
தீபாவளி என்றாலே, மாப்பிள்ளைகளுக்குத்தானே அதிகக் கொண்டாட்டம். அழகிய மணவாளன் பெரியாழ்வாரின் மாப்பிள்ளைதானே, 'பூலோக வைகுண்டம்' என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர். அவரது தீபாவளி கொண்டாட்டம் அலாதியானது. தீபாவளியை முன்னிட்டு முதல் நாள் மாலை எண்ணெய் அலங்காரம், மேள தாளத்தோடு பெரிய பெருமாளுக்கு கண்டருளப் பண்ணுவார்கள்.
மேலும், கோயில் சிப்பந்திகளுக்கு நல்லெண்ணெய், சீகைக்காய் தூள் ஆகியவற்றை பெருமாள் சார்பாக வழங்குவார்கள். தீபாவளிக்கு முந்தைய இரவு உத்ஸவர் நம்பெருமாளுக்கும் எண்ணெய் அலங்காரம் நடைபெறும். அதைத் தொடர்ந்து கோயிலில் அருள்பாலிக்கும் ஆழ்வார், ஆச்சாரியர் சன்னிதிகளுக்கு நல்லெண்ணெய், சீகைக்காய்த்தூள், விரலி மஞ்சள் ஆகியவை பெருமாள் சார்பாக அந்தந்த சன்னிதிகளில் உள்ள அர்ச்சகர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
தீபாவளியன்று அதிகாலை தாயார் மற்றும் ஆழ்வார், ஆச்சாரியர் சன்னிதிகளில் எண்ணெய் அலங்காரம் செய்யப்பட்டு, திருமஞ்சனமும் நடைபெறும். அதைத் தொடர்ந்து மூலவர் மற்றும் உத்ஸவர்களுக்குப் புத்தாடை, மலர்மாலை அணிவித்து அலங்காரம் செய்து அவர்கள் அனைவரும் புறப்பட்டு பெரிய பெருமாள் மூலஸ்தானத்துக்குக் கிழக்கில் உள்ள கிளி மண்டபத்துக்கு வந்து, பெருமாள் வருகைக்காகக் காத்திருப்பார்கள்.
அப்போது பெருமாளின் மாமனாரான பெரியாழ்வார் ஸ்ரீரங்கநாதருக்காக தீபாவளி சீர் தருவார். சீர்வரிசையாக நாணய மூட்டைகள் வைக்கப்படும். ஜாலி அலங்காரம் என்ற ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு புது கைலிகளில் மூட்டையாகக் கட்டி பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிக்கப்படும். ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் அனைவரும் ஒவ்வொருவராக பெருமான் முன் எழுந்தருளி நிற்க, பெருமாள் அவர்களுக்குப் புது வஸ்திரம், சந்தனம், தாம்பூலம், மலர், பழங்கள் ஆகியவற்றை தீபாவளி பரிசாகக் கொடுத்து கௌரவிப்பார்.
இந்தக் காட்சியை தீபாவளி திருநாளில் தரிசித்தால், ஆடைகளுக்கும் பண வரவுக்கும் தட்டுப்பாடு உண்டாகாது.
———————————
தீபாவளி புண்ணிய தினத்தன்று அன்னபூரணிக்கு காசியில் தங்கக் குத்து விளக்கு ஏற்றுவார்கள். அப்போது ஈசுவரனுக்கு தங்கக் கரண்டியில் அன்னை அன்னம் வழங்கும் வைபவம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறும். தீபாவளிக்கு முந்தைய, 'தன திரயோதசி' அன்று தங்க அன்னபூரணிக்கு பூஜைகள் உண்டு. ஆனால், அன்று திரை போட்டு விடுவதால் அம்பிகையை தரிசிக்க இயலாது. மறுநாள், 'சோடி தீபாவளி' அன்று தரிசனம் கிடைக்கும். அன்று பொரியுடன் பத்து பைசா நாணயம் பிரசாதமாக அளிக்கப்படும். இந்தப் பிரசாதத்தைப் பெற்றுக்கொள்பவர் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
தீபாவளியன்று அன்னபூரணிக்கு குபேர பூஜை மற்றும் 'அன்ன கூட்' வைபவம் நடைபெறுகிறது. அன்னையின் முன்னால் அன்னத்தை மலைபோல் குவித்து வைப்பதுடன் முப்பது பெரிய தட்டுகளில் பலவித இனிப்புப் பண்டங்களையும் வைத்துப் படைப்பர். இறைவனுக்கு அன்னமிட்ட பின்னர் அந்த இனிப்புப் பண்டங்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதை, 'மிட்டாய் திருவிழா' என்றும் கூறுவர். அன்று மக்கள் கங்கா ஸ்நானம் செய்து விட்டு அன்னபூரணியை தரிசிக்கின்றனர். இதனால் சுமங்கலிகளுக்கு மாங்கல்ய பலம் பெருகும். தீபாவளி நாளில் லட்டு திருத்தேரில் ஸ்ரீஅன்னபூரணி பவனி வரும் காட்சி தரிசிக்க வேண்டிய ஒன்று. தீபாவளிக்கு மறுநாள் சகலவிதமான தன, தானிய சம்பத்துக்களை அளிக்கும் தேவிக்கு லட்சுமி பூஜை செய்து வழிபடுகின்றனர்.
– ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.
———————————
பண்டிகைக்குள் பெரியது தீபாவளி-அப்பண்டிகை
பண்டிகைக்குள் எல்லாம் தலை.
புத்தாடை பலகாரம் மத்தாப்பு இம்மூன்றும்
முத்தாகும் தீபாவளி பண்டிகைக்கு.
எல்லாப் பண்டிகை காட்டிலும் சிறியோர்க்கு
தீபாவளியே பிடித்த பண்டிகை.
தீபாவளி எனப்படுவது யாதெனின் யாவரும்
கூடி மகிழ்ந்திடும் திருநாள்.
உறவும் நட்பும் உடைத்தாயின் தீபாவளி
உற்சாகப் பண்டிகை யாம்
எவ்விருந்து உண்டார்க்கும் மகிழ்வுண்டாம்-அஃதில்லை
தீபாவளி மருந்து உண்ணாதோர்க்கு.
அன்பென்ப ஏனை இன்பமென்ப இவ்விரண்டும்
நன்றென்பர் தீபாவளிக்கு.
இனிப்பு இனிது என்பர் உறவுடன்
தீபாவளி இணைந்து கொண்டாடாதவர்.
– எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்
———————————
1. இனிக்கும் குளத்தில் மிதக்கும் சுவையான கருப்பு நிலா.
2. தலைக்குப் போட முடியாத குல்லா; வாய்க்குள் போடலாம்.
3. சமையலறையில் வெடிக்கும்; ஆனால் பட்டாசு அல்ல.
4. ஒளியும், ஒலியும் தீபாவளியின் சிறப்பு.
5. நெற்றியில் வைக்கும் மங்களப் பொருளுடன் தலைமுடியில் சூடுவது இணைந்துள்ளது.
6. அழகான பூக்கள் பத்திரிகைகளுக்கும் உண்டு. படிக்கலாம். சூட முடியாது.
7. தீபாவளி விருந்தோடு மருந்தும் உண்டு.
விடைகள் :
1.ஜாமூன், 2.ரசகுல்லர, 3.கடுகு, 4.மத்தாப்பு, பட்டாசு, 5.குங்குமப்பூ, 6.தீபாவளி மலர்,
7.லேகியம்.
– பி.மஹதி, ஸ்ரீரங்கம்
———————————
———————————