
விஷம் போல் விலைவாசி ஏறிவிட்டது என்பார்கள். அந்த விஷத்தின் விலையே ஒரு லிட்டர் 80 கோடி ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது என்றால்…?
துருக்கி நாட்டில் தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் Sanliurfa மானிலத்தில், தேள் இனப்பெருக்க ஆய்வகம் நடத்தி வருபவர் மெடின் ஓரன்லர் (Metin Orenler) என்பவர். இவரது சோதனைச் சாலையில், ஆயிரக்கணக்கான தேள்கள் கண்ணாடி போன்ற பிளாஸ்டிக் பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து தினமும் ஊழியர்கள் விஷம் எடுக்கிறார்கள். ட்வீஸர்ஸ் மற்றும் இடுக்கி (tweezers and tongs) போன்ற உபகரணங்களை வைத்து, ஒவ்வொரு தேளையும் வெளியே எடுத்து ஒரு கண்ணாடிக் குடுவையினுள், விஷத்தை "விழ" வைக்கிறார்கள். ஒரு தேளிடமிருந்து இரண்டு மில்லிகிராம் விஷம் மட்டுமே கிடைக்கும்.
தினமும் இரண்டு கிராம் விஷம் சேகரிக்கப்படுகிறது. அதாவது சுமார் ஆயிரம் தேள்களிடமிருந்து. இந்த விஷம் உறைய வைத்து பின்னர் பொடியாக்கப்படுகிறது. இவரது சோதனைச் சாலையில் பல்வேறு வகையைச் சேர்ந்த 20,000 தேள்கள் இருக்கின்றனவாம்.
இந்த "தேள் பண்ணையில்" இவற்றுக்கு உணவளித்து வளர்த்து, இனப் பெருக்கம் செய்து விஷம் எடுக்க உபயோகப்படுத்துகிறார்கள். இந்த விஷப் பொடியை, ஃப்ரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.
வலி நிவாரணிகள், ஆன்டிபயாடிக்ஸ், போன்ற மருத்துவப் பொருட்கள் தயாரிக்க இந்த விஷப் பொடி தேவைப்படுகிறது. மத்திய, தென் அமெரிக்க பகுதியைச் சேர்ந்த சிலவகைத் தேள்களின் கொடுக்குகளில் இருந்து எடுக்கப்படும் மார்கடாக்சின் மூலம், ரத்த நாளங்களில் புதிய ரத்த செல்கள் உருவாக உதவும். அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் இந்த விஷம் தேவைப் படுகிறது.
இதய பைபாஸ் அறுவை சிகிச்சைகளின் போதும் இது உதவும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இந்த ஆராய்ச்சிக்குத் தலைமை தாங்கிய லீட் பல்கலைக் கழக பேராசிரியர் டேவிட் பீச், தேளின் விஷம் மிக திறன் வாய்ந்தது என்று குறிப்பிடுகிறார்.
இதன் சாத்தியக் கூறுகள் குறித்து சென்னையின் பிரபல நரம்பியல் நிபுணரும், சரும நோய் மருத்துவரும், எழுத்தாளருமான டாக்டர். ஜே. பாஸ்கர் அவர்களைத் தொடர்பு கொண்டோம்.
"தன் எதிரிகளைத் தாக்கவும், இரையைப் பிடிக்கவும் இயற்கை, தேளுக்கு விஷத்தைத் தந்திருக்கிறது. தேளின் விஷம், புற்று நோய் உருவாக்கும் செல்களை அழிப்பதிலும், அதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதிலும் உதவுவதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. சைடோடாக்சிக் (cytotoxic) மருந்துகளில் தேளின் விஷம் பயன்படுத்துவதால், இவை புற்று நோய்க்குக் காரணமான, நம் உடலில் உள்ள செல்களின் அபரிமிதமான வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியும் என்று நம்பப்படுகிறது. ஆனால், எல்லாமே பரிசோதனை நிலையில் தான் இன்னும் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது" என்று தம் கருத்துக்களைத் தெரிவித்தார்.