பாசரா சரஸ்வதி ஆலயம்!

பாசரா சரஸ்வதி ஆலயம்!
Published on
ஸ்ரீபஞ்சமி – பிப்ரவரி – 5
-ராஜி ரகுநாதன்

தை மாதம் சுக்ல பட்சம் பஞ்சமி திதியன்று ஸ்ரீபஞ்சமி எனப்படும் வசந்த பஞ்சமியை கொண்டாடுகிறோம். பஞ்சமி திதியை ஞான பஞ்சமி என்பர். வசந்த பஞ்சமி வசந்த காலத்தை வரவேற்கும் முதல் நாளாக கருதப்படுகிறது.

இன்று மகா சரஸ்வதி தேவியின் பிறந்த நாள். பரப்பிரம்மத்தின் நாவிலிருந்து அவருடைய சங்கல்பத்தால் சரஸ்வதி தேவி தோன்றினாள். இவளே வாக்கு சக்தி. கடவுளின் ஞான சொரூபமே சரஸ்வதி. பாரத தேசம் ஞான பூமி. பாரதி என்றால் ஞான சொரூபிணி.

இன்று சிறுவர் முதல் பெரியவர் வரை ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் பெறுவதற்கு புத்தகம், எழுதுகோல், பிரதிமை வடிவில் சரஸ்வதி தேவியை ஆவாகனம் செய்து வழிபட வேண்டும். சரஸ்வதி அஷ்டோத்தரம், சஹஸ்ரநாமம் போன்றவற்றைப் படித்து வெள்ளை வஸ்திரம் சமர்ப்பித்து வெள்ளை நிறப் பூக்களால் தேவியை அர்ச்சித்து வழிபட்டு பசும்பாலில் செய்த அரிசிப் பாயசம் நிவேதனம் செய்து சரஸ்வதியின் கடாட்சத்தைப் பெறுவது சிறப்பு.

ஞாபக மறதி, பேச்சுத் திறன் குறைபாடு, படிப்பில் மந்த நிலை, ஆர்வமற்று இருப்பது போன்றவற்றை சரஸ்வதி தேவி மந்திரத்தை இன்று ஜபம் செய்வதால் நீக்கிக் கொள்ளலாம். பேச்சுத் திறமையும் அறிவுக் கூர்மையும் சரியான முடிவெடுக்கும் புத்தியும் அருளக் கூடியவள் சரஸ்வதி தேவி. மாணவர்கள் இன்று சரஸ்வதி நாமங்களோ சுலோகங்களோ படித்து பூஜை செய்வது சிறந்த பலனைத் தரும். பெற்றோர் தம் பிள்ளைகளைக் கொண்டு இன்று சரஸ்வதி பூஜை செய்விக்க வேண்டும்.

தெலங்காணா நிர்மல் மாவட்டத்தில் உள்ள 'பாசரா' க்ஷேத்திரத்தில் சரஸ்வதி தேவி தோன்றிய நாளை சாரதா ஜெயந்தியாக மிக விமரிசையாகக் கொண்டாடி சிறப்பாக பிரம்மோற்சவம் நடத்துவர். தவச்சக்தியால் சாரதா தேவியை தரிசித்த வியாச மகரிஷி கோதாவரி தீரத்தில் பாசரா புண்ணியத் தலத்தில் ஞான சரஸ்வதி தேவியைப் பிரதிஷ்டை செய்தார். இதற்கு வியாசபுரி என்ற பெயரும் உண்டு. இது ஹைதராபாதிலிருந்து 200கிமீ தொலைவில் உள்ளது. இங்குள்ள ஞான சரஸ்வதி மகாகாளி, மகாலட்சுமி சமேதராக அமர்ந்து அருள் பாலிக்கிறாள். மிகவும் அமைதியான சுற்றுச் சூழலோடு மனதை கவரும் விதமாக அமைந்துள்ளது இந்த ஆலயம்.

பாசரா சரஸ்வதி ஆலயத்தில் வசந்த பஞ்சமியன்று பிள்ளைகளுக்கு கல்விக்கரசி சரஸ்வதியின் சந்நிதியில் அக்ஷராப்பியாசம் செய்விப்பார்கள். இதற்கென்று கோவிலில் தனி மண்டபம் உள்ளது.

மேற்கு வங்காளம் ஒரிசா போன்ற மாநிலங்ளிலும் வசந்த பஞ்சமி சிறப்பாக இல்லங்களிலும் கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com