சுற்றுலா டூ ஸ்கேண்டினேவியா! பகுதி – 2

சுற்றுலா டூ ஸ்கேண்டினேவியா! பகுதி – 2
Published on

நார்வே நடுவே

பயண அனுபவம் : பத்மினி பட்டாபிராமன்

ஸ்வீடன் நாட்டின் மால்மோ நகரில் நாங்கள் கண்ட Twisting Torso எனப்படும் 54 மாடிகள் கொண்ட பொறியியல் அதிசயம் பற்றி சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா?

ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக் ஹோமிலிருந்து நாங்கள் சென்றது நார்வே நாட்டின் கொள்ளை அழகு நகரமான பெர்கன் (Bergen)தான்.

அதற்கு விமானத்தில் செல்ல திட்டமிட்டு, முதலில் ஸ்டாக் ஹோம் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனை அடைந்தோம். விமானத்தில் செல்ல, ரயில்வே ஸ்டேஷனா?

ஆம்…! ஸ்டாக் ஹோம் ஏர்போர்ட்டுக்குச் செல்ல ஆர்லண்ட்டா எக்ஸ்பிரஸ் என்ற மின்சார ரயில் ஒரு மணி நேரத்துக்கு ஆறு முறை செல்கிறது. இருபது நிமிடம் பயணித்தால் ஸ்டாக் ஹோம் ஏர்போர்ட்.

ஸ்வீடனில் இருந்து நார்வே நாட்டின் பெர்கன் செல்ல விமானத்தில் ஒன்றரை மணி நேரம்

ஆகிறது. உலகின் அழகிய நாடுகளில் ஒன்று நார்வே. மலைகளும் பனி ஆறுகளும், ஃப்யோர்ட்ஸ்களும் (Fjords) நிறைந்தது. Fjords என்பது, இரண்டு மலைகளுக்கு நடுவே செல்லும் கடல் நீரின் ஆழமான குறுகிய அழகான நீர்ப்பரப்பு.

நார்வே முழுவதும் இம்மாதிரி Fjords ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. இவற்றை நார்வேயின் ஆன்மா எனலாம். உலகின் ஆறாவது பணக்கார நாடான நார்வேயில் மீன் பிடித்தல், மலையேற்றம், பனிச்சறுக்கு விளையாட்டு, இவையெல்லாம் மக்களின் வாழ்க்கை முறை.

பெர்கன் பல்கலைக் கழகம்
பெர்கன் பல்கலைக் கழகம்

நார்வேயில் முதலில் நாங்கள் சென்ற பெர்கன் உலகின் மொத்த அழகையும் அள்ளிக்கொண்டு வந்திருக்கும். மலைகளாலும், Fjords நீர்ப்பரப்புகளாலும் சூழப்பட்ட நார்வேயின் இரண்டாவது பெரிய, பழைமையான நகரம். இங்கிருக்கும் பெர்கன் பல்கலைக் கழகம் உலகளவில் புகழ் பெற்றது.

இதன் துறைமுகத்தை, ஐரோப்பாவின் முக்கியமான ஹார்பர் என்கிறார்கள். இறங்கியதும், முதலில் கண்ணில்பட்டது மிக அழகான பெர்கன் வீடுகள்தான்.

நல்ல மழை. நமக்குக் குளிர்கிறது. ஆனால், அந்த ஊர் பெண்கள் மினி ஸ்கர்ட் அணிந்து, குடை பிடித்துச் செல்கிறார்கள். கேட்டால் இது அவர்களின் கோடைக் காலமாம்! (ஜூன் மாதம்) வருடத்தில் ஒன்பது மாதங்களுக்கும், கம்பளி கோட்டுக்குள் புதைந்து கிடப்பவர்களுக்கு இதுதான் குறைந்த உடை அணியும் நேரமாம்.

மீன் மற்றும் பூக்கள் சந்தை
மீன் மற்றும் பூக்கள் சந்தை

பெர்கனின் புகழ் பெற்ற மீன் மற்றும் பூக்கள் சந்தைக்குள் (என்ன ஒரு contrast – Fish and Flower Market!) நுழைந்தோம்.

12ம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டதாம் இது. கடல் உணவுகளின் வாசம் ஒருபுறம், மயக்கும் மலர்களின் மணம் மறுபுறம். புதிதாகப் பிடித்த ஃப்ரெஷ் கடல் உணவுகளை வீட்டுக்கு வாங்கிச் செல்வோரும், கடைகளின் வாசல் ஷேடில் அமர்ந்து சுடச்சுட சமைத்த ஸீ ஃபுட் சாப்பிடுவோருமாக பெருங்கூட்டம்.

ப்ரிக்கன் துறைமுகத்தை (Bryggen) ஒட்டிய வரிசை வீடுகள் மற்றும் மலைச்சரிவு ஐரோப்பிய பாணி வீடுகள் பெர்கனின் தனி அழகு. கோச்சில் செல்லும்போது, மழை வழியே அந்த வீடுகள், அழகிய ஐரோப்பிய பெயிண்டிங் போல இருந்தன.

அடுத்து, பெர்கனில் நாங்கள் சென்ற இடம் The Fløibanen Funicular Ride. கடல் மட்டத்திலிருந்து 320 மீட்டர் உயரத்தில் இருக்கும் ஃப்லோயன் மலை (Fløyen Mountain) உச்சிக்கு வின்ச்சில் செல்லும் ரைடு.

மேலே செல்லச் செல்ல, கீழே கப்பல்கள் நிற்கும் துறைமுகமும் ஊர்ந்து செல்லும் படகுகளுடன் கடலும், வீடுகளும், மெல்லிய மழைச்சாரலில் பனோரமிக் வியூவாக விரிகின்ற காட்சிகள்

வீடியோவிலோ, கேமராவிலோ அடக்க முடியாத அழகு. நம் மனதால் மட்டுமே சிறைபிடித்து வைக்கக்கூடிய காட்சிகள்.

அங்கு இருக்கும் ரெஸ்டாரன்டுகள், சூடாக காஃபி, டீ, சாண்ட்விச் அளிக்கக் காத்திருக்கின்றன.

வின்ச்சிலிருந்து இறங்கி, சுற்றிச் சுற்றி வந்து மனமே இல்லாமல் வின்ச்சில் ஏறி இறங்குமுகமாய்த் திரும்பினோம். அன்றிரவு பெர்கனின் ஸ்கேண்டிக் விக்டோரியா ஹோட்டலில் தங்கினோம்.

டுத்த நாள் காலை நார்வேயின் தலைநகர் ஆஸ்லோ நோக்கி...

பெர்கனில் இருந்து கிளம்பி கோச், ரயில், சிறு படகு என்று மாறி மாறி, நீர்ப்பரப்புகளை, அருவிகளை ரசித்துச் செல்லும் உலகின் மிக மிக அழகான பயணம். காலை ஹோட்டலில் கான்டினென்டல் ப்ரேக்ஃபாஸ்ட். நாமே பேன்கேக், வாஃப்ல் (waffle) தயாரித்துக் கொள்ளத் தேவையான உபகரணங்கள், மாவு வைக்கப்பட்டிருக்க அவற்றையும், டோஸ்டரில் ப்ரெட்களையும், நார்வேயின் ஸ்பெஷலான பலவித பெர்ரிஸ், ஆப்பிள் போன்ற பழங்களையும் ஒரு கை பார்த்துவிட்டுக் கிளம்பினோம்.

நீண்ட பயணம் காத்திருக்கஇனி, லஞ்ச் எங்கேஎன்ன கிடைக்குமோ…?

அழகிய பெர்கனுக்கு பிரியாவிடை கொடுத்து, வாஸ் (Voss) என்னும் இடத்துக்கு எங்கள் கோச்சில் சென்றோம். பெர்கனிலிருந்து நூறு கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பது வாஸ். அங்கிருந்து மிர்டல் (Myrdal) சென்று இன்னொரு ரயில் மாறி ஃப்ளாம் செல்ல வேண்டும் என்றார்கள்.

தி ஃப்ளாம் ரயில்வே (The Flam Railway)

ஃப்ளாம் ரயில்வே
ஃப்ளாம் ரயில்வே

உலகின் மிக அழகான ரயில்வே என்று புகழ் பெற்றிருப்பது ஃப்ளாம் ரயில்வே. போகும் வழி முழுவதும் ஏரிகள், அருவிகள், கணக்கற்ற Fjords என்று இயற்கையின் மூச்சடைக்க வைக்கும் அற்புதங்களை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எனலாம்.

வாஸ் ஸ்டேஷனில் கொஞ்ச நேரம் காத்திருந்து அங்கிருந்த கடைகளை மேய்ந்து விட்டு, திரும்பியபோது ஒரு நீண்ட சிவப்பு நிற ரயில் வர, அதில் ஏறினோம்.

''இது, 'ஃப்ளாம்பானா' என்ற இடம் வரை செல்லும். பின்னர் நாம் வேறு ரயில் ஏற வேண்டும்" என்றார் எங்கள் கைடு. சுத்தமான ரயில் இருக்கைகள். ஆர்ப்பாட்டம் இல்லாத நார்வே மக்கள். கூச்சலிட்டு ரசித்தது எங்களைப் போன்ற சுற்றுலா பயணிகள்தான்ஃப்ளாம்பானாவில் இறங்கினோம். சுற்றிலும் பனி படர்ந்த மலைகள். இனி மற்றோர் ரயிலில்.

பள்ளத்தாக்குகள், Fjords, மலைப் பாதைகளில் பயணம்

சிறிது நேரம் காத்திருந்த பிறகு பச்சை நிற ஃப்ளாம் ரயில்வேயின் ரயில் வந்து நிற்க, அதில் ஏறினோம்.

"இந்தப் பயணம் உங்களால் மறக்கவே முடியாத ஒன்று" என்றார் கைடு.

கிளம்பிய சற்று நேரத்திற்கெல்லாம் ரயில் நின்று விட்டது. பக்கவாட்டில் ஜன்னல் வழியே எங்கள் மேல் அபிஷேகமாய் நீர்எங்கிருந்து வருகிறது? திகிலுடன் பார்த்தோம்

(தொடர்ந்து பயணிப்போம்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com