ஆஸ்திரேலியா அனுபவங்கள்!

ஆஸ்திரேலியா அனுபவங்கள்!
Published on

பகுதி-4

பயண அனுபவம்: பத்மினி பட்டாபிராமன்

செம்மறியாடுகளின் பரிதாபம்: 

ஸ்திரேலியாவின் புகழ்பெற்ற மெரீனோ (Merino) வகை செம்மறியாடுகள் வளர்க்கும் பண்ணை அது. ஆஸ்பெஸ்டாஸ் போல் கூரை போட்ட மிகப் பெரிய இடத்தில் பார்வையாளர்கள் அமர வரிசையாக நீண்ட பெஞ்சுகள். கிராமத்து பாணியில் மேடை. மஞ்சள் விளக்கு வெளிச்சம். வாட்டச் சாட்டமாக இருவர் மேடைக்கு வந்து தொப்பியை எடுத்து, பார்வை யாளர்களை வணங்கிவிட்டு நாடகம் போல (ஆஸ்திரேலியன்) ஆங்கிலத்தில் பேசி முடிக்க, புசு புசுவென்று ரோமம் 'உல்' நிறைந்திருக்கும் செம்மறி ஆடுகளை ஒரு பெண் வரிசையாக அழைத்து வருகிறார்.

அவற்றோடு ஒரு வேட்டை நாயும் ஓடி வருகிறது. அந்த ஆடுகள் புல் மேயும்போது அவற்றை மேய்ப்பது இதன் வேலை. ஃபேஷன் பரேட் போல அவை நடை பழக, அவற்றின் வகைகளைப் பற்றி விவரம் சொல்லப் படுகிறது. அது முடிந்ததும், மற்றவை உள்ளே ஓடிப்போக, ஒன்று மட்டும், உல்லை உரிக்கும் ஷியரர் (shearer) கைக்கு வருகிறது. அவர் அதை லாவகமாக இறுகப் பிடித்துக்கொண்டு ஷேவிங் மெஷின் போன்ற ஒன்றை இயக்குகிறார். புசுபுசுவென்று இருந்த வெள்ளை ரோமம் சில நிமிடங்களில் சுருள்சுருளாய் விழ, அது பரிதாபமாக ஒல்லியாய் (உரித்த ஆடாய்) வெள்ளைத் தோல் வெளிப்பட உள்ளே ஓடுகிறது. கொஞ்சம் அசைந்தாலும் அதற்கு ரத்தக் காயம் ஏற்படுமாம். பொதுவாக ஒரு ஆடு மூலம் ஒரு ஆண்டுக்கு நாலரை கிலோ உல் எடுக்க முடியும். இதன் மூலம் பத்து மீட்டர் கம்பளித் துணி கிடைக்குமாம்.

ஒரு சமயம் தனியாக அலைந்துகொண்டிருந்த ஒரு ஆட்டின் மேல் 35 கிலோ ரோமம் வளர்ந்திருந்ததாம். குல்பர்ன் (Goulburn) என்ற ஊரில் மெரீனோ ஆட்டுக்கு 50 அடி உயரத்தில் கான்க்ரீட் சிலை வைத்திருக்கிறார்கள். அதை ஒட்டி சாவனீர் கடைகள். டீ ஷர்ட் முதல் எல்லாம் மெரீனோ மயம். தலைநகர் கேன்பெரா செல்லும் வழியில் இருக்கிறது இந்த ஊர்.

தலைநகர் கேன்பெரா (Canberra)

1770ல் ஆங்கிலேய கேப்டன் ஜேம்ஸ் குக் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் இறங்கி தன் ஆளுமையை நிறுவினாலும், சிட்னி, மெல்பர்ன் போன்றவை பரிசீலிக்கப் பட்டாலும், இறுதியில் கேன்பெராதான் 1908ம் ஆண்டில் ஆஸ்திரேலியத் தலைநகராக அங்கீகரிக்கப்பட்டது.

சரியான வரைபடத்துடன் திட்டமிடப்பட்டு, தலைநகருக்கென்றே வடிவமைக்கப் பட்டிருக்கிறது. வணிக நகரம் சிட்னியிலிருந்து 100 மைல்கள் தொலைவில், ஆஸ்திரேலியன் ஆல்ப்ஸ் மலைத் தொடர் அருகே இருக்கும் அழகான, நகரம். நாடாளு மன்றம், அரசின் முக்கிய அலுவலகங்கள், அரசு நிறுவனங்கள், தூதரகங்கள் என்று ஒரு ஏரியைச் சுற்றி வடிவமைக்கப் பட்டுள்ள தலைநகரின் முக்கிய இடங்களை ஒரு ரவுண்டு வந்தோம். அந்த ஏரியும் மனிதர் உருவாக்கிய செயற்கை ஏரிதானாம்.

எங்கும் உள்ளே செல்ல நிறைய கட்டுப்பாடுகள் இருந்தாலும், நாடாளுமன்றக் கூட்டம் நடக்காத நாட்களில் உள்ளே சென்று பார்க்க அனுமதிக்கிறார்கள். ஃபெடெரல் அல்லது காமன்வெல்த் பார்லிமெண்ட் என்று குறிப்பிடப்படுகிறது. செனேட் ஹவுஸ், ஹவுஸ் ஆஃப் ரெப்ரெசென்டேடிவ்ஸ் (Senate and the House of Representatives) என்று இரு சபைகள் கொண்டது. இரண்டு இடங்களையும் பார்க்க அனுமதி கிடைத்தது.

வார் மெமோரியல் ஆஸ்திரேலியாவின் போர் வீரர்களுக்கான நினைவிடம். பெயர் தெரியாத வீரர்களுக்கான ஹால் ஆஃப் மெமரி, மற்றும் 'வார்' மியூசியம் இவற்றைச் சுற்றி வரலாம். போர் வீரர்களின் உருவச் சிலைகள், சண்டைக் காட்சிகளின் சித்தரிப்புகள் மூலம் ஆஸ்திரேலியாவின் போர் வரலாறுகள் சொல்லப்படுகின்றன.

மற்றபடி, பல்கலைக் கழகம், மியூசியம், ஆர்ட் கேலரி போன்றவை தலைநகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான இடங்களாக மாடர்ன் கட்டிடக் கலையில் காட்சி தருகின்றன.

கோடையின் ஆரம்பம்தான் என்றாலும் ஈரப்பசையில்லாத நல்ல வெள்ளை வெயில். (ஜெர்கின் ஒவர்கோட் ஒன்றும் போட முடியவில்லை) மியூசியத்தில் அபாரிஜின்ஸ் எனப்படும் பழங்குடி மக்களின் கலாசாரம் (70000 ஆண்டு களுக்கு முன் ஆப்பிரிக்காவிலிருந்து இங்கே இடம் பெயர்ந்தவர்கள்) பற்றி அறிய முடிகிறது.

கேன்பேராவின் அழகான, அமைதியான சாலைகளின் இரண்டு பக்கமும் அனேகமாக ஓக் மரங்கள். சரத் காலத்தில் இவற்றின் இலைகள் ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் என்று வண்ணங்களில் ஒளிரும். 1845ல் கட்டப்பட்ட தேவாலயம்
(St John's Anglican Church) இதன் அடையாளங்களில் ஒன்று.

கேன்பராவிலிருந்து  சிறிது நேரம் கார் பயணத்தில் பிரிண்டாபெல் நேஷனல் பார்க் (Brindabella National Park) சென்றால், ஆஸ்திரேலியன் ஆல்ப்ஸ் மலைத் தொடரின் அடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ள காட்டுப் பகுதியை ரசித்தபடி பயணிக்கலாம் என்றார்கள். நேரமில்லாததால் செல்ல முடியவில்லை.

ஜூன் 2021ம் ஆண்டு கணக்குப்படி கேன்பெராவின் மக்கள் தொகை, சுமார் நான்கு லட்சத்து முப்பத்தோராயிரம் மட்டுமே.

ஆஸ்திரேலியாவின் மண்ணின் மைந்தர்களான, அபாரிஜின்களின் வழித் தோன்றல்கள் இன்னும் நியூ சவுத்வேல்ஸ், க்வீன்ஸ்லாந்து, விக்டோரியா மாநிலங்களின் உட்பகுதிகளில் வாழ்கிறார்கள். அவர்களில் சுமார் 500 பிரிவினர் இருக்கிறார்களாம்! நிறையப் பேர் படித்து, நாகரீக வாழ்வுக்கு மாறிவிட்டார்கள்.

நாட்டின் வட கிழக்கு உச்சியில் இருக்கும் டாரெஸ் ஸ்ட்ரெயிட் தீவுகளில் வசிக்கும் (Torres Strait Island communities) பழங்குடியினர், முற்றிலும் மாறுபட்டவர்கள் என்கிறார்கள்.

ஆங்கிலம்தான் அனைவராலும் பேசப்படும் மொழி என்றாலும், சில அபாரிஜினல்களின் வார்த்தைகளும் ஊடுருவியுள்ளன. இந்தியக் கொடி பறக்க, நம் நாட்டு தூதரகத்தைப் பார்த்ததும் ஒரு நிறைவான சிலிர்ப்பும் மகிழ்வும் தோன்றியது.

2020ம் ஆண்டுன் கணக்குப்படி ஆஸ்திரேலியாவில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு மூன்று பேர்தான் வசிக்கிறார்கள். (இந்தியாவில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 430 பேர்.)

கேன்பெராவில் இந்திய உணவு ஜோராகவே கிடைக்கிறது. தாஜ்மஹல் ரெஸ்டரன்ட், மிர்சி இண்டியன் க்யுசின் இவற்றில் லன்ச்சுக்கும் டின்னருக்கும் ரொட்டி, தால், பலவித சப்ஜிக்கள், சாதம், யோகர்ட், ஊறுகாய், பப்பட், டெசர்ட்… என்ன வேண்டும் இன்னும்?

எங்கள் ரிடர்ன் சிட்னியிலிருந்து சிங்கப்பூர் வந்து, விமானம் மாறி சென்னை என்பதால், கேன்பெராவிலிருந்து மீண்டும் சிட்னி பயணம். ஆஸ்திரேலியா சென்ற அனுபவங்கள் என்றும் நினைவுகளில் இருந்து நீங்காதவை.

(நிறைவடைந்தது)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com