா லஞ்ச் டோக்கன். என்ஜாய் பட்டை சாதம்!"னு அனுப்பி வெச்சாரு.

கண்ணனும் போய்ட்டான்.

சில மாதங்கள் கழிச்சு, ஒருநாள் ராஜா, கண்ணனை, தன்னோட அந்தரங்க ஆலோசனை அறைக்கு வரச் செய்தாரு.

"டேய் கண்ணா! நீ எது சொன்னாலும் காரண கரியத்தோட சொல்ற! இதையும் சரியா சொல்லணும்…"

"சரிங்க ராஜா!"

"இந்த ஊருல எல்லாரும் என்னைப் பிச்சைக்காரனுக்குப் பிறந்த பய அப்படின்னு ஜாடைமாடையா சொல்றாங்க. இதுக்கு நீ என்ன சொல்ற? சரியா சொல்லணும்"னு ரகசியமா கேட்டாரு.

கண்ணன் பதிலே பேசலே.

ராஜா திரும்பக் கேட்டாரு.

கண்ணன் அமைதியா சொன்னான்.

"ராஜா, நீங்க திரும்பத் திரும்பக் கேட்கறதால சொல்றேன். நெசமா நீங்க பிச்சைக்காரனுக்குப் பிறந்தவன்தான். அதுல சந்தேகம் வேண்டாம்"ன்னான்.

ராஜாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

"என்னப் பார்க்காமலேயே எப்படிக் கணிச்சே?ன்னு வருத்தமா கேட்டாரு.

"ராஜா, முதல்ல குமுட்டி காயப் பத்திச் சொன்னேன். நீங்க சந்தோஷம் ஆயிட்டீங்க… அப்ப குடுத்தது, பட்டைச் சாதத்துக்கு இலவச டோக்கன்!

பரம்பரை ராஜாவா இருந்தா, கையில இருந்த மோதிரத்தைக் கழட்டிக் கொடுத்திருப்பாரு!

அப்புறம், லட்சக்கணக்குல வைரங்கள் இனாமா கிடைக்க வழி செஞ்சேன்… பரம்பரை ராஜாவா இருந்தா, கழுத்துல இருக்குற தங்கச் சங்கிலியைக் கொடுத்திருப்பாரு. ஆனா, நீங்கக் கொடுத்ததோ பட்டைச் சாத டோக்கன்!

மூணாவது… ஒரு ராஜ்ஜியமே உங்கக் கைக்குள்ள வருவதற்கு யோசனை சொன்னேன்… உண்மையான ராஜாவா இருந்தா, ஒரு கிராமத்தையே எழுதி வெச்சிருப்பாரு. நீங்க கொடுத்ததோ பட்டைச் சாத டோக்கன் மட்டுமே.

ஆக… சோத்தைத் தாண்டி உங்க எண்ணம் போகலை. உலகத்துலயே பெரிய விஷயம் சோறுன்னு முடிவு பண்ணிட்டீங்க.

இதுல இருந்தே தெரியலை? நீங்கப் பிச்சைக்காரனுக்குப் பிறந்தவன்னு!"னு சொன்னான்.

ராஜா, ஷேம் ஷேம் பப்பி ஷேம் ஆகி, தலை குனிஞ்சாரு!

ஸோ, கண்மணிஸ்… இந்த அரிய கதையால என்ன சொல்ல வர்றோம்னா, நீங்க யார் என்பதை உங்கக்கிட்ட இருக்குற அழகோ, பணமோ, சொத்தோ, பதவியோ தீர்மானப்பதில்லை. உங்கள் எண்ணங்களே தீர்மானிக்கின்றன!

எண்ணம் இனிதானால், எல்லாமே இனிதாகும்!

எண்ணம் உயர்வானால் எல்லாம் உயர்வாகும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com