கை கொடுக்கும் கை!

கை கொடுக்கும் கை!
Published on
தொகுப்பு : ஜி.எஸ்.எஸ்.

விளம்பர உலகில் கைகளை மட்டும் பயன்படுத்தி, லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும் என்பது தெரியுமா?! விளம்பரங்களில் தோன்றுபவர்களில், 'ஹேண்ட் மாடல்' என்று ஒரு பிரிவு உண்டு. அவர்களைத்தான் குறிப்பிடுகிறோம்.

நெயில் பாலிஷ் விளம்பரங்களில் க்ளோஸப்பில் சில விரல்கள் காட்டப்படும். அதேபோல தங்கம், பிளாட்டினம் நகை விளம்பரங்களில் மோதிரம் விரல்களில் அணியப்படும் காட்சியை அருகாமையில் காட்டுவார்கள். விஐபி ஒருவர் ஒரு கட்டடத்தைத் திறந்து வைப்பது போல் காட்ட, அவர் ரிப்பன் வெட்டுவது போலவோ, பரிசு உறை ஒன்றைத் திறப்பது போலவோ காட்டும்போது, அவர்கள் கை விரல்களுக்கு வெகு நெருக்கமாக கேமரா பயணிக்கும்.

அப்போது அந்த மாடலின் கையில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால், அது மொத்த விளம்பரத்தின் அழகுத் தன்மையையே சிதைத்துவிடும். அதுபோன்ற சூழலில் மேற்படி 'ஹேண்ட் மாடல்'களின் கைகள் க்ளோஸப்பில் பயன்படுத்தப்படும்.
ஹேண்ட் மாடல்களின் விரல்களில் உள்ள சருமம், சுருக்கம் இல்லாமல் பளபளப்பாக ஆரோக்கியமாகக் காட்சி தர வேண்டும். சுருக்கங்கள், மரு, மச்சம் போன்றவை இருக்கக் கூடாது. பச்சை குத்தப்பட்ட கைகளும் பொதுவாக விரும்பப்படுவதில்லை. விரல்களில் ரோமங்கள் இருக்கக்கூடாது.

ஹேண்ட் மாடல்களுக்கு பெரிய சவாலாக இருப்பவை கட்டைவிரல்கள்தான். மற்ற விரல்கள் அழகாகத் தோற்றமளிக்கும் பலருக்கும், கட்டைவிரல் அவ்வளவு சரியாக இருக்காது.

ஒரு ஹேண்ட் மாடலாக வேண்டும் என்றால் விளம்பரங்களில் கைகள் எப்படி எல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை நன்கு கவனித்து, அதேபோல கைகளை க்ளோஸப்பில் புகைப்படம் எடுக்க வைத்து, அவற்றை கவனித்து ஆராய வேண்டும். ஹேண்ட் மாடல்களுக்கென்றே தனி ஏஜென்சிகள் உண்டு! அவற்றை அணுகலாம்.

ஹேண்ட் மாடல் ஆவதற்குப் பயிற்சி செய்யும்போது கைகளை நகர்த்தாமல் ஒரே போஸில் வைக்க பயிற்சி தேவை. ஏனென்றால், படப்பிடிப்பின்போது கையை ஒரே நிலையில் நீண்ட நேரத்திற்கு வைத்திருக்க வேண்டியிருக்கும். விதவிதமான கோணங்களில் அதை புகைப்படம் எடுப்பார்கள்.

'ஹேண்ட் மாடலிங் செய்து என்னத்தை பெரிதாக சம்பாதிக்க முடியும்?' என்று அலட்சியமாக எண்ண வேண்டாம். ஒரு நாள் படப்பிடிப்புக்கு தங்கள் கைகளை பயன்படுத்துவதன் மூலம் 10,000 டாலர் வரை சம்பாதிப்பவர்கள் உண்டு! சில பிரபல நாவல்களின் அட்டைப் படத்துக்குக் கூட ஹேண்ட் மாடல்கள் பயன்பட்டிருக்கிறார்கள்.

அன்னே உடேலோ
அன்னே உடேலோ

உலகின் தலைசிறந்த ஹேண்ட் மாடல்களில் ஒருவர் அன்னே உடேலோ. இவர் தன்னுடைய கைகளை மட்டுமல்ல; உதடுகள், கால், பாதம், கண், கழுத்து என்று ஒவ்வொரு பகுதியையும் மாடலிங்கிற்கு விட்டு பெரும் ஊதியம் பெறுகிறார். ரீஸ் விதர்ஸ்பூன், நடாலி போர்ட்மேன், பெனிலோப் க்ரூஸ் போன்ற பல பிரபலங்கள் இடம் பெறும் விளம்பரங்களில் அவர்களுடைய கைகள் என்று க்ளோசப்பில் காட்டப்படுவது இவரது கைதான்.கோவிங்டன் என்பவர் மற்றொரு பிரபல ஹேண்ட் மாடல். தொடக்கத்தில் இவர் நடிகையாவதற்கு முயற்சி செய்தார். ஆனால், நடிகைகளுக்கான ஏஜென்ட் இவர் கைகளை கவனித்துவிட்டு, 'உன் முகத்தை மறந்துவிடு. கைகளில் கவனம் செலுத்து' என்று கூற, அவர் கூறிய வழியில் இன்று வெற்றிநடை போடுகிறார். பெரும்பாலான ஹேண்ட் மாடல்கள் தங்கள் கைகளில் எந்தவித நகைகளையும் அணிவதில்லை. காரணம் மோதிரம், பிரேஸ்லெட், வளையல் போன்றவற்றை அணிவதன் மூலம் கைகளில் அவை அழுந்திய அடையாளங்கள் தோன்றக் கூடும். தவிர, அவர்கள் பெரும்பாலான நேரங்களில் கையுறைகளை அணிந்து கொண்டிருப்பார்கள். ஏனென்றால், கைகளில் ஒரு சிறிய கீறல் விழுந்தால் கூட அது அவர்களுடைய தொழிலை பாதிக்கும். விரல் நகங்களை பாலிஷ் செய்துகொள்ள மாட்டார்கள். ஏனென்றால், வண்ண பாலிஷ் தங்கள் தடயத்தை கொஞ்சமாவது விட்டுச்செல்லும். உலர்ந்த கைகள் மாடலிங்கிற்கு உதவாது என்பதால், அவர்கள் ஒரு நாளைக்கு இருபது முறை தங்கள் கைகளில் மாய்ஸ்சரைஸிங் க்ரீமை தடவிக் கொள்வார்கள்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com