
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!
"கணபதி பாப்பா மோரியா" என்ற மகாராஷ்டிர மாநிலத்தில் ஒலித்தால் விநாயகர் சதுர்த்தி விழாக்கள் ஆரம்பமாகிவிட்டன என அர்த்தம். மும்பை மாநகரில் பிரசித்தி பெற்று விளங்குபவர் சித்தி விநாயகர். சித்தி – புத்திஎன இரு மனைவிகளுடன் வீற்று அருள்பாலிக்கிறார் வரப்பிரசாதி.
19.11.1801 வியாழனன்று முறைப்படி முதல் பூஜை செய்யப்பட்டது. நல்ல கருங்கல்லினால் ஆன 2½ அடி உயரம், 2 அடி அகலம் கொண்ட விநாயகர் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் சித்தி விநாயகர் கோயில் புதுப்பிக்கப்பட்டது. அழகான மண்டபத்தினுள் நடுநாயகமாக வீற்றிருக்கும் விநாயகர் 1500 கிலோ எடை கொண்டவர். கோயில் விதானத்தின் உட்புறம் முழுவதும் தங்கத்தினால் வேயப்பட்டுள்ளது.
மக்கள் தரிசனம் செய்ய வசதியாக 3 பிரதான வாயில்கள் 13 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மராட்டிய மாநிலத்தின் பிரசித்தி பெற்ற அஷ்ட விநாயகர்களின் உருவங்கள் கோயிலின் மரக்கதவுகளில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும்.
பொதுவாக, விநாயகரின் தும்பிக்கை இடப்புறம் அமைந்திருக்கும். மும்பை சித்தி விநாயகரின் தும்பிக்கை, தெற்கேயுள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மாதிரி வலப்புறமாக அமைந்துள்ளது. விசேடமாகும். விநாயகரின் மேற்புறமுள்ள வலதுகரம் தாமரை மலரையும், இடது கரம் சிறு கோடாரியையும், கீழ்ப்புறமுள்ள வலதுகரம் முத்து மணிமாலையையும், இடதுகரம் கொழுக்கட்டை நிரம்பிய கிண்ணத்தையும் ஏந்தி சதுர்ப்புஜ (நான்கு கரங்கள்) விநாயகராக காட்சி அளிக்கும் அழகே அழகு,
கோபுர அமைப்பு: இக்கோயில் ஒரு அரண்மனை போன்ற அமைப்பில் கட்டப்பட்டு இருக்கிறது. கோபுரத்தின் மேல் இருக்கும். 12 அடி உயர பிரதான கலசம்: 5 அடி உயர 3 கலசங்கள்; 3 ½ அடி உயர 33 கலசங்கள் (மொத்தம் 37) தங்கத்தினால் மெருகேற்றப்பட்டுள்ளது.
5 செவ்வாய்க்கிழமைகள்: தொடர்ந்து வாரா வாரம் 5 செவ்வாய்கிழமைகள் சித்தி விநாயகர் கோயில் சென்று அவரை வணங்கினால், நினைத்த காரியம் சித்தி பெறுமென்பது நம்பிக்கை. செவ்வாய்க்கிழமைதோறும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள். வரிசையில் பொறுமையாக நின்று தரிசிக்கும் பிள்ளையார் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். பாம்பு மாதிரி வளைந்து வளைந்து செல்லும் வரிசையில் 7-8 மணி நேரங்கள் நின்று தரிசித்து செல்வார்கள். செவ்வாய்க்கிழமை மட்டுமல்லாது மற்றைய தினங்களிலும் பக்தர்கள் கூட்டம் உண்டு. 'அங்கராகி', 'சங்கஷ்டி சதுர்த்தி நாட்களில் எள்ளுப் போட்டால் எள்ளு விழாது என்பது போல கூட்டம் அலை மோதும். 5 லட்சம் மக்களைத் தாண்டிவிடும் கால் கடுக்க மணிக்கணக்காக நின்று வணங்கி வழிபடுவார்கள்.
ஸ்பெஷல் வரிசையில் செல்ல கட்டணம் உண்டு. கோயிலின் முதல் மாடியில் ஏறியும் தர்மதரிசனம் செய்யலாம். தற்சமயம் தரிசனம் செய்ய ஆன்லைன் வழியே பதிவு செய்ய வேண்டும்.
கோயில் நேரம்: காலை 5.30க்குத் திறக்கும். கோயில் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். பிற்பகல் 12.05 முதல் 12.30 மணி வரை, நிவேதனம் செய்யும் பொருட்டு நடை அடைக்கப்படும். காலை 5½ மணி மற்றும் இரவு 7½ மணிக்கு ஆரத்தி எடுக்கப்படும். செவ்வாய் மற்றும் விசேட நாட்களில் நேரம் சற்று மாறுபடும்.
முக்கிய பங்கு: பிரபாதேவியில் அமர்ந்திருக்கும் சித்தி விநாயகர் கோயிலின் அருகே பல பெரிய அலுவலகங்கள், சிற்றுண்டி விடுதிகள், வங்கிகள் போன்றவைகள் அமைந்துள்ளன. போக்குவரத்து நெரிசலாக இருக்கும் முக்கியமான பகுதியாகும்.
தாதர் ரெயில் நிலையத்தில் இறங்கி மேற்கு புறப்பகுதி வழியே வெளிவந்து 30 நிமிடங்கள் நடந்தால் கோயில் வந்துவிடும். டாக்ஸியிலும் வரலாம். பெஸ்ட் (B.E.S.T) பஸ் வசதிகள் அநேகம்.
ஆஞ்சநேயர் சன்னிதி: "பிள்ளையாரில் ஆரம்பித்து ஆஞ்சநேயரில் முடிப்பது" எனக் கூறுவதுபோல் இக்கோயிலில் ஆஞ்சநேயருக்கென ஒரு தனிக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. வியாழன் மற்றும் சனிக்கிழமைகள் விசேஷ நாட்களில் இங்கே பக்தர்கள் கூட்டம் அலை மோதும் மராட்டிய மக்களின் ஏகோபித்த முழு முதற் கடவுளாக விளங்குகிறார் சித்தி விநாயகர்.
கணபதி பப்பா மோரியா
மங்கள மூர்த்தி மோரியா
– ஆர். மீனலதா, மும்பை
—————————————-
கும்பகோணத்தில் மடத்துத் தெருவில் உள்ள விநாயகர் கோயிலை, காசியை விட அதிக புண்ணியம் கொண்டதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. பழமை வாய்ந்த இந்த கோயில் கடந்த 1692ம் ஆண்டிலேயே திருப்பணி செய்யப்பட்ட கோயிலாகும்.கும்பகோணம் நகரின் மையப்பகுதியில் மடத்துத் தெருவில் அருள்பாலித்து வரும் பகவத் விநாயகர் கோயில், காசி விஸ்வநாதர் கோயிலின் இணை கோயிலாக திகழ்ந்து வருகிறது.
வேதாரண்யத்தில் ஸ்ரீபகவர் மகரிஷி தன் சீடருடன் வசித்து வந்தார். ஸ்ரீ பகவரின் முனிவரின் வயதான தாயார் இறக்கும் தறுவாயில் தன் மகனிடம் "நான் இறந்ததும் என் அஸ்தியை ஒரு கலசத்தில் சேகரித்து புனிதத் திருத்ததலங்களுக்கு எடுத்துச் செல், எங்கு என்னுடைய அஸ்தி மலர்களாக மாறுகிறதோ, அங்கு ஓடும் புனித நதியில் கரைத்து விடு" என்று கூறிவிட்டு உயிர் துறந்தார்.இதனால் ஸ்ரீ பகவர் தன் சீடருடன் தாயாரின் அஸ்தியை எடுத்துக்கொண்டு தீர்த்த யாத்திரை சென்றார். திருகுடந்தை வருகையில் காவேரி நதியில் நீராடும் போது, அவர் சீடனுக்கு மிகுந்த பசி ஏற்பட்டு அஸ்தி கலசத்தை திறந்து பார்க்கும் பொழுது அதில் பலகாரம் இல்லாமல் வெறும் மலர்களாக இருந்ததை கண்டு ஏமாற்றத்துடன் யாருக்கும் தெரியாமல் உடனே அதை மூடி வைத்து விடுகிறார். இச்செயல் குருவிற்கு தெரியாது. காசியிலே தான் அஸ்தி மலருமென்று எண்ணிய குரு நாதர் காசியிலும் மலராதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது சீடர் குடந்தை(கும்பகோணம்)யில் நடந்ததை கூறினார். மீண்டும் பகவர் கும்பகோணம் அடைந்து காவேரி ஆற்றில் ஸ்நானம் செய்து விட்டு, அஸ்தி மலர்களாக மாறியிருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சியுற்று அஸ்தியை கரைக்கிறார். இதனால் கும்பகோணத்துக்கு காசியை விடவும் வீசம் அதிகம் என்று காட்டியருளிய மரத்தடியில் இருந்த விநாயகரை இங்கேயே தங்கி தன் சீடருடன் வழிபடவே அன்று முதல் இந்த கணபதிக்கு "ஸ்ரீ பகவத் விநாயகர்" என்ற பெயர் வரலாயிற்று. காசிக்கு வீசம் பெரிது கும்பகோணம் என்று உணர்த்தும் வகையில் பகவரின் வலது கை முத்திரை உள்ளது. மூலஸ்தானத்தில் மூலவராக
எழுந்தருளி உள்ள பகவத் விநாயகர் மிகவும் அழகாக இருக்கின்றார். நவகிரக தோஷங்களை நீக்கியருளும் வரப்பிரசாதி. இவரது நெற்றியில் சூரியன், நாபிக்கமலத்தில் சந்திரன், வலது தொடையில் செவ்வாய், வலது கீழ்க்கை புதன், சிரஸில் வியாழன், இடது கீழ்க் கரம் சுக்கிரன், வலது மேல் கையில் சனி, இடது மேல் கையில் ராகு, இடது தொடையில் கேது என நவகிரகங்கள் குடி கொண்டுள்ளனர் நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை. இங்கே விநாயகர் சதுர்த்தி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
-சுதா வேதம்
—————————————-
எங்கள் ஊரான நாகப்பட்டினம் வெளிப்பாளையம் காடம்பாடியில் உள்ள "ஏழைப் பிள்ளையார் கோயில்" ஆன்மீகப் புகழ் பெற்ற விநாயகர் ஆலயங்களுள் ஒன்று. இக் கோயிலில் அருளும் கல்யாண சுந்தர விநாயகர் தான் ஏழைப் பிள்ளையார் என்றும் அழைக்கப் படுகிறார்.கல்யாணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, கன்னிப் பெண்கள் இந்த விநாயகருக்கு
அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு அர்ச்சனை செய்தால்.. உடனே திருமணம் நிச்சயம் ஆகி விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஒவ்வொரு சங்கடஹரசதுர்த்தி அன்றும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, நைவேத்தியம் என்று பிள்ளையாருக்கு நடைபெறும்.
ஏழை மக்களுக்கு என்றென்றும் அருள் புரியும் கடவுள் தான் இவர். மனதார பிரார்த்தனை செய்து, உண்டியலில் ஒரு ரூபாய் போட்டாலும்.. நாம் வேண்டியது கிடைக்கும். விநாயக சதுர்த்தி அன்று விஷேச அலங்காரத்துடன் ஜொலிக்கும் எங்கள் கணபதியைப் போற்றித் துதிப்போம்!!!!
-ஜெயா சம்பத், கொரட்டூர், சென்னை
—————————————-
தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு அருகில் உள்ளது கணபதி அக்ரஹாரம். இந்த கணபதியை அகத்தியர் வழிபட்டதாக வரலாறு. காவிரி ஆற்றங் கரையில் வயல் சூழ்ந்த பகுதியில் அருள் பாலிக்கிறார். நம் பிள்ளையார். இங்கு விநாயக சதுர்த்தி விழா 10 நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. இவ்வூர் மக்களுக்கு மகா கணபதியே குல தெய்வம். இவர்கள் களிமண் பிள்ளையார் வாங்கும் பழக்கம் கிடையாது. மாவு கொழக்கட்டையும் நெய்வேத்தியம் செய்வது இல்லை. மைதாவில் பூரணம் வைத்து எண்ணையில் பொரித்த கொழக்கட்டையை அவர் அவர் வீட்டில் செய்து மகா கணபதி ஆலயத்தில் வைத்து பூஜித்து வழிபாடு செய்வார்கள்.
-உஷா சங்கரன் பெங்களூரு மற்றும் சுஜாதா சிவசங்கர், மஸ்கட்.
—————————————-
* மதுரை சுந்தரேஸ்வரர் கோவிலில் விநாயகர் புலிக்கால்களுடன் காட்சி தருகிறார்.
* விருதுநகர் அருகே உள்ள திருச்சுழி சிவன் கோவிலில் தூணில் விநாயகியை தரிசிக்கலாம்.
* நாகர்கோவில் வடிவீஸ்வரம் கோவிலில் வீணை ஏந்திய கோலத்தில் அருள்கிறார்.
* திருநெல்வேலியை அடுத்த வாசுதேவநல்லூர் கோவிலில் வாள், கோடரி
தாங்கி வீற்றிருக்கிறார்.
-ஆர். பிரசன்னா, ஸ்ரீரங்கம்
—————————————-
எங்கள் வீட்டின் அருகே மிகப் பழமையான விநாயகர் கோயில் உள்ளது. விநாயகர் சதுர்த்தி க்கு முன்தினத்திலிருந்து விநாயகர் துதித்து பாடல்கள் ஒலிக்கும்.அப்போது திருவிளையாடல் , சரஸ்வதி சபதம்
போன்ற பக்தி படங்களின் உரையாடல்கள் போடுவார்கள். கேட்டு கேட்டு மகிழ்வோம்.அந்த படம் பார்க்காமலேயே காட்சிகள் கண்முன் தோன்றும்.அப்படித்தான் கற்பனைச் சக்தி கிடைக்கப் பெற்றேன்.ஓம் விநாயகனே போற்றி!போற்றி!
-மணிவண்ணன். ச சங்கராபுரம்.
—————————————-
நாகர்கோவில் சைமன்நகர் ஊரில்வீற்றிருக்கும் அருள்மிகு செல்வ விநாயகரை இதயத்தில் வைத்து வணங்கும் மக்களின் மனக்குறைகளை போக்கி தாய்வீடு போல் அரவணைத்து அனைவரையும் உயர்ந்த நிலையைஅடைய செய்வார்.
குழந்தைகளை கல்வியில் மிக சிறப்படைய செய்வார். இங்கு விநாயகர், சிவன், உண்ணாமுலை அம்மன்,முருகர், ஶ்ரீனிவாசப்பெருமாள், சண்டீகேஸ்வரர், நாகர், ராமர்_சீதை, அனுமான், ஶ்ரீதுர்க்கை அம்மன், காலபைரவர், நவகிரகங்கள் உள்ளன.
ஆவணி மாதத்தில் மஹா விநாயகர் சதுர்த்தி மிக சிறப்பாக கொண்டாடு வோம். கொழுக்கட்டை, கொண்டைகடலை, அவல்,பொரி, மோதகம், சர்க்கரை பொங்கல் என பல வகை பதார்த்தங்கள் விநாயகருக்கு படைக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படும். மஹா சங்கடகர சதுர்த்தி அன்று 21 வகையான அபிஷேகம் விநாயகருக்கு நடக்கும். சித்திரை முதல் தேதியில் விநாயகருக்கு நிறைய பழவகைகள்படைக்கபட்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும். இங்கு வருகைத்தரும் மக்களின் உள்ளத்தில் ஒளிவிளக்காய் இருக்கும் விநாயகபெருமான் அருளால் மக்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றனர்.
-வி.கலைமதிசிவகுரு, நாகர்கோவில்.