சட்டுபுட்டு தேங்காய் ரெசிபிஸ்!
க்யூட் தேங்காய்… ஸ்வீட் ரெசிபிஸ்!
ஹாய் வாசகீஸ்,
'சட்டு புட்டு' தேங்காய் ரெசிபிஸ் 'சரமாரியா' வந்து குவிந்துவிட்டது. இந்த இதழில் கொஞ்சம்… அடுத்த இதழில் மிச்சம்… சமைத்து தூள் கிளப்புங்க!
கோக்கனட் ராகி ஸ்னாக்ஸ்
தேவையான பொருட்கள்: ராகி மாவு -ஒரு கப், தேங்காய் துருவல்- ஒன்றரை கப் பச்சை மிளகாய் விழுது- ஒரு டீஸ்பூன் அரிசி மாவு -ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள்- கால் டீஸ்பூன் வறுத்த ரவை -ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு, எண்ணெய் -தேவையான அளவு
தேங்காயை நன்றாக அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும். இந்த தேங்காய்ப் பாலில் ராகி மாவு, அரிசி மாவு, வறுத்த ரவை, பெருங்காயத்தூள் பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்து கெட்டியாக கலக்கவும் .பிறகு குட்டி குட்டி பகோடாக்களாக காய்ந்த எண்ணெயில்பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். செம டேஸ்டியான ஸ்நாக்ஸ் ரெடி.
கரகர தேங்காய்ப் பால்முறுக்கு
தேவையான பொருட்கள்: அரிசி மாவு- ஒரு கப், தேங்காய்ப் பால்- கால் கப் கடலை மாவு- முக்கால் கப், சீரகம்- நான்கு டீஸ்பூன் , வெள்ளை எள்- 2 டீஸ்பூன் வெண்ணெய் -ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: அரிசி மாவுடன் கடலை மாவு தேங்காய் பால் உப்பு சீரகம், வெள்ளையல் வெண்ணெய் சேர்த்து நன்கு பிசையவும் இந்த மாவில் சிறிது எடுத்து தேன்குழல் அச்சில் அல்லது முள்ளுஅச்சில்ல் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழிய கரகர மொறு மொறு தேங்காய் பால் முறுக்கு ரெடி.
– ஆதிரை வேணுகோபால், சென்னை
சம்பா கோதுமை – தேங்காய் அடை
தேவையான பொருட்கள்: சம்பா கோதுமை மற்றும் கடலைப்பருப்பு -1 கப் , தேங்காய் துருவல்-1 கப், சர்க்கரை வள்ளிக்கிழங்கு துருவல்-1/2 கப், சிவப்பு மிளகாய்-பேடகி-2 , பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை-தலா 1/2 கப், பொடியாக நறுக்கிய இஞ்சி, புளி-ஒரு சுண்டைக்காய்அளவு ,கல் உப்பு-தேவையான அளவு எண்ணெய்-அடை தயாரிக்க தேவையான அளவு விருப்ப பட்டவர்கள் எண்ணெய்யுடன் நெய் கலந்தும் உபயோகிக்கலாம்.
அலங்கரிக்க- வெண்ணெய் அல்லது flax seeds
செய்முறை : சம்பா கோதுமை, கடலைப்பருப்பு, சிவப்பு மிளகாய் மூன்றையும் தேவையான அளவு நீர் சேர்த்து அரைமணி நேரம் ஊறவைத் தெடுத்து, தேங்காய் துருவல் சிவப்பு மிளகாய் சர்க்கரை வள்ளிக்கிழங்கு துருவல், இஞ்சி, புளி சேர்த்து அடைபதத்திற்கு அரைத்தெடுத்து, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்ந்து நன்கு கலந்து,அடை வார்த்து. சுடச்சுட வெண்ணெய் அல்லது flax seeds னால் அலங்கரித்து பரிமாறவும். தேங்காய் சட்னி தொட்டுக்கொள்ள சுவையும் கூடும்.
-சீமந்தகமணி, பெங்களுரு
தேங்காய் ரொட்டி.
தேவையான பொருட்கள்: கோதுமை மாவு-1கப். வெண்ணெய்-2ஸ்பூன், தேங்காய் துருவல்-1/4கப், வறுத்த வேர்க்கடலைப்பொடி-2ஸ்பூன், வெல்லத்தூள்-1ஸ்பூன்., உப்பு-ஒரு சிட்டிகை, நெய்-1/4கப்.
செய்முறை: வாயகன்ற பாத்திரத்தில், கோதுமைமாவு, வெண்ணெய், தேங்காய்த்துருவல், வேர்க்கடலைப்பொடி,வெல்லத்தூள் உப்பு சேர்த்து , நன்கு கலந்து,கொஞ்சம் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி பதம் பிசைந்து மூடி வைத்து,1/4மணி நேரம் கழித்து சற்றே கனமாக சப்பாத்தியிட்டு தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் நெய் விட்டு மிதமான தீயில் இருபுறமும் வேக விட்டு இறக்கி மேலே நெய் தடவவும். சுவையான தேங்காய் ரொட்டி சுவைக்கத் தயார்.
ராகி கசகசா உருண்டை
தேவையானவை: வறுத்த தேங்காய்த்துருவல் -1கப். வறுத்த ரவை-1டேபிள் ஸ்பூன் வறுத்த கசகசா-1டேபிள் ஸ்பூன். வறுத்த ராகிமாவு-1/2கப். வெல்லத்தூள்-3/4கப். வறுத்த பொட்டுக்கடலை -2ஸ்பூன் ஏலத்தூள்-1டீ ஸ்பூன். நெய்-3டேபிள் ஸ்பூன்.
செய்முறை: ரவை,கசகசா,பொட்டுக் கடலையைப் பொடித்து, ராகிமாவு, தேங்காய்த்துருவல் சேர்த்துக் கலந்து வெல்லப்பாகு செய்து அதில் ஊற்றி கிளறி நெய் தொட்டு உருண்டை பிடிக்கவும். சுவையான ராகி கசகசா உருண்டை சுவைக்கத் தயார்.
-செ.கலைவாணி, மேட்டூர் அணை
தேங்காய் சுகியன்
தேவையானவை: தேங்காய் துருவல் – 1 கப் வெல்லம் — 1 கப் நெய் —–2 டேபிள் ஸ்பூன் ஏலக்காய்—- 1 டீ ஸ்பூன் உளுந்து—–1 கப் பச்சை அரிசி- 1 டேபிள் ஸ்பூன் நெய் (அ) ரீஃபைன்ட் ஆயில்- பொரிப்பதற்கேற்ப.
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் உளுந்து + அரிசி இரண்டையும் தண்ணீர் விட்டு 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை கரையவிட்டு வடிகட்டி ஒரு அகலமான வாணலியில் ஊற்றி பாகாக்கவும்.பாகுபதம் வந்ததும் தேங்காய் துருவல்+ ஏலப்பொடி போட்டு நெய் விட்டு நன்கு கிளறவும். நன்கு சுருண்டு வந்ததும் ஆற விட்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.பிறகு ஊறிய உளுந்து + அரிசியை வடித்து மிக்ஸியில் மாற்றி மையாக அரைத்து, .பஜ்ஜி மாவு பதத்திற்கு மாவை தயார் செய்யவும்.
பின் வாணலியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள தேங்காய் பூரணங்களை உளுந்து மாவில் முக்கி போடவும்.நன்றாக வெந்து லேசாக சிவந்ததும் எடுத்து விடவும்.
தேங்காய் டிரை ஃப்ரூட்ஸ் லட்டு
தேவையானவை: தேங்காய் துருவல்— 1 கப் முந்திரி, பாதாம், பிஸ்தா, நிலக்கடலை, வால்நட், பிளாக்ஸ் விதை (Flax seed), பேரிச்சம்பழம்- அனைத்தும் சேர்ந்து- 1 கப் நெய்- 2 டீ ஸ்பூன் ஏலப்பொடி – 1 டீ ஸ்பூன்.
செய்முறை: முதலில் முந்திரி, பாதாம், பிஸ்தா, நிலக்கடலை, வால்நட், பிளாக்ஸ் விதை ஆகியவற்றை வாணலியில் லேசாக சுடப்பண்ணி , ஆற வைத்து பேரீச்சம்பழத்துடன் சேர்த்து மிக்ஸியில் ரவைபோல் அரைத்து ஒரு கிண்ணத்தில் போடவும்.பின் தேங்காய் துருவல், நெய், ஏலப்பொடி சேர்த்து லட்டு போல் பிடிக்கவும்.இப்போது அனைவரும் விரும்பக்கூடிய ஆரோக்கியமான, சத்தான, சுவையான புதுவிதமான தேங்காய் டிரை ஃப்ரூட்ஸ் லட்டு ரெடி.
-நளினி ராமச்சந்திரன், கோவை
தேங்காய் அரிசிமாவு கொழுக்கட்டை.
தேவையான பொருட்கள்: புழுங்கலரிசி மாவு-200கிராம். தேங்காய்த்துருவல்- 1கப் சர்க்கரை தூள்-ஒன்றரை கப் ஏலப்பொடி-2ஸ்பூன்.
செய்முறை: அனைத்தையும் ஒன்றாகக் கலந்து நீர் விட்டுப் பிசைந்து கொழுக்கட்டைகைளாகப் பிடித்து இட்லித் தட்டில் வைத்து வேக வைத்தால் சுவையான தேங்காய் அரிசிமாவு கொழுக்கட்டை சுவைக்கத் தயார். புழுங்கலரிசி மாவிற்குப் பதில் வறுத்த கோதுமை மாவிலும் செய்யலாம், கொழுக்கட்டை.
கார கொழுக்கட்டை
தேவையானவை: புழுங்கலரிசி -3கப் தேங்காய்த்துருவல் -1கப் மிளகுத்தூள்-2டேபிள் ஸ்பூன் நெய்-50கிராம். நல்லெண்ணெய் –2டீஸ்பூன்
செய்முறை: புழுங்கலரிசி யை மூன்று மணிநேரம் ஊறவைத்து தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்து நீர் விடாமல், கரகரப்பாய் அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு அரைத்த மாவை ஊற்றி சுருளக் கிளறி இறக்கி ஆற விடவும்.நெய் தொட்டு கொழுக்கட்டைகளாய் பிடித்து மிளகுத்தூளில் புரட்டி இட்லித்தட்டில் வேகவைத்து இறக்கினால் சுவையான காரக் கொழுக்கட்டை சுவைக்கத் தயார்.
–செ.கலைவாணி, மேட்டூர்அணை
தேங்காய் தோசை
தேவையான பொருட்கள்: பச்சரிசி ஒரு கப் தேங்காய் அரை கப் தேவையான அளவு உப்பு.
செய்முறை: ஊறவைத்த பச்சரிசியுடன் தேங்காய் உப்பு சேர்த்து அரைத்து அப்போதே தோசை ஊற்றலாம் புளிக்க தேவையில்லை. கம கம வென தேங்காய் வாசனையுடன் தோசைகள் வெகு சுவையாக இருக்கும். தொட்டுக்கொள்ள சப்பாத்திக்கு செய்வது போல தால் செய்து கொள்ளலாம்.
-உமா மோகன்தாஸ், திண்டுக்கல்
(அடுத்த இதழிலும் தொடரும்…)