
சினிமாவோ, இலக்கியமோ, வேறெந்த கலையோ, அந்தந்தக் காலத்துல என்ன நடக்குதோ, அதைப் பிரதிபலிக்கிற சமக் காலக் கண்ணாடிதானே? ரைட்டா? ஒத்துக்கறீங்கதானே!
நான் சிறுமியாக இருந்தபோது வெளியான பல திரைப்படங்களில், குடும்பம், கல்யாணம், குழந்தை… இதுக்குள்ளதான் கதையே சுத்தும். 'குழந்தை இல்லை' என்ற கான்செப்ட்டை வைத்துக்கொண்டு, கர்சீஃப் நனைத்த படங்கள் எத்தனை எத்தனை? 'பேசும் தெய்வம்', 'அன்னை', 'குலமா, குணமா?', 'அவன், அவள், அது', 'பொம்முக்குட்டி அம்மாவுக்கு', 'கல்கி', 'சிந்து பைரவி'… பிழியப் பிழிய ஏக்கம்!
அது இப்போதும் தொடர்வதற்கு சாட்சியாக "கருமுட்டை தானம்',
'விந்து தானம்', 'வாடகைத் தாய்' கதைகள் லைன் கட்டுகின்றன.
('ஐ யாம்', 'மிமி', 'குட் நியூஸ்', 'விக்கி டோனர்', 'சோரி சோரி சுப்கே சுப்கே…' பட்டியல் நீளும்!)
சினிமா கதைய விடுங்க… நிஜத்திலும் செய்திகள். "நான் வாடகைத் தாயாகப் பணியமர்த்தப்பட்டேன். இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஆனால், அவை இறந்துவிட்டதால், பேசிய பணம் தராமல் ஏமாற்றிவிட்டார்கள்" என்று மருத்துவமனை மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார் ஒரு பெண்… இது போன வாரச் செய்தி.
நடிகை ப்ரியங்கா சோப்ரா – நிக் தம்பதி வாடகைத் தாய் மூலம்
பெண் குழந்தைப் பெற்றுக் கொண்டனர் – இது லேட்டஸ்ட்!
அடேயப்பா! வலைத்தளங்களில் என்னமாய் ஒரு ரியாக்ஷன்!
பத்து மாதம் சுமந்து பெற்றால்தான் தாயா? பெண் என்பவள் எப்படித் தாய் ஆனால் என்ன…? தாய்… தாய்தான்! தாய்மை அவளது உரிமை! பெருமை!
உடல்ரீதியாகப் பிள்ளை பெற இயலாத/ விரும்பாத பெண்கள் தாயாக விரும்பினால், ஆகட்டுமே! அது தனி மனுஷியின் விருப்பம். ஆணுக்குக் கூடத்தான் கர்ப்பப்பை இல்லை, குழந்தை பெறவும் முடியாது. அதனால் அப்பா பாசம் இல்லாமல் போய்விடுமா? அம்மா பாசமும் அப்படித்தான்!
ஆண்களுக்கு என்ன பயம்னா, இப்படியே போனால், 'நான்தான் குழந்தையின் பயலாஜிகல் அப்பா என்று உரிமை கோர முடியாது; நாளடைவில் 'ஆண்' என்ற கெத்து போய்விடுமோ?' என்ற அச்சம்!
இது, மேற்படி விமர்சனங்களுக்கு பதிலடி!
எதுக்கு சுற்றி வளைச்சுக்கிட்டு! பெண் என்பவள் வெறும் குழந்தை பெறும் இயந்திரம் அல்ல; எதுவானாலும் இனி அது அவளது சாய்ஸ்!
ஏன்னா… இனிமே அப்படித்தான்!