
கவனிச்சீங்களா? கவனிச்சீங்களா? இப்பல்லாம் மௌனமாக ஒரு புரட்சி மெள்ள நடந்து வர்றதை கவனிச்சீங்களா?
'உயரமான, ஸ்லிம்மான, சிவந்த நிறம், பட்டுப் போன்ற கூந்தல்… மேற்படி சங்கதிகள் கொண்ட பெண்தான் அழகு' என்ற 'கிளாமர் கிராமர்' நொண்டி அடிக்க ஆரம்பித்திருக்கிறது. விளம்பர உலகத்துலயே 'டஸ்க்கி' மற்றும் 'சுமார் அழகு' பெண்களைக் காட்ட ஆரம்பித்து விட்டார்கள்.
'ஃபேர் அண்ட் லவ்லி' 'க்ளோ அண்ட் லவ்லி'யாக மாறிவிட்டது. அவ்வளவு ஏன்? டீ.வி. சீரியல்களிலும் 'பாரதி கண்ணம்மா', 'ராஜகுமாரி', ' சுந்தரி' என மாநிறப் பெண்களும், பூசிய உடல்வாகு உள்ளவர்களும் கதாநாயகிகளாக ப்ரமோஷன்!
மிக முக்கியம்… உயரமான, சிவந்த நிறமுள்ள, மெல்லிய தேகமுள்ள' என்ற 'மணமகள் தேவை" விளம்பரங்கள் போயே போச்! பூதக் கண்ணாடி வெச்சுதான் தேட வேண்டியிருக்கு! 'ப்ளஸ் சைஸ்', 'எக்ஸ்ட்ரா லார்ஜ்' போன்ற பெயர்களில் தளதள பெண்களுக்காகவே பிரத்யேக ஷோரூம்கள் வந்து விட்டன.
ஸோ, பெண்ணை, அவளது சரும நிறத்துக்காகவும், வசீகர அளவுகளுக்காகவும், தனிப்பட்ட அந்தஸ்து தந்து அடையாளம் காணாமல், அவளை, அவருடைய பிறவி லட்சணங்களுடன், குறை – நிறைகளுடனேயே, அவருக்காக, அவளாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஞானம் சமூகத்தில் சிறிய அளவிலேனும் ஏற்பட்டுள்ளது வரவேற்புக்குரியதே!
ஆனாலும் மழை விட்டாலும், தூறல் விடாக் கதையாக புற அழகுக்கு ஓவரா முக்கியத்துவம் கொடுத்து பெண்கள் மனசொடிஞ்சு தற்கொலை செய்யும் நிகழ்ச்சிகளும் நடக்கத்தான் செய்கின்றன…
முகத்துல முகப்பரு நிறைய வந்துடுச்சாம்… ஒன்பதாம் கிளாஸ் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள்.
'கீடோ டயட்' செய்த நடிகை உடல்நலன் பாதிச்சு, இறந்து போகிறாள்.
'தான் கறுப்பு' என்ற தாழ்வு மனப்பான்மையால் ஓர் இளம்பெண் ஏரியில் குதித்து உயிரை விடுகிறாள்.
ஒரு விஷயத்தை மனசுக்குள்ள ஏத்திக்கலாமா கண்மணீஸ்? பெண்ணாய் பிறந்தாலே அழகுதான்! ஆகவே நாம் செய்ய வேண்டிய முதல் விஷயம் நம்மை நாமே ஆராதிக்க கத்துக்கணும். ''Self love' 'self worth' ' Self admiration' போன்ற எண்ணங்களை நாமும் கடைப்பிடித்து, நம் குழந்தைகளுக்கும் சொல்லித் தரணும்.
l "நான் மாநிறம், நான் குள்ளம், நான் அழகாக இல்லை" போன்ற நெகடிவ் எண்ணங்களே தேவையில்லை. ஏனென்றால் இங்கே யாருமே அழகற்றவர் கிடையாது. நாம் அழகு என்று நினைத்தால் அழகுதான்!
l ஜிம் ஃபிட்னெஸ் இல்லாவிட்டால் போகிறது… சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக, ஆக்டிவ்வாக, என்கேஜ்டாக இருந்தாலே யதேஷ்டம். தன்னம்பிக்கை ஒளிர்விட்டு, எல்லோருக்கும் பிடிச்சுடும்!
l வீட்டிலோ, அலுவலகத்திலோ, வெளியிலோ, நம்முடைய ஆகச் சிறந்தப் பங்களிப்பைத் தந்தாலே, முகத்துல ஒரு தேஜஸ் வரும் பாருங்க… அதுதாங்க ரியல் பியூட்டி.
l ஆற்றலும், அறிவும், அறமும் ஓங்கியிருக்கும் பெண்ணிடம் 'அழகு' தானா வந்து மண்டியிட்டு மயங்கி நிற்கும்.
l ஐம்புலன்களைத் தாண்டி யோசிக்க முடியாதவர்களுக்குத்தான் அழகு, அழகின்மை போன்ற கவலை எல்லாம்! அகத்திலா, ஆற்றலிலா, முகத்திலா எங்கே அழகாக இருக்கணும் என்பது அவரவர் தேர்வு.
'சுய காதல்' இருப்பவர்களுக்கு யார் பாடி ஷேமிங் செய்தாலும், கொஞ்சமும் வலிக்காது! அன்பா சிரிச்சுக்கிட்டே கடந்து போயிடுவாங்க…
நாம் ஒவ்வொருவரும் ஒருவிதமான அழகுதான்! நம்புங்க… ஏனென்றால் கடவுள் ஒருபோதும் தவறு செய்வதில்லை.