
——————————–
தீபாவளி பண்டிகையை முதன்முதலில் கொண்டாடியது யார் தெரியுமா? நரகாசுரனின் மகன் பகதத்தன். தந்தை இறந்த தினத்தில் பகதத்தன் கண்ணபிரானுக்கும் அவனது ராஜகன்னிகைகளுக்கும் பெரும் வரவேற்பளித்து, எண்ணெய் ஸ்நானம் செய்வித்து, பட்டு வஸ்திரம் தரிக்கச் செய்து, அரண்மனையை மிகவும் அலங்கரித்து, தனது பிரஜைகளையும் கொண்டாட வைத்தான். கண்ணபிரான் இதில் மகிழ்ந்து, அவனது பக்தியைப் பாராட்டி, 'ப்ராக்ஜயோகிஹம்' என்ற பட்டிணத்திற்கு (பகுதத்தனின் பட்டினம்) 'பகதத்தபுரம்' எனும் பெயரைச் சூட்டினார். தற்போதைய, 'பாக்தாத்' பட்டினம்தான் அந்நகரம்.
– ஸரோஜா ரங்கராஜன், சென்னை.
——————————–
தீபாவளி பண்டிகையின் சிறப்பினைப் பற்றி ஸ்ரீவிஷ்ணு புராணம், ஸ்ரீமத் பாகவதம், சேஷதர்மம், ஸ்ம்ருதி, முக்தாபலம் முதலிய நூல்கள் விரிவாகக் கூறுகின்றன.
'நித்யான்னிகம்' என்ற நூலிலும் தீபாவளி மகிமை, பெருமைகள் கூறப்படுகின்றன. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிடம், நரகாசுரன் மரண தருவாயில் வரம் கேட்டதால் ஏற்பட்டதுதான் இந்தத் தீபாவளி பண்டிகை.
இந்தப் புண்ணிய தினத்தில்தான் திருமகளை, திருமால் திருமணம் புரிந்துகொண்டதாக ஸ்ரீ விஷ்ணு புராணம் கூறுகிறது. இதனால் தீபாவளியை, 'ஸ்ரீ லக்ஷ்மி பரிணய தினம்' என்றே அழைப்பதுண்டு.
இப்படி, விவாகக் கோலத்தில் இருந்த ஸ்ரீ லக்ஷ்மி நாராயணனை தேவர்கள் ஒவ்வொருவராக நமஸ்கரித்தனர். அப்போது யம தர்மராஜனும் பணிந்து வணங்கினான். உடனே தேவி, யம தர்மராஜனிடம், ''இன்றைய தினம், இப்பண்டிகையை முறைப்படி கடைப்பிடிப்பவர்களது வீட்டில், நீ என் அனுமதியின்றி உயிர்களைக் கவர்ந்து செல்லக்கூடாது'' என்று கட்டளை பிறப்பித்தாள்.
தர்மராஜனும் ஸ்ரீதேவியின் ஆணைப்படியே நடப்பதாக வாக்களித்தான். இதனால் மகிழ்ச்சியுற்ற அலைமகள் யமனிடம், "இன்று உன்னையும் மனிதர்கள் ஆசாரத்துடன் சோபனாக்ஷதைகளால் பதினான்கு தர்ப்பணங்கள் செய்து திருப்தி செய்விக்கட்டும்" என்று வரம் அளித்தான். இதுவே, 'யம தர்ப்பண'மாகக் கடைபிடிக்கப்படுகிறது.
தவிர, தீபாவளியன்று நரகாசுரனை பகவான் வதம் செய்யச் சென்றபோது, அரக்கர்கள் ஸ்ரீலக்ஷ்மி தேவியைக் கொல்ல பெரும் முயற்சி செய்தனர். உடனே திருமகள் சூஷ்ம ரூபம் தரித்து எண்ணெய்யில் எரிந்து கொண்டு இருந்த தீபத்தில் மறைந்து விட்டாள்.
நரகனை வதைத்துத் திரும்பிய பகவான், அரக்கர்களைக் கொன்று தேவியை மீட்டார் என்று ஸ்ரீ விஷ்ணு புராணம் கூறுகிறது. இதனால்தான் இன்று தீபத்தையும், தைலத்தையும், ஸ்ரீலக்ஷ்மி ஸ்வரூபமாகக் கொண்டாடுகிறோம். இன்று தீப பூஜையும் வட இந்தியாவில் செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகையைக் கடைப்பிடிப்பதற்கு சாஸ்திரங்களில் விதிமுறைகள் கூறப்படுகின்றன. அதாவது, ஐப்பசி மாதம் தேய்பிறையில் அமாவாசைக்கு முன் தினமான சதுர்த்தசியன்று, பின் இரவில் அதிகாலை மூன்று மணியளவில் துயில் எழ வேண்டும்.
தீபாவளிக்கு முன் தினம் இரவே, வீடு முழுவதும் மெழுகிக் கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும். அதிகாலையில் எழுந்ததும் சுத்தமான தண்ணீரை எடுத்துக் குடம் அல்லது தவலையில் நிரப்பிச் சந்தனம், குங்குமம், வாசனை புஷ்பத்தால் அலங்கரிக்க வேண்டும்.
பிறகு ஆல், அரசு, புரசு, அத்தி, மாவலிங்கம் ஆகிய ஐந்து மரத்தின் பட்டைகளையும் தண்ணீரில் சேர்த்துக் கலந்து வெந்நீர் தயார் செய்ய வேண்டும். இதனை கோலம் போட்ட பலகையின் மேல் வைத்து புஷ்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
தீபம் ஏற்றி தைலம், வாசனாதி திரவியப் பொடிகள், லேகியம், புத்தாடைகள், ஆபரணங்கள் முதலியவற்றைப் பகவானுக்குச் சமர்ப்பிக்க வேண்டும். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிற்கு மாலைகள் சூட்டி, நிவேதித்து கற்பூர ஹாரத்தி காட்டி பிரார்த்தனை செய்ய வேண்டும்.
ஸ்நானம் செய்த பிறகு புத்தாடைகள் அணிந்து, ஸ்ரீலக்ஷ்மி நாராயணனை புஷ்பங்களால் பூஜித்து இனிப்புப் பண்டங்கள், பழங்கள், தாம்பூலம் நிவேதனம் செய்ய வேண்டும். பிறகு பகவானையும் பெரியோர்களையும் நமஸ்கரித்து, வாண வேடிக்கைகளாலும், தீபங்களாலும் வீடு முழுவதும் ஒளிரச் செய்ய வேண்டும். குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் தீபாவளி பலகாரங்கள் உண்டு பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.
இத்தகைய தீபாவளி தினத்தில் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணனை நன்கு வழிபட்டு அனுஷ்டித்தால் எல்லா நலமும் பெறுவோம் என்பது திண்ணம்.
'கங்கா தேவி நமஸ்துப்யம் சிவ சூட விராசிதே
சரண்ய ஸர்வ பூதானாம் த்ராஹிமாம் சரணாகதம்'
(இக்கட்டுரையை எழுதிய வாசகர் தனது பெயர் மற்றும் முழு முகவரியைத் தெரிவிக்கவும்.)
——————————–
——————————–
——————————–