
சந்திப்பு : தனுஜா ஜெயராமன்
உலக தேங்காய் தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 2 ஆம் தேதியன்று அனுசரிக்கபடுகிறது. வறுமை ஒழிப்பினில் முக்கிய உயிர்நாடியாக விளங்குகின்ற தெங்கு பயிரான தேங்காயின் முக்கியதுவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே 1998 ஆம் ஆண்டு வியடநாமில் நடைபெற்ற ஆசிய பசிபிக் தெங்கு குழும மாநாட்டில் இந்த தேங்காய் தினம் ஏற்படுத்தபட்டது.
தேங்காயில் அதிகப்படியான செறிவூட்டபட்ட கொழுப்பு இயற்கையாகவே உள்ளதால் ஆக்ஸிஜனேற்றம் மிக மெதுவாக நடைபெறும். இதனால் தேங்காய் 24 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் ஆறு மாதம் வரை கெட்டு போகாமல் பாதுகாக்கலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த தேங்காயிலிருந்து தயாரிக்கபடுவதே தேங்காய் எண்ணெய். இது உணவாகவும் பயன் படுகிறது. அது மட்டுமின்றி மிகப்பெரிய சரும பாதுகாப்பு அரணாக விளங்குகிறது என்பதும் இதன் சிறப்பம்சம்.
அழகுக்கலையில் 33 வருட
அனுபவமுள்ள வசுந்தரா அவர்கள்,
தான் சார்ந்த
அழகுகலை துறையில்
தேங்காய் பால்
மற்றும் தேங்காய் எண்ணெய்
எவ்வாறு பல்வேறுவிதமான
பயன்பாடுகளை தருகிறது
என்பதனை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார். அழகுகலையில்
தேங்காய் பால் மற்றும் தேங்காய் எண்ணெய் மிக சிறந்த பங்கு
வகிக்கிறது என்கிறார் வசுந்தரா.
கேசப் பாதுகாப்பு
தேங்காய் எண்ணெயில் கொழுப்பமிலங்கள் அதிகம் இருப்பதால் அது நமது கேசத்தின் மிருதுதன்மையை பாதுகாக்கிறது. அதனால் ஷாம்பு ,ஹேர் ஆயில், ஜெல் என அனைத்து விஷயங்களிலும் தேங்காய் எண்ணெய் இணைபொருளாக சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
சாதாரண தேங்காய் எண்ணெயை தலையில் தடவி ஸ்கால்ப் மசாஜ் செய்து தலைக்கு குளித்தாலே முடி பட்டு போல மின்னுவதை காணலாம். இது முடியின் மிருதுதன்மையை பாதுகாப்பதோடு அதில் புரோட்டீன் குறைபாடு இருந்தால் அதனையும் சரிசெய்து விடுகிறது. இதில் உள்ள லாரிக் ஆஸிட் முடியை மிருதுவாக்கி பளபளவென கன்டிஷ்னிங் செய்யும் தன்மையுடையது.
தேங்காய் எண்ணெய் நல்லதொரு மாய்ச்சரைசராக செயல்பட்டு முடியினை பளபளப்பாக்குகிறது. அதில் உள்ள விட்டமின்கள் மற்றும் கொழுப்பமிலங்கள் ஸ்கால்புக்கு தேவையான சத்துக்களை வழங்குகிறது. இதனால் முடிவளர்ச்சி ஒரே சீராகவும் அடர்த்தியாகவும் இருக்க பெருமளவு உதவுகிறது. வறண்ட மற்றும் உடைந்த முடியினை கொண்டவர்கள் இதனை தொடர்ந்து தடவி வர நல்ல பலனை பெறுகிறார்கள்.
இத்தகைய வறண்ட மற்றும் உடைந்த கேசத்தை உடையவர்கள் தேங்காய் எண்ணெயை தலையில் மசாஜ் செய்து வெந்நீரில் நனைத்து பிழிந்த டவலை இறுக்கமாக கட்டி பத்து நிமிடம் கழித்து தலைக்கு குளிக்க கூடுதல் பலனை பெறுவார்கள். அதே போன்று தேங்காய் எண்ணெயை லேசாக சூடுபடுத்தி தலையில் தேய்து ஹேர்கவரால் தலையை மூடி பத்து நிமிடம் கழித்து குளித்தால் கேசம் பளபளக்கும்.
அதேபோல் தலைக்கு குளித்த பிறகு இரண்டு சொட்டு தேங்காய் எண்ணெய் எடுத்து தலையில் தேய்த்து மசாஜ் செய்வது முடியை கண்டிஷ்னிங் செய்வதோடு முடியின் ஈரபதத்தை தக்கவைக்கும். கூந்தல் வறட்சியை தடுக்கும். சிக்கலான கூந்தல்களை கூட அழகாக்கி பட்டு போல் மிருதுவாய் மின்னவைக்கக்கூடியது.
தேங்காய் எண்ணெயில் விட்டமின் E அதிகமுள்ளதால் ஸ்கால்ப்பில் ஏற்படகூடிய சேதங்களை தவிர்த்து முடி வளர்ச்சியினை அதிகரிப்பதோடு தலையில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கும். முதன் முதலில் இந்தியாவில் தான் தேங்காய் எண்ணெய் பயன்பாடு அதிகமாய் இருந்தது. தற்போது உலகெங்கும் இதன் பயன்பாடு அதிகரித்திருக்கிறது என்கிறார்கள். இதனை லிக்விட் கோல்ட் எனவும் புகழ்ந்து வருகிறார்கள்.
சரும பாதுகாப்பு
பொதுவாக தேங்காய் எண்ணெய் உடல் முழுவதும் தேய்த்து கடலை மாவு தேய்த்து குளித்தால் சருமம் பொலிவு பெறும். தேங்காய் எண்ணெயை தொடர்ந்து தடவி குளிப்பதால் சில வகையான சருமநோய்கள் கூட மட்டுப்படுத்தபடும். தேங்காய் எண்ணெய் முகத்திற்கு தடவுவதை தவிர்க்க சொல்கிறார்கள் மருத்துவர்கள். தேங்காய் எண்ணெய் முகத்தில் தடவுவதால் இதிலுள்ள கோமட்டோஜினிக் தன்மை நம்முடைய முகத்துவாரங்களை மூடிவிடக் கூடும் என்கிறார்கள்.
அதே போல் தேங்காய் பாலில் விட்டமின் C விட்டமின் E மற்றும் பல்வேறு விதமான சத்துக்கள் உள்ளன. இவை, கரும்புள்ளிகளை நீக்கி சருமம் பொலிவு பெற உதவும். வறண்ட சருமம் இருப்பவர்கள் தேங்காய் பாலை கழுத்து மற்றும் முகப் பகுதிகளில் பூசி அரைமணி நேரம் கழித்து கழுவினால் சருமத்திற்கு மிகுந்த நற்பயன் கிடைக்கும்.
தேங்காய் பாலில் காப்பர் அதிகமிருப்பதால் அது முகத்திற்கு தேவையான கொலஜனை அளித்து முகத்தளர்வினை இறுக்கி சரிசெய்யக்கூடிய சிறப்பம்சங்கள் உள்ளது. வெயிலில் ஏற்படக்கூடிய கறுமையை போக்கவல்லது. தேங்காய் பால் சருமத்தில் தொடர்ந்து பயன்படுத்தி வர சருமம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மின்னும்.
தேங்காய் பால் குளியல்
ஒரு வாளி வெதுவெதுப்பான நீரில் ஒரு கப் தேங்காய் பால் அரை கப் ரோஸ் வாட்டர் மற்றும் ஒரு கைப்பிடி ரோஜா இதழ்கள் சேர்த்து தலைக்கோ உடம்பிற்கோ குளித்து வர கேசமும் சருமமும் பட்டு போல பளபளப்பாய் மின்னும். அழகுக்கலை துறையில் இது ஒரு முக்கியமான மற்றும் தவிர்க்கமுடியாத அழகு பொருளாக விளங்குகிறது என்கிறார் வசுந்தரா.