பிரார்த்தனை ஜாக்கிரதை!

பிரார்த்தனை ஜாக்கிரதை!
Published on

களஞ்சியம்!

மங்கையர் மலரின் 42 வருட பயணத்தில், எண்ணற்ற கதைகள், கட்டுரைகள் வந்திருந்தாலும்,  அவற்றுள்  சில எப்போது படித்தாலும், காலத்தால் அழியாத அழகிய வரிகளாக  அமைகிறது. அந்த வகையில் ஜனவரி – 1991, இதழில் வெளியான ஓர் கிளாசிக் கட்டுரை இதோ உங்களுக்காக…

 –கமலநாதன்

ரீட்சை நடக்கும் காலங்களில் எல்லாம் மூலைக்கு மூலை இருக்கும் கோயில்களில் எல்லாம் எத்தனை கூட்டம்! எத்தனை கற்பூர ஆராதனை! எத்தனை தேங்காய் உடைப்புகள்! உண்டியல் நிரம்பி வழியும். மற்ற நேரங்களில், பத்தில் ஒரு பங்கு கூட்டம் கூட அந்தக் கோயில்களுக்கு வராது.

மாணவர்கள் படிக்க இருக்கிறார்களோ இல்லையோ, பத்து பைசா கற்பூரம் ஏற்றியவுடன் கடவுள் அதில் திருப்திபட்டு அவர்களை அதிக மார்க் வாங்கச் செய்வார் என்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கையை ஏற்படுவதினாலேயே அவர்கள் நன்றாக எழுதலாம். ஆனால் யாருமே வெறுமனே பிரார்த்தனை செய்வது இல்லை. "உனக்கு இதைச் செய்கிறேன். நீ எனக்கு இதைத் தா" என்ற பேரம் பேசுவதே நம்மில் பலருக்கும் வழக்கம்.

"பத்து பைசா கற்பூரம் கொளுத்தினால் பத்தாயிரம் கிடைத்தது. பத்தாயிரம் ரூபாய்க்கு கற்பூரம் கொளுத்தினால் எவ்வளவு கிடைக்கும்?" என்று நாகேஷ் ஒரு படத்தில் பேசிய வசனம் என்றும் நம் நினைவில் இருக்கும்.

பிரார்த்தனைகளை ஏதோ ஒரு உத்வேகத்தில் செய்துவிட்டு நாம் வேண்டிக் கொண்ட காரியம் நிறைவேறியவுடன் செய்து கொண்ட பிரார்த்தனையை மறந்துவிடுவது பலருக்கும் வழக்கம். பின்னால் ஏதோ ஒரு கஷ்டம் வரும்போது நிறைவேற்றாத பிரார்த்தனைகள் எல்லாம் நினைவுக்கு வந்து செய்ய முயல்வதும் சகஜம். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் பல பிரார்த்தனைகள் நிறைவேற்ற முடியாத சூழ்நிலைகளில் இருப்பதும், அதனால் ஒரு குற்ற உணர்வு ஏற்படுவதும், எல்லோரிடமுமே காணப்படுகின்ற ஒன்றுதான்.

  1. டூர் டூராகப் பிரார்த்தனைகள்:

பிரபாகரன் வீடு கட்டிக் கொண்டிருந்த சமயத்தில் வட இந்தியாவின் பல பகுதிகளுக்கும் ஆபீஸ் விஷயமாக அடிக்கடி டூர் போய்க் கொண்டிருந்தார்.  அங்கிருந்து பல கோயில்களுக்கும் சென்று வீடு ஒழுங்காகக் கட்டி முடிந்தால் வந்து பல வேண்டுதல்களை நிறைவேற்றுவதாக வேண்டிக் கொண்டார். வீடு கட்டிப் பல வருடங்கள் ஆகிவிட்டன. தற்சமயம் டூர் போக வேண்டிய அவசியமே இல்லாத ஒரு பொறுப்பில் அவர் இருக்கிறார்.  வீட்டில் பிரச்னைகள் வரும்போது நிறைவேற்றாத பிரார்த்தனைகள் நினைவுக்கு வருகிறது. தற்சமயம் அவருக்கு உள்ள பொருளாதார நிலையில் அந்தப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவது கடினமான காரியமாகத் தோன்றுகிறது. குற்ற உணர்வில் தவிக்கிறார்.

  1. செய்யாத அங்கப் பிரதட்சணம்

விமலா தனது கணவர் ஒரு சமயத்தில் ஒரு ஆக்ஸிடெண்டில் மாட்டிக் கொண்டபோது ஒரு கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்வதாக வேண்டிக் கொண்டார். இது நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. தற்போது அவர் உடம்பில் பிரஷர். எப்போதோ வேண்டிக் கொண்ட பிரார்த்தனையை நிறைவேற்றும் உடல், மனநிலையில் விமலாவும் இல்லை. இருந்தாலும் அந்தக் கோயிலுக்குப் போகும்போதெல்லாம் அவரது மனம் அவரை உறுத்துகிறது.

  1. தாமதித்த தங்கத் தேர்

பிரேமாவுக்குத் திருமணம் நடக்காமல் வரன் எல்லாம் தட்டிப் போய்க் கொண்டு இருந்தது. ஒரு கோயிலில் தங்கத் தேர் இழுப்பதாக அவரது அம்மா வேண்டிக் கொண்டார். திருமணம் நடந்தது. பல வருடங்கள் கழித்து ஆற அமர அவளது பெற்றோர் அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்ற அந்தக் குறிப்பிட்ட கோயிலுக்குச் சென்றபோது அதற்குரிய தொகை பலமடங்கு அதிகமாகி இருந்தது. அவர்களுக்குப் பெரிய அதிர்ச்சி. பிரார்த்தனையை அப்போதே நிறைவேற்றிருந்தால் இவ்வளவு செலவு ஆகாதே என்று வருத்தப்பட்டுக் கொண்டே நிறைவேற்றினர்.

  1. மொட்டையடித்தல்

பெண் குழந்தைகளுக்கு மொட்டையடிப்பதாக வேண்டிக் கொண்டு அதைச் சிறு குழந்தைகளாக இருக்கும்போதே நிறைவேற்றாமல், வயது வந்த பிறகு அந்த வேண்டுதலை நிறைவேற்றாமல் போய்விட்டோமே என்ற குற்ற உணர்வால் தவிக்கும் பெற்றோர் பலர் உண்டு. எந்த வயதிலும் மொட்டையடித்துக் கொள்வது ஒரு சில இடங்களில் – குறிப்பாக ஆந்திராவில் – வழக்கமாக இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் வயது வந்தவர்கள் மொட்டையடித்துக் கொள்வதை வீட்டில் நடக்கும் துக்க சம்பவத்துடனே பலரும் இணைத்துப் பார்க்கிறார்கள்.

பிரகாஷ் – மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தால் திருப்பதிக்கு வந்து மொட்டையடித்துக் கொள்வதாக வேண்டிக் கொண்டான். இவனது பிரார்த்தனை வீட்டில் யாருக்கும் தெரியாது. ஒரு சனிக்கிழமை சென்று மொட்டையடித்துக் கொண்டு வந்தான். வீட்டில் அவனைப் பார்த்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி. "ஏண்டா நான் உயிரோட இருக்கிற போதே இப்படி மொட்டை யடிச்சுக் கொண்டு வந்து இருக்கே" என்ற அவனது அப்பா அவனைத் திட்ட தன்னுடயை பிரார்த்தனை இப்படி எல்லாம் கூட அனர்த்தங்களை தெரிவிக்குமா என்று அவனுக்கு அப்போதுதான் புரிந்தது. அவனைப் பார்த்த நண்பர்கள் எல்லாம் "வீட்டில் ஏதாவது அசம்பாவிதம் நடந்ததா?" என்று துக்கம் விசாரிக்க ஆரம்பித்து விட்டனர்.

பிரகாஷுக்கு உண்மையான காரணத்தைச் சொல்லிச் சொல்லி மாளவில்லை. இந்த நிகழ்ச்சி நடந்த ஒன்றிரண்டு வாரத்திற்கெல்லாம் நன்றாக ஆரோக்கியமாக இருந்த அவனது தாயார் தவறி விட்டது அவனுக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது. நிச்சயமாக அவன் மொட்டையடித்துக் கொண்டதற்கும் அவனது தாயார் தவறியதற்கும் சம்பந்தம் இல்லை என்று அடித்துச் சொல்லலாம். இருந்தாலும் நம்மில் பலரும் சில நம்பிக்கைகளில் ஊறியவர்கள். நமக்கு அதில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ நம்மைச் சுற்றி இருக்கும் பலரும் நிலவி வரும் நம்பிக்கைகளைச் சொல்லி நம்மை மனம் கலங்க வைத்து விடுகிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

  1. நிறைவேற்றப்படாத பிரார்த்தனைகள்

டைக்கப்படாத 108 தேங்காய்கள், செய்யப்படாத கணபதி ஹோமங்கள், சாத்தப்படாத வெண்ணெய், வடைமாலை, எலுமிச்சம்பழ மாலை, கொடுக்கப்படாத துலாபாரங்கள், செய்யப்படாத பாலபிஷேகங்கள், சந்தனக் காப்புகள் – இன்னும் இதுபோன்ற பிரார்த்தனைகள் நிறைவேற்றப்படாமல் இருக்கும் லிஸ்ட் ஒவ்வொரு குடும்பத்திலும் உண்டு. நமக்கு ஏதாவது கஷ்டங்கள் வரும்போது நிறைவேற்றாத பிரார்த்தனைகளை நினைத்து குற்ற உணர்வால் தவிக்கிறோம்.

கடவுளை முழு மனதுடன் நினைத்து வேண்டிக் கொண்டாலே நமது காரியங்களை நிறைவேற்றித் தருவார். அவரைச் சந்தோஷப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு சில காரியங்களை செய்வதாக வேண்டிக் கொண்டால் அதை உடனடியாக செய்வது நல்லது. வேண்டிக் கொள்ளும்போதே நம்மால் அதைச் செய்ய முடியுமா, நமக்கு அந்தப் பொருளாதார வசதி உண்டா என்றெல்லாம் நினைத்து வேண்டிக் கொண்டால் பின்னால் ஏற்படும் குற்ற உணர்வுகளைத் தவிர்க்க முடியும்.

நிறைவேற்ற வேண்டிய பிரார்த்தனைகளை ஒரு டைரியில் குறித்து வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக  நிறைவேற்றினால் மனதில் திருப்தி உண்டாகும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com