ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம்!

ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம்!
Published on
'தஸ்வி' (பத்தாவது) – திரைப்பட விமர்சனம்

ஆர்.மீனலதா, மும்பை

"பத்தாம் கிளாஸ் பாஸ் பண்ணாதவன் எல்லாம் பந்தா பண்ணறாங்க!" என்று கூறுவது வழக்கம். 'தஸ்வி'யும் அது போல்தான்.

ஹரித் பிரதேச மாநிலத்தின் முதல்வராக 'தஸ்வி' வகுப்பு  கூட படிக்காத அபிஷேக் பச்சன் பதவி வகிக்கிறார். நல்ல அலப்பறை. அனைத்து துறைகளிலும் ஊழல்கள் அமோகமாக நடைபெற்று வருவதைக் கண்டுகொள்ளாத முதல்வர் என்று கதை முதலில் நகருகிறது.

திடீரென போறாத காலம் வர, சில துறைகளின் ஊழல்களில் அவர் சிக்கி, சிறைக்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது. சிறை செல்லுமுன், மாடுகளைப் பராமரிக்கும் பழக்கம் கொண்ட தனது மனைவி நிம்ரத் கவுரை முதல்வராக்கி விடுகிறார்.

சிறையில் அடைபட்ட அபிஷேக், அங்கே தனது முதல்வர் பந்தாவைக் காட்ட ஆரம்பிக்கிறார். ஜெயிலராக வரும் யாமி கவுதம், அவரைக் கட்டுப்படுத்தி வழிக்கு கொண்டுவர செயல்படுவது படத்தை தூக்கி நிறுத்தும் வகையில் அமைந்துள்ளது. மிடுக்கான தோற்றத்தில் யாமி கவுதம் அபிஷேக்குடன் மோதுவது அருமை.

அரசியலில் ஒன்றும் அறியாத நிம்ரத் கவுர் திடீர் முதல்வரானவுடன் கெத்தோ கெத்து! அப்படி ஒரு கெத்து! சூப்பர் கான்ஃபிடென்ட்டாக வலம்  வரும் அவர் ரசிக்க வைக்கிறார்.

காரசாரமான அரசியல் விஷயங்கள், வசனக் கூர்மைகள், காமெடி போன்றவைகள் சற்று மிஸ்ஸிங் ஆனாலும் டைம்பாஸ் படம். அவரவர் பாத்திரங்களுக்கேற்ப அனைவரும் நடித்துள்ளனர்.

ஹரியானாவின் முன்னாள் முதன்மந்திரியான திரு. ஓம் பிரகாஷ் செளதாலாவின் ஆட்சி சமயம் நடந்த சம்பவத்தை பின்னணியாக் கொண்டு 'தஸ்வி' உருவாக்கப்பட்டுள்ளது. இவர் ஜெயிலில் இருக்கையில், தனது 82ஆவது வயதில் படித்து, பத்தாவது வகுப்பு பரீட்சை எழுதி பாஸ் செய்தவர்.

பதவிக்கும் படிப்புக்குமிடையே மனதில் ஏற்படும் எண்ணங்கள் போன்ற பலவற்றை, டைரக்டர் துஷார் ஷலோடா யதார்த்தமான முறையில் காட்டியுள்ளார். 'தஸ்வி' யை ஒருமுறை பார்க்கலாம். படித்துப் பாஸ் செய்யலாம்!

*************************

ப்ளட் மணி – திரைப்பட விமர்சனம்
-பவ்யா

ன்வஸ்டிகேடிவ் ஜர்னலிசம் என்ற வகையை சேர்ந்தது இத்திரைப்படம்.  கே.எம். சர்ஜுன் என்பவர் திரைபடத்தை இயக்கியிருக்க, கதைநாயகி ப்ளஸ் கதாநாயகியாக ப்ரியா பவானிசங்கர் நடித்திருக்க,  சதீஷ் ரகுந்தன் இசையமைத்திருக்கும் திரைப்படமான 'ப்ளட் மணி' ஓடிடி யில் வெளியாகியிருக்கிறது.

குவைத்திற்கு வேலை தேடி செல்லும் இரு இளைஞர்கள் (கிஷோர் மற்றும் அர்விந்த்) தூக்கிடப்படும் சேதியுடன் படம் தொடங்க அவர்கள் மீண்டார்களா? மாண்டார்களா? என்ற பதைபதைக்கும் கேள்விகள் நம்மை நெருட திரைப்படத்தை ஆவலுடன் பார்க்க வைக்கிறது திரைக்கதை.

குவைத்தில் கொலையுண்ட குடும்பம் ப்ளட் மணி வாங்கிக் கொண்டு மன்னிப்பு கொடுத்தால் தண்டனை குறையும் என்ற செய்தியை  கதைக்களமாக கொண்டு நேர்த்தியுடன் விறுவிறுப்பாக கதையை நகர்த்தியுள்ளார்கள்.  இதனை சென்ஷேஷனல் செய்திகளை போடும் நீயூஸ் சேனல் ஒன்று கையிலெடுக்கிறது. அதில் உதவி எடிட்டராக பணியில் சேரும் ப்ரியாபவானிசங்கர், அவர்களின் தூக்கிற்கு வெறும் இருபத்திமணி நான்கு நேரமே பாக்கியி ருக்க இந்த ப்ரச்சனைகளை தீர்க்க களமாடுகிறார்.

சின்னத்திரையில் இருந்து நடிக்கவரும் அனைவருக்கும் நம்பிக்கை தரும் நாயகி ப்ரியா பவானிசங்கர் என்பதில் ஐயமில்லை. ஏற்கனவே நீயூஸ் சேனலில் பணிபுரிந்த அனுபவம் அவருக்கு பெரிதும் கைக்கொடுக்கிறது. இயல்பான அலட்டலற்ற நடிப்பு அவரது ப்ளஸ் பாயிண்ட். அவருக்கு துணையாக வெறுமனே வந்து போகிறார் ஷிரிஷ். கிஷோர் மற்றும் அரவிந்த்தின் தாயாக வரும் லேகா ராஜேந்திரன் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். கிஷோரின் மகளாக வரும் சிறுமியும் மிக இயல்பாகவே நடித்திருப்பார்.

தூக்கு தண்டனை கைதிகளாக கிஷோர் மற்றும் அரவிந்த் இருவருமே நம்மை பரிதாபப்படவைக்கிறார்கள். அவர்கள் இலங்கையை சேர்ந்த ஒரு முஸ்லீம் பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காகவே தண்டனைக்கு உட்படுகிறார்கள். ஆனால் இவர்கள் கொலை செய்யவில்லை என்பதை நடுவில் சிறிய ப்ளஷ்பேக்கில் சொல்லிவிடுவது அவர்களின் மீதான பரிதாபத்தை மேலும் அதிகரிக்கிறது.

அரபுநாட்டிற்கு வேலைக்கு செல்லும் எளிய மனிதர்களின் பரிதாபநிலையை தெளிவாக சொல்லும் படவரிசையில் இதனையும் சேர்க்கலாம்.

படத்தில் பல நற்செய்திகள் இருந்தாலும், கள்ளதோணியில் இலங்கை செல்வது, புதிதாக பணியில் சேர்ந்த நீயூஸ் செய்தியாளர் அசால்டாக இந்தியாவில், குவைத்தில் என பலரையும் நினைத்தமாத்திரத்தில் தொடர்பு கொள்வது என திரைக்கதையில் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகளை சற்று தவிர்த்திருக்கலாம்.

மொத்தத்தில் நம்மை கடைசிவரை கதையை பார்க்கவைக்கும் உத்தியை இயக்குனர் திறம்படவே செய்திருக்கிறார். பாசம் மற்றும் மனிதாபி மானத்தின் அடிப்படையில் ஈர்க்கும் இத்திரைப்படத்தினை இணையத்தில் கண்டுகளிக்கலாம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com