முத்துக்கள் மூன்று!

முத்துக்கள் மூன்று!
Published on
தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன்
முருங்கை மூலம் அழகு சாதனங்கள்!

முருங்கைக்காயிலும், முருங்கைக்கீரையிலும் இரும்புச் சத்து நிறைய இருக்கிறது , அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அல்லவா?

ஆனால் இந்த முருங்கையிலிருந்து 40 வகை மதிப்பு மிக்க பொருட்களை உற்பத்தி செய்ய முடியும், அதன் மூலம் லட்சக் கணக்கில் சம்பாதிக்க முடியும் என்று நிரூபித்து வருகிறார் திருமதி. பொன்னரசி.

உணவுப் பொருள் மட்டுமல்ல, அழகுப் பொருட்களும் தயாரித்து விற்பனை செய்கிறார். திண்டுக்கல் மாவட்டம் ஆரவல்லோடு கிராமத்தைச் சேர்ந்தவர். பத்து வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வருபவர்.

Arasi Moringa Products என்ற பெயரில் முருங்கை சூப், முருங்கை எண்ணை, முருங்கைப் பொடி, உட்பட பலவகை உணவுப் பொருட்களையும், சோப், முக ஆயில், லிப் பாம் போன்ற அழகுப் பொருட்களையும் முருங்கையிலிருந்து தயார் செய்கிறார்.

40 வகை முருங்கைப் பொருட்கள் இவரது ஒருங்கிணைந்த பண்ணையில் தயாரிக்கப்படுகின்றன. சாதனையாளர் விருது, சிறந்த தொழில் முனைவர் விருது உட்பட பல விருதுகளையும் சான்றிதழ்களையும் பெற்றிருக்கிறார் இந்த முருங்கை அரசி.

**********************

இட்லி மூலம் சேவை

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள ஆலாந்துறை வடிவேலாம்பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள். 85 வயதானவர். 30 வருஷமாக இட்லி கடை நடத்திவரும் இவர், ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வருகிறார். உதவிக்கு யாரும் இல்லாமல் தனி ஆளாக இட்லி, சட்னி, சாம்பார் என்று தயாரித்து விற்பனை செய்கிறார்.

சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது இந்த இட்லிக் கடை. இவரது சேவையைப் பற்றி கேள்விப்பட்ட  மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, விறகு அடுப்புக்கு மாற்றாக சமையல் எரிவாயு அடுப்பு, கிரைண்டர், மிக்சி, ஆகியவற்றை கமலாத்தாளுக்கு வழங்கினார். பாரத் கேஸ் மாதம் தோறும் இரண்டு சிலிண்டர்களையும், ஹெச் பி கேஸ் ஒரு சிலிண்டரையும் இந்த மூதாட்டிக்கு வழங்கி வருகின்றனர்.

மஹிந்திரா குழுமம் தற்போது இவருக்கு வீடு கட்டிக் கொடுத்து உள்ளது.  அன்னையர் தினத்தன்று இவரிடம் புதிய வீட்டின் சாவியை, மஹிந்திரா குழுமத்தின் திருப்பூர் முதன்மை செயல் அதிகாரி வழங்கினார்.

**********************

பழங்கள் மூலம் பரிவான சேவை

னநல ஆலோசகர் கல்யாணந்தி சச்சிதானந்தன்,ஏழை எளியோருக்கு பிறந்த மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக 'சூப்பர் ஹூமன்ஸ்' என்ற பெயரில் ஒர் நிறுவனம் துவங்கி அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருபவர். இலங்கையில் பிறந்தாலும் இவரது பூர்வீகம் தமிழ்நாடு. இவர் வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில்தான். அப்பா சச்சிதானந்தன் மருத்துவர், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகிறார்.

கல்யாணந்தி, ஃபார்மஸி பட்டப் படிப்பை முடித்து விட்டு, உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார்.  'புராஜக்ட் பியூச்சர் இந்தியா' என்ற அமைப்பை  நிறுவி, சமூகத்தில் பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்குத் தொடர்ந்து உதவி வருகிறார்.

தற்போது வறுமை கோட்டுக்கு கீழ், குடிசை பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்கு, சரியான ஊட்டச்சத்து கிடைக்காவிட்டால் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இதனால், படிப்பில் கவனம் செலுத்த முடியாது என்பதால் 'டாக்டர்ஸ் அவே' என்ற பெயரில் குழந்தைகளுக்கு வாழை, மாதுளம், திராட்சை, பேரீச்சம் போன்ற பழங்களை வழங்கி வருகிறார். வாரத்திற்கு நான்கு நாட்கள் என, மாதத்திற்கு 16 நாட்கள் பழங்களை வழங்குவதன் மூலம் 1500 குழந்தைகள் பயனடைகிறார்கள்.

குடிசைப்பகுதியில் வசிக்கும் இளம் பெண் குழந்தைகளுக்கு, ரத்தசோகை பாதிப்பு அதிகம் இருக்கும். 'இளவரசி' என்ற திட்டம் மூலம் சானிட்டரி நாப்கின்கள், பேரீச்சம் பழங்களை வழங்கி வருகிறார்கள்.

குழந்தைகளின் கல்வி விஷயத்திலும் அதிக் கவன்ம் செலுத்தி வருகிறார் கல்யாணந்தி.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com