என்றும் இளமை என்றும் இனிமை!

என்றும் இளமை என்றும் இனிமை!
Published on

அழகோ அழகு – 5

– அழகுக்கலை நிபுணர் Dr.வசுந்தரா

யதாவதைத் தடுக்கும் சக்தி நம் கையில் இல்லை. ஆயினும், அதனைத் தாமதப்படுத்தி முடிந்த மட்டிலும் இளமையாகத் தோற்றமளிக்க முயற்சிக்கலாம் அல்லவா? ANTI – AGING பற்றித்தான் நாம் இப்போது பேசப்போகிறோம்.

அழகுக்கலை நிபுணர் Dr.வசுந்தரா
அழகுக்கலை நிபுணர் Dr.வசுந்தரா

குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரையிலான வளர்ச்சி ONWARD AGING என்றும், 25 வயதுக்கு மேலே DOWNWARD AGING என்றும் கூறப்படுகிறது. வயது ஏறுகிறதே என்று நினைத்துக் கவலைப்படாமல், வயதாவதால் ஏற்படும் உடல், மன மாற்றங்கள், அந்த மாற்றங்களை எதிர்கொள்வது எப்படி என்று பார்ப்போமா?

முதலில் நமக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது என்பதை முழுமனதுடன் ஒப்புக் கொள்ளும் மனோதிடம் வேண்டும். நம் உடலில் ஒவ்வொரு விநாடியும் பழைய செல்கள் மறைந்து புதிய செல்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். வயது ஏற ஏற, புது செல்கள் உருவாவது தாமதமாகத்தான் நிகழும். இதனால் சருமத்தின் மேல் பகுதி மெலிதாக மாறுவதோடு, மெலனின் (MELANIN) நிறமியின் செயல்பாடும் குறையத் தொடங்குவதால் வயதான தோற்றம் ஏற்படுகிறது. ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முகச் சுருக்கங்கள், லென்டிகோ (LENTIGO) எனப்படும் புள்ளிகள் காணப்படும். இவை எல்லாமே வயதாவதால் ஏற்படும் மாறுதல்கள்தான்.

மீள் திசு அழிவு (ELASTOSIS) – சருமத்தின் அடியில் இருக்கக்கூடிய புரதம் சுருங்குவதாலோ அல்லது உடைந்து போவதாலோ ஏற்படக்கூடிய சரும பாதிப்பு. வெளிச் சூழ்நிலை மாறுதல்களும், தட்பவெப்ப நிலை, காற்று மாசு போன்றவையும் கூட நம் சருமத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி வயதான தோற்றத்தைக் கொடுக்கும்.

வயதாகும்போது உடலில் உள்ள ரத்தக் குழாய்கள் மென்மையாக மாறும். இதனால் ஸெனைல் பர்புரா (SENLIE PURPURA) என்று சொல்லக்கூடிய காயங்கள், ரத்தக் கசிவு சருமத்தில் ஏற்படலாம். எண்ணெய் சுரப்பிகளின் செயல்திறன் வேகம் குறைவதால் சருமம் உலர்ந்து காணப்படும். குறிப்பாக, மாதவிடாய் கடந்த பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்படும். இதனால் தொடுதல், குளிர், வெப்பம், அதிர்வு இவற்றை உணரும் சக்தி குறையும். காயம் ஏற்பட்டால் ஆறுவதற்கு நாளாகும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவைகளாலும் சரும மாறுதல்கள் ஏற்படும்.

சரும மாறுதலினால் உண்டாகும் வயதான தோற்றத்திற்கு வாழ்க்கை முறை ஒரு முக்கியக் காரணம். சரியான தூக்கமின்மை, உணவுப் பழக்கம் மற்றும் பரம்பரை போன்ற காரணங்களாலும், குடி, புகைப் பழக்கம் இருந்தாலும் சீக்கிரமே வயதான தோற்றம் ஏற்பட்டு விடும். வெளியில் வேலை நிமித்தமாக அதிகம் செல்பவர்கள், தலை, முகம், கைகள் இவற்றை முறையாக கவர் (COVER) செய்யாமல் சென்றால் வெயில், காற்று, சுற்றுப்புற மாசு மூலம் சரும பாதிப்புக்கு ஆளாவர். கோபம், அடிக்கடி முகம் சுளித்தல், தூங்கும் நிலை, எல்லாவற்றுக்கும் மேலாக மன அழுத்தம் போன்றவையும் முதுமைத் தோற்றத்திற்கு முக்கியக் காரணங்கள்.

30 – 40 வயதுக்கு மேல் கன்னங்கள், தாடை போன்றவை இறங்கி தொய்ந்தது போல் தோன்றும். நெற்றியில் சுருக்கங்கள், கோடுகள் ஏற்படும். வயதாவதினால் உண்டாகும் இந்த மாற்றங்களை நம்மால் முற்றிலுமாகத் தடுக்க முடியாவிட்டாலும் அவை அதிகம் வெளியில் தெரியாமலும், அவை ஏற்படுவதை தாமதப்படுத்தி நம்மை இளமையாகக் காட்டவும் என்ன வழிகள் உள்ளன? இதோ உங்களுக்காக…

ண்ணெய் சுரப்பிகளின் மெதுவான செயல்பாடு காரணமாக சருமம் உலர்ந்து விடும். அரிப்பு ஏற்படும். இதனைத் தவிர்க்க, நல்ல மாய்ஸ்சரைசர் (MOISTURIZER), கைகள், உடல் மற்றும் கண்களுக்கென தனித்தனியாகக் கிடைக்கும் கிரீம் / லோஷன் உபயோகிக்கலாம். வெளியில் செல்பவர்கள் ஸன் ஸ்கிரீன் லோஷன், தொப்பி, குளிர்க் கண்ணாடி கண்டிப்பாக அணிந்து, புற ஊதாக் கதிர்களின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

பழங்கள், குறிப்பாக நன்கு பழுத்த வாழைப் பழத்தை மசித்து, கழுத்து, முகம் முழுவதும் மசாஜ் செய்து தடவி பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து முதலில் வெதுவெதுப்பான நீரிலும் பின்னர் குளிர்ந்த நீரிலும் சுத்தம் செய்ய வேண்டும்.

ஆர்கன் எண்ணெய் (ARGAN OIL) சில துளிகள் எடுத்து இரவில் படுக்குமுன் தலையிலும், முகத்திலும் தடவி மறுநாள் காலை சுத்தம் செய்தால் தலைமுடி பளபளப்பதோடு, முகமும் புத்துணர்ச்சியுடன் ஜொலிக்கும். பாதாம் எண்ணெயிலும் இது போல் செய்யலாம்.

அவகாடோ (AVOCADO) பழத்தை மசித்துத் தடவலாம். தேங்காய்ப் பால் எடுத்து, அதில் பஞ்சை நனைத்து முகம், கைகளில் தடவி அரைமணி கழித்து, சோப் பயன்படுத்தாமல், குளிர்ந்த நீரில் சுத்தம் செய்யலாம். சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும்.

முப்பது வயதுக்கு மேல் மெலனின் உற்பத்தி குறைவால் தலை முடி நரைக்கத் தொடங்கும். மிருதுத்தன்மை இழந்து கடினமாக மாறும். பெண்களை விட ஆண்களுக்கு சீக்கிரத்தில் வழுக்கை விழுந்து விடும். தேங்காய் எண்ணெய் சிறிது எடுத்து லேசாக சூடுபண்ணி முடியில் நன்கு தடவ வேண்டும். இரவில் தூங்குமுன் தடவி, மறுநாள் அல்லது இரண்டு நாட்கள் கழித்து தலைமுடியை நன்றாக அலசி விடவும்.

கறிவேப்பிலை அரை கப் எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து, அத்துடன் அரை கப் தயிர் கலந்து தலைமுடியில் தடவி அரை மணி நேரம் கழித்து அலசினால், முடி வேர்க்கால்களுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைத்து நரை ஏற்படுவதைத் தடுக்கும். தலைமுடி அதிகம் கொட்டினால் அடிக்கடி ட்ரிம் (TRIM) செய்யலாம் அல்லது கலர் செய்தாலும் தலைமுடி வயதான தோற்றம் கொடுக்காது.

முகம், தலைமுடி போல கைகளும் வயதைக் காட்டிக் கொடுத்துவிடும். வயதாகும்போது கைகளில் கொழுப்புச் சத்து குறைவால் கோடுகள் உண்டாகும். கைகளினால் நிறைய வேலைகள் செய்வதால் கண்டிப்பாக கவனம் தேவை. கைகளுக்கென பிரத்யேகமாக உள்ள க்ரீம் உபயோகிக்கலாம். சர்க்கரை நான்கு டேபிள் ஸ்பூன், இரு எலுமிச்சைப் பழ சாறு, இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் இந்த மூன்றும் கலந்து கைகளில் தேய்த்து பத்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரிலும் பின்னர் குளிர்ந்த நீரிலும் சுத்தம் செய்ய வேண்டும்.

முதுமைத் தோற்றம் தெரியாமல் இருக்க தொடர்ந்து எண்ணெய் மசாஜ் செய்வது நல்லது. பாதாம் எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஏலாதி தைலம், குங்குமாதி தைலம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

மசாஜ் செய்து தேய்த்த எண்ணெய் உடலில் தங்கி விடாமல் இருக்க வீட்டிலேயே BODY பாலிஷ் தயாரிக்கலாம். அரிசி மாவு 200 கிராம், தண்ணீர், ரோஸ் வாட்டர் தலா 100 மில்லி கலந்து உடம்பில் தேய்த்து சுத்தம் செய்தால் எண்ணெய் பசை நீங்கி விடும்.

மேற்சொன்னவை தவிர, கடைகளில் கிடைக்கும் க்ரீம்கள் (விட்டமின் E மற்றும் C கலந்தது) மூலிகை அடிப்படையிலான தரமான மாய்ஸ்சரைசர், லோஷன் உபயோகிக்கலாம். தலைமுடிக்கு தரமான ஷாம்பு, சீயக்காய் பயன்படுத்தலாம். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இவற்றை செய்து வந்தாலே போதுமானது.

வயதானால் என்ன? அதை ஏன் மறைக்க வேண்டும்? என கேட்கத் தோன்றுகிறதா? நம் மனதையும், உடலையும் என்றும் இளமையுடனும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொண்டால் நம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உள்ளும் புறமும் சேர்ந்ததுதானே அழகு! ஆகவே, எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஆரோக்கியமாக, மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாலே வயதாவதைத் தள்ளிப்போடலாம்.

– தொகுப்பு : மங்கை ஜெய்குமார்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com