செல்போன் போதை!

செல்போன் போதை!
Published on
-ஜி.எஸ்.எஸ்.

மார்ட்டின் கூப்பருக்கு இப்போது வயது 93.  அமெரிக்காவில் வசிக்கிறார். அளவுக்கு அதிகமாக செல்போனை பயன்படுத்தாதீர்கள் என்கிறார்.

'இதில் என்ன அதிசயம்? இந்த ஆலோசனை ஏற்கனவே கேள்விப் பட்டதுதானே. தவிர 99 வயது முதியவருக்கு இப்படித்தானே கூறத் தோன்றும்?' என்று இதை அலட்சியப்படுத்தி விட முடியாது.

காரணம் முதல் செல்போனை 1973ல் கண்டுபிடித்தவர் இவர்தான்.   பொறியாளராகத் தன் வாழ்க்கையைக் கழித்தவர்.

மார்ட்டின் கூப்பர் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் தொழில்நுட்ப கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தவர்.  மின் பொறியியலை முக்கியப் பாடமாக எடுத்துக்கொண்டவர்.  பின்னர், அமெரிக்கக் கடற்படையில் சேர்ந்து கொரியன் யுத்தத்தில் ராணுவப் பணி புரிந்தார். பின்னர், டெலிடைப் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தில் சேர்ந்தார். அதற்கடுத்து 1954இல் மோட்டோரோலா நிறுவனத்தில் சேர்ந்தார் அந்த நிறுவனத்தின் சார்பில்தான் இவர் உலகின் முதல் செல்போன் உருவாக்கினார்.

செல்போனைத் தயாரிக்கும்போது அவர் முக்கியமாக இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்தினாராம். காது மற்றும் வாய் ஆகிய இரண்டு பகுதிகளையும் இணைக்கும் அளவுக்கு நீளமானதாக இருக்கவேண்டும் (அப்போதுதானே கேட்டுக்கொண்டே பேச முடியும்?). அதேசமயம் பாக்கெட்டில் போட்டுக் கொள்ளும்படி அது சிறியதாகவும் இருக்க வேண்டும்.

மக்கள் சராசரியாக தினமும் 5 மணி நேரம் தங்கள் செல்போனைப் பயன் படுத்துகிறார்கள் என்கிறது ஓர் ஆராய்ச்சி.  'அதெல்லாம் மிக அதிகம்.  ஒரு நாளைக்கு சில​ நிமிடங்கள் மட்டுமே செல்போனைப் பயன் படுத்துங்கள்.  வாழ்க்கையை வாழக் கற்றுக்கொள்ளுங்கள்' என்கிறார் கூப்பர்.  'உங்கள் முன்னுரிமை செல்போனாக மட்டுமே இருந்து விடக் கூடாது.  என்னுடைய செல்போனை தினமும் நான் சில நிமிடங்கள்தான் பயன்படுத்துகிறேன்'.  இப்படி பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் கூறியிருக்கிறார்.

தினமும் பல மணி நேரங்களுக்கு செல்போன் பயன்படுத்தினால் அதனால் சில பிரச்னைகள் ஏற்படும் –  முக்கியமாக இளம் வயதினருக்கு. கவனக்குறைவு ஏற்படும்.  மனதை ஒரு நிலைப்படுத்துதல் கடினமாக இருக்கும்.  சாதாரண செல்போன் வைத்திருந்தால் சுற்றியிருப்பவர்கள் நவீன ஸ்மார்ட் செல்போன்களை வைத்திருப்பதைப் பார்த்து மன இறுக்கம் உண்டாகும்.  உறவினர்களிடமும் நண்பர்களிடமும் பேசுவது குறைந்து போகும். திருமணம் போன்ற பொது நிகழ்ச்சிகளுக்குச் சென்றால்கூட செல்போனை மட்டுமே பார்க்கத் தோன்றும். இதனால் உறவுகள் சிதையும். அதிக நேரம் தூங்காமல் இருப்பதாலும் தொடர்ந்து செல்போன் திரையையே பார்த்துக்கொண்டிருப்பதாலும் பார்வைக் குறைபாடு ஏற்படும்.  முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் எதிரான கருத்துகள் வரும்போது மனநலம் பாதிக்கப்படும்.

ரு சில தொழில்நுட்ப வடிவமைப்பாளர்கள் எங்கோ இருந்துகொண்டு கோடிக்கணக்கானவர்களின் சிந்தனைகளையும் செயல்முறையையும் வாழ்க்கையையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அவலம் இது. இதைத் தோலுரித்துக் காட்டுகிறது 'சோஷியல் டைலமா' என்ற ஆவணப்படம்.

முகநூல், கூகுள், ஆப்பிள் போன்ற பல நிறுவனங்களின் முன்னாள் அதிகாரிகள் இதில் தோன்றி, ​தொழில்நுட்ப சாம்ராஜ்ய அதிபர்கள் எப்படி எல்லாம் மக்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைத்து லாபத்தை சம்பாதிக்கிறார்கள் என்பதை விளக்குகிறது இந்த ஆவணப் படம். மனித பலவீனங்களை எப்படி வணிகத்துக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதையும் இதற்கெல்லாம் முக்கிய கருவியாக செல்போன் எப்படி விளங்குகிறது என்பதையும் விளக்குகிறது.

வாட்ஸ் அப்பை எடுத்துக்கொள்வோம். அது நமக்கு இலவசமாகக் கிடைக்கிறது.  அதன்மூலம் செய்திகளை மட்டுமல்ல… புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றையும் அனுப்பமுடியும். வசதிதான். ஆனால், அளவுக்கதிகமாக இவற்றைப் பயன்படுத்துபவர்கள் உண்மையான உலகத்தில் தங்கள் ஆர்வத்தை இழப்பார்கள். அவர்களின் உணர்வுகள் என்பது வாட்ஸ்அப்போடு நின்றுவிடும். அது தினசரி வாழ்க்கையை மிகக் கடுமையாகப் பாதிக்கும்.  'பார்டர்லைன் பர்சனாலிடி டிஸ்ஆர்டர்' என்ற ஒருவகை மனநோய் உண்டு. வெறுமை உணர்வு, வெகு எளிதாக எதுவும் பிடிக்காமல் போவது, சுய பிம்பம் குறித்த பாதுகாப்பின்மை என்று இருப்பவர்கள் வாட்ஸ்அப்பை மேலும் அதிகமாக நாடுவார்கள். அவர்களுக்கு மேற்படி மனநோய் உண்டாகும்.

காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக மொபைலைப் பார்க்கிறீர்களா?  வீட்டு வேலைகளைச் செய்யும்போதும் இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை செல்போனை எட்டிப் பார்த்துவிட்டுச் செல்கிறீர்களா?  கழிவறைக்குக்கூட செல்போனை எடுத்துச் செல்கிறீர்களா? உங்கள் உடல் நலமும் மன நலமும் மிக விரைவில் கெட்டுவிட வாய்ப்பு உண்டு – அதாவது இது வரை கெட்டுப் போகாமல் இருந்தால்! விழித்துக்கொள்ளுங்கள்.  அனாவசியமான குழுக்களை வாட்ஸ்அப்பில் இருந்து நீக்குங்கள். இரவில் வெகு நேரம் செல்போன் பார்த்துக்கொண்டிருப்பதை மாற்றிக்கொள்ளுங்கள். மனிதர்களுடன் அதிகம் கலந்துரையாடுங்கள்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com