பிரசாதம்!

  பிரசாதம்!
Published on
கதை:  வி.கே.லக்ஷ்மிநாராயணன்
ஓவியம்: லலிதா

மாமனாரின் திவஸம் முடிந்தது.  அவர் படம் முன்னால் படையலுக்காக வைத்திருந்த பட்சணங்களில் ஒவ்வொன்றாக எடுத்து இரண்டு தட்டுகளில் வைத்து,  தன் கணவன் ஜெகனிடமும்,  மகன் கிரியிடமும்நீட்டினாள் கமலா.

தட்டைப் பெற்றுக்கொண்ட கிரி சாப்பிடாமல் தாத்தா படத்தையே உற்றுபார்த்துக்கொண்டிருக்க, இதை கவனித்த ஜெகன்,  " கண்ணா !  என்ன தாத்தா படத்தையே வெச்ச கண் வாங்காமல் பார்த்துண்டிருக்கே ?  பட்சணத்தை சாப்பிடு. " என்றான்.

வினாடிகள் கழிந்த. கிரி பதில் சொல்லவில்லை. பட்சணத்தையும் தொடவில்லை. தாத்தா படத்தையே இமைக்காமல் தொடர்ந்து பார்த்து க்கொண்டிருந்தான்.

ஜெகனுக்கு சங்கடமாக இருந்தது.  தான் மட்டும் எப்படி பட்சணத்தை சாப்பிடுவது என நினைத்து  தன் கையில்இருந்த தட்டை மேடைமீது வைத்தான்.

இதை கவனித்த கமலாவிற்கு கடுப்பாக இருந்தது.  "டேய்,  அப்பா சொல்லிண்டுருக்கார்.  நீ பாட்டுக்கு உன் தாத்தா படத்தையே வெறிச்சு பார்த்துண்டிருக்கே! பார்த்தது போதும்.  பிரசாதத்த எடுத்து சாப்டு. " சிடு சிடுத்தாள்.

ம்ஹூம். அதற்கும் கிரி மசியவில்லை. அவனின் பார்வை தாத்தா படத்தை விட்டு அப்படி இப்படி நகரவில்லை.  கையில் வைத்திருந்த தட்டில் உள்ள பட்சணங்கள் எதையும் தொடவும் இல்லை.

அப்பொழுது சட்டென பொறி தட்டியது ஜெகனுக்கு." கிரிக்கண்ணா!  நீ மனசில் என்ன நினைச்சுண்டிருக்கேன்னு நேக்கு தெரியும் சொல்லட்டுமா ?" என கேட்டான்.

முகம் திரும்பாமல் " சொல்லுங்க டாடி !" என்றான் கிரி.

" கிரி! தாத்தா உயிரோடு இருக்கும்போது, பி.பி., ஷுகர்,இதெல்லாம் இருந்ததாலே வாய்க்கு ருசியா எதுவும் பண்ணிக் கொடுக்காமல் இருந்துட்டோம். இப்போ மட்டும் வித விதமான பட்சணமெல்லாம் பண்ணி படைக்கிறோம். இதெல்லாம் தாத்தா ஒத்துப்பாராங்குறதுதானே உன்னோட டவுட் ?"

மெதுவாக திரும்பியவன் தந்தையை தீர்க்கமாகப் பார்த்தான்.  பிறகு வாய் திறந்தான்.  " போன வருஷம் நடந்த முதல் தவஸத்தன்னிக்கே இதே கேள்வியைக் கேட்டிருந்தேன்.  நீங்க பதில் சொல்லலை.  என் டவுட் இன்னும் கிளியர் ஆகாமலே இருக்கு!"  என்று புகார் செய்ய  உடனே கமலாவிற்கு பற்றிக்கொண்டு வந்தது. "டேய்,  என்னடா இது !  நீ பாட்டுக்கு அப்பாவை இப்படி போட்டு நச்சரிக்கறே? பெரிய மனுஷன் மாதிரி அபத்தமா கே ள்வி கேட்கறத நிறுத்திட்டு ஆகவேண்டியதப் பார். "  எரிந்து விழுந்தாள்.

" கமலா !  கிரி கேட்கறதில் தப்பில்லை.

நியாயமான டவுட்தான் !   போன வருஷமே நான் சரியான பதில் சொல்லியிருக்கணும். அப்படி சொல்லாமல் போனது என் தவறுதான்."

" என்ன நீங்களும் அவனுக்கு வக்காலத்து வாங்கறேள்?"  எகிறி குதித்தவள்,

" சரி,  என்ன பதில் சொல்லப்போறேள்?" என்றாள்.

" ம்…யோசிக்கணும்.   பிள்ளையாண்டான் புத்திசாலி!  மூளைக்கு வேலை தர்ற மாதிரிதான் கேள்வி கேட்டிருக்கான். அவனுக்கு நம்பிக்கை வர மாதிரி பதில் சொல்லணும். "

புருஷனையும் மகனையும் மாறி மாறி பார்த்துவிட்டு முணு முணுப்போடு அகன்றாள் கமலா.

சில வினாடிகள் யோசனை செய்தான்  ஜெகன்.  ஒன்றும் தோன்றவில்லை. மேலும் சில வினாடிகள் கழிந்தன. ஏதோ ஒரு பிடி கிடைத்தாற்போல் தெரிந்தது.  மனதுக்குள் உற்சாகம் கொப்பளித்தது. அதே உற்சாகத்துடன் வாய் திறந்தான்.

" கிரி கண்ணா !  ஒரு உதாரணம் சொல்றேன்.  நீ புரிஞ்சுப்பே. அதாவது ,  இந்தப் பிரபஞ்சத்தில் எத்தனையோ பெருமாள் கோயில்கள் இருக்கு.  இல்லையா ?"

"…….."

"பெருமாளுக்கு இரண்டு வேளையும் வித விதமான பிரசாதங்கள் பண்ணி நைவேத்தியம் பண்றா.  இனிப்பு, காரம், புளிப்பு, இப்படின்னு பலவிதமான பிரசாதங்கள்! பெருமாளும் அதையெல்லாம் ஒத்துக்கறதா ஐதீகம்.  அதேமாதிரி  பெருமாளோடு ஐக்கியமாகிவிட்ட உன் தாத்தாவும்  அப்படித்தான்.  நாம வெச்சிருக்கிற பிரசாதங்களயெல்லாம் நிச்சயம் ஒத்துப்பார்.  விசனப்படாமல் தாத்தா பிரசாதத்த எடுத்து சாப்பிடு. "

தந்தையின் விளக்கம் கேட்டவனுக்கு மனதில் இருந்த சங்கடம் விலக புன்னகையுடன்அதிரசத்தை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு மெல்ல ஆரம்பித்தான் கிரி.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com