பிறவா பேறு தரும் வழிபாடு!

பிறவா பேறு தரும் வழிபாடு!
Published on

கவிதா பாலாஜிகணேஷ்

மாசி மாதப் பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திரத் திருநாள், 'மாசி மகம்' எனக் கொண்டாடப்படுகிறது. இத்திருநாள் இவ்வருடம் 17.2.2022 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் தீர்த்தமாடுவதை, 'கடலாடி' எனக் கூறுவர். மறைந்த முன்னோர்களுக்கு பித்ருக்கடன் செய்ய உகந்த நாளாகவும் இது கருதப்படுகிறது. ஜாதகத்தில் உள்ள பித்ரு தோஷம் நீங்க, மாசி மக வழிபாடு மிகச் சிறந்த பரிகாரமாகும்.

மாசி மகத்தன்று கோயில்களில் தெய்வங்களை தெப்பக்குளம் மற்றும் நீர்நிலைகளில் நீராட்டுவர். இது, 'தீர்த்தவாரி' என்று அழைக்கப்படுகிறது. தேவர்களே இன்று தீர்த்தமாடுவது இந்நாளின் சிறப்பை நமக்கு எடுத்துரைக்கும். அன்று நாமும் நீர்நிலைகளில் நீராடுவதால் நம்முடைய பாவங்கள் நீங்கி, புண்ணியம் பெருகும் என்பது நம்பிக்கை. இன்று நீர்நிலைகளில் நீராட முடியாதவர்கள் சிவாலயங்களுக்குச் சென்று, சிவன் பார்வதியை தரிசித்தல் நன்று.

மாசி மகத் திருநாளில் சூரிய பகவான் கும்ப ராசியிலும், சந்திரன் சிம்ம ராசியிலும் சஞ்சாரம் செய்வார்கள். அன்று சந்திரன் மகம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். மகம் நட்சத்திரத்துக்கு கேது பகவான் அதிபதியாக விளங்குவதால் இதற்கு, 'பித்ருதேவ நட்சத்திரம்' என்றும் பெயர் உண்டு. இந்த நாளில் புனிதத் தீர்த்தங்களில் நீராடுவது, 'பிதுர் மஹாஸ்நானம்' என்று கூறப்படுகிறது. கும்பகோணம் மகாமகக் குளத்தில் மக்கள் இன்று அதிகாலை முதலே புனித நீராடி, இறைவனை வழிபடுவார்கள்.

அதேபோல், சிம்ம ராசியில் குரு பகவான் மற்றும் சந்திரன் மக நட்சத்திரத்திலும் சஞ்சாரம் செய்யும் காலத்தில் வரும் பௌர்ணமி தினம், 'மகாமகம்' எனக் கொண்டாடப்படுகிறது. இது பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் நிகழ்வாகும்.

மாசி மக நன்னாளில்தான் பார்வதி தேவி, தாட்சாயணியாக அவதரித்தார். பாதாள லோகத்தில் இருந்து பூமிப் பிராட்டியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொணர்ந்த தினமும் இதுவே. மாசி மகத்தன்று காமதகன விழா சிறப்பாக நடைபெறும். இன்று நெல்லையப்பர் கோயிலில் திருநாவுக்கரசருக்கு, 'அப்பர் தெப்பம்' என்ற தெப்பத் திருவிழா சிறப்பாக நிகழ்த்தப்பெறுகிறது. ஆண் குழந்தை வேண்டும் என ஆசைப்படுபவர்கள் இந்நாளில் முருகப்பெருமானை வழிபட்டால், நிச்சயம் அது நிறைவேறும் என்பது ஐதீகம்.

திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமியநாராயண பெருமாள் கோயிலில் மாசி மகத் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இக்கோயிலில், 'மாசி மகக் கிணறு' என்னும் சிம்ம கிணறு உள்ளது. இதில் மக நட்சத்திர நாளில் நீராடுவது சிறப்பு. மந்திர உபதேசம் வேண்டி, திருக்கோஷ்டியூர் நம்பியிடம், ஸ்ரீ ராமானுஜர் 18 முறை தேடி வந்து உபதேசம் பெற்றது இங்குதான். மாசி மகத்தன்று இங்கு நடைபெறும் தெப்பத் திருவிழாவில் ஏராளமானோர் தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேற தீர்த்தத்தில் தீபமேற்றி வழிபடுவது வழக்கம்.

உயர் கல்வி பயில நினைப்பவர்களும், ஆராய்ச்சி தொடர்பான படிப்பைப் படிக்க விரும்புபவர்களும் மாசி மக நாளில் அதனைத் தொடங்கினால், அது தடையின்றி முடியும் என்பது திண்ணம். அன்று செய்யும் அன்னதானத்தின் மூலம் பாவங்கள் விலகும் என்பது ஐதீகம். மாசி மக நாளில் பெறப்படும் மந்திர உபதேசம் பன்மடங்கு பலனைத் தரவல்லது.

ராகு கேது தோஷம் மற்றும் கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இந்நாளில் புனித நீராடி, சிவ தரிசனம் செய்வதால் தடைகள் நீங்கும். மேலும், சதுரகிரி, திருவண்ணாமலை, பர்வதமலை, திருநீர்மலை, திருக்கழுகுன்றமலை போன்ற ஸ்தலங்களில் கிரிவலம் வருவதும் வாழ்வில் பல ஏற்றங்களைத் தருவதாகும். வடநாட்டில் இந்நாளை கும்பமேளா விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.

சிவன், விஷ்ணு, முருகன் என்று மூன்று தெய்வங்களுக்கும் உகந்த நாளான மாசி மக நாளில் புனித நீராடி , மாசி மக புராணம் படித்து, பிதுர் கடன் செய்வதன் மூலம், பிறவாப் பெருநிலையாகிய முக்தியைப் பெற முடியும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com