‘யுவர் ஆனர் ரோபோட் அவர்களே!’

‘யுவர் ஆனர் ரோபோட் அவர்களே!’
Published on
   பகுதி -1
         –ஜி.எஸ்.எஸ்.

ரோப்பாவில் இருக்கும் ஒரு நாடு எஸ்டோனியா.  அங்கே ஒரு அறிவியல் திருப்புமுனை அரங்கேறியிருக்கிறது.

'ஒரு பெண் நீதிபதியாகிறார்'  என்பதே இங்கே செய்தியாகும் போது, அங்கே ஒரு ரோபோட் நீதிபதி பதவியை ஏற்கவுள்ளது (ஏற்கவுள்ளார்!)இதற்கான செயல் முறையை அமல்படுத்த அந்த நாட்டு நீதித்துறை உத்தர விட்டிருக்கிறது.  இது எப்படிச் செயல்படும்?  இரு தரப்பினரும் தங்கள் ஆவணங்களையும் தங்கள் தரப்பு வாதங்களையும் இணையதளத்தில் ஏற்றிவிட வேண்டும்.

ரோபோட் நீதிபதிக்குள் இது தொடர்பான சட்ட திட்டங்கள் ஏற்கனவே செலுத்தப்பட்டு இருக்கும் (அதிகபட்சமாக ஒரு குறிப்பிட்ட அளவு தொகைக்கான தகராறுகளைத்தான் ரோபோட் நீதிபதி தீர்த்து வைப்பார்).

ஒருவேளை ரோபோட் நீதிபதி தவறு செய்தால்?  மேல் முறையீடு செய்யலாம்.  அங்கே மனித நீதிபதிகள் இருப்பார்கள்!

'மிக எளிமையான வழக்குகளை ரோபோட்கள் பார்த்துக் கொள்ளட்டும்.  இதன் மூலம் பிற முக்கிய வழக்குகளை மனிதர்கள் கவனித்துக் கொள்ளட்டும்' என்பது எஸ்டோனியா அரசின் கோணமாக இருக்கிறது.  (அங்கெல்லாம் மக்கள் தொகையும் பணியிட வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கிறது என்பது வேறு விஷயம்).

சமீபத்தில் அறிவியல் முன்னேற்றம் தொடர்பான அமெரிக்க கூட்டமைப்பு ஒரு மாநாடு நடத்தியது.  அதில்  மனிதர்களுக்கும் ரோபோட்களுக்கும் இடையே உள்ள தொடர்பு விவாதிக்கப்பட்டது.

தொடக்ககால ரோபோட்கள் ஓரிடத்திலிருந்து கனமான பொருள்களை இன்னொரு இடத்திற்கு நகர்த்த என்பது போன்ற செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டன.  சொல்லப்போனால் அவை ஏதோ வனவிலங்குகளைப் போல கூண்டுக்குள் வைக்கப்பட்டிருந்தன.  அவை இயங்கும் போது மனிதன் எதிர்ப்பட்டால் மனிதனுக்கு ஆபத்து விளையலாம் என்று கருதப்பட்டது.

இன்று ரோபோட்கள் பலவிதமான வேலைகளை செய்யத் தொடங்கி விட்டன.  வீட்டை சுத்தம் செய்வது, தோட்டத்தில் புல் வெட்டுதல் என்று தொடங்கி மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சையில் உதவுவது வரை இவை செயல்படுகின்றன.

வருங்காலத்தில் இவை அதிக அளவில் பயன்படுத்த வாய்ப்பு உண்டு என்று மேற்படி மாநாட்டுக்கு வந்திருந்த விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தார்கள்.  இதற்கு சில காரணங்களைக் குறிப்பிட்டார்கள்.

கோவிட் காரணமாக சில சமூக மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன.  நிறுவனங்கள் ஊழியர்களை வெளியேற்றியுள்ளன. ஊழியர்களும் தங்கள் முன்னு ரிமைகளை மாற்றிக்கொண்டு வேலையில் இருந்து ராஜினாமா செய்திருக் கின்றனர்.  அதேசமயம் வணிகம் அதிகரித்துள்ளது.  முக்கியமாக ஆன்லைன் வணிகம்.  எனவே கிடங்குகளில் அதிக அளவில் பொருட்கள் வரத்து ஏற்பட்டுள்ளது.  இவற்றைக் கையாளத் தேவைப்படும் ஊழியர்களை நிறுவனங்களால் நியமிக்க முடியவில்லை.  எனவே ரோபோட்கள் பயன் படுத்தப்படுகின்றன.

மருத்துவத்துறையில் ரோபோட்களின் பங்கு கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு உண்டு.  பக்கவாதம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவதற்கு நீண்ட காலம் மருத்துவ சிகிச்சை தேவைப்படும்.  சொல்லப்போனால் பாதிக்கப்பட்டவர்களின் கை கால்களுக்கு உரிய அசைவுகளை ஏற்படுத்தி நீவி கொடுப்பதில் மனிதர்களைவிட ரோபோட்கள் சிறப்பாக செயல் படுகின்றன.   சிகிச்சையின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை, ஒரே மாதிரி செயல்படுகிறது.  தவிர அடுத்தடுத்து இடைவெளி இல்லாமல் கூட பலருக்கு இதன் மூலம் சிகிச்சை கொடுக்க முடிகிறது.

தேவையே கண்டுபிடிப்புகளின் தாய் என்பார்கள். கொரோனா பாதிப்பை அறிவதற்கான சோதனைகளை மேலும் பாதுகாப்பானதாக ஆக்கும் முயற்சியில் டென்மார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ரோபோட்டைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.  தொண்டைப் பகு​திக்குள் பஞ்சுருட்டை செலுத்தி சாம்பிளை எடுப்பது வழக்கம்.  மேற்படி ரோபோட் கணியின் உதவியுடன் தொண்டையின் மிகச் சரியான இடத்தில் தன் இயந்திரக் கையைச் செலுத்தி இந்த சாம்பிளை எடுப்பது போல் உருவாக் கியிருக்கிறார்கள்.   மனிதர்கள் செயல்படுவதைவிட படுவேகத்தில் இவை செயல்படுகின்றன.

டெக்ஸாஸ் நகரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் மருந்தகத்திலிருந்து நேரடியாக நோயாளியின் அறைக்கு மருந்துகளை எடுத்துச் செல்லும் ரோபோட் அறிமுகமாகியிருக்கிறது.

சான்போட் என்ற சீன நிறுவனம் உருவாக்கிய ரோபோட் தன்னிடம் உள்ள கேமரா மற்றும் மைக்ரோபோன் ​மூலம்  நோயாளிகள் குறித்த தகவல்களை (உடல் வெப்பம், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு) அளந்து அறிவிக்கிறது.  இதனால் நேரடி சோதனை நீக்கப்பட்டு கடும் தொற்றுகளிலிருந்து மருத்துவர்கள் காக்கப்படுகிறார்கள்.

பெங்களூரில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் மித்ரா என்ற பெயர் கொண்ட ரோபோட் ஒன்று அறிமுகமானது.  அது அந்த மருத்துவ மனையில் நுழையும் நோயாளிகளை ஆரம்ப ஸ்கிரீனிங் செய்தபின் உள்ளே அனுப்புகிறது. இந்த ரோபோட் நோயாளியின் பெயர், தொலைபேசி எண் போன்றவற்றைக் குறித்துக் கொள்கிறது. அடுத்து அவர் புறநோயாளியா, அங்கு அட்மிட் ஆனவரா என்பதை அறிகிறது.  அவரது உடல் வெப்பத்தை அளக்கிறது.  இவை திருப்திகரமான முடிவுகளை அளித்தால் அவரை டாக்டரிடம் அனுப்புகிறது.   மாறாக கோவிட்  அறிகுறிகள் தென்பட்டால் அவரை அடுத்த ரோபோட்டிடம் அனுப்புகிறது.  மைத்ரி என்ற பெயர் கொண்ட அந்த இரண்டாவது ரோபோட் அவரை டாக்டருடன் வீடியோ காலுக்கு ஏற்பாடு செய்துவிட்டு அவரை சந்திப்பதற்கு அனுமதிச்சீட்டு அளிக்கிறது.

ஒட்டுமொத்தமாகவே ரோபோட்களின் சாம்ராஜ்யம் விரிவடைந்து கொண்டு வருகிறது எனலாம்.  இதில் கவனிக்க வேண்டிய கோணங்கள் வேறு சிலவும் உண்டு.  அவை அடுத்த இதழில்…

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com