சொல்ல விரும்புகிறோம்!

சொல்ல விரும்புகிறோம்!
Published on

புத்தகப் பதிப்பில் தடம் பதிக்கும் இளம் புயல் வேலூர் லட்சுமிப்பிரியாவின் நேர்காணலை இவ்வார மங்கையர் மலரில் படித்து பெருமிதம் அடைந்தேன். எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துவது, அவர்கள் எழுதிய நூல்களை அச்சிட்டு வெளியிடுவது, புத்தகங்களை மின் நூல்களாக மாற்றுவது, இலக்கிய உரைகளை ஆற்றுவது போன்ற அரும்பணிகளை செய்துவரும் லட்சுமிப்பிரியா போற்றுதலுக்கும், பாராட்டுதல்களுக்கும் உரியவர்.
– ஆர்.வித்யா, பள்ளிக்கரணை

பஞ்சாட்சரப் பாறையில் வேல் வழிபாடு கட்டுரையைப் படித்தேன். திருப்பரங்குன்றத்தில் இருக்கும் பஞ்சாட்சரப் பாறையைப் பற்றியும், அங்கே நடைபெறும் வேல் வழிபாடு பற்றியும், அதற்கான புராண வரலாற்றையும் படித்து மெய்சிலிர்த்துப் போனேன். ஆன்மிகத் தகவல்களை அற்புதமாக வழங்கிய மங்கையர் மலருக்கு மனமார்ந்த நன்றிகள்.
குறிப்பு : திருப்பரங்குன்றத்திற்குச் சென்றால் அவசியம் பஞ்சாட்சரப் பாறையை கண்டு மகிழ்வேன்.
– எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி

'வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க' பக்கத்தில் வந்த, மூலிகை சுண்டல் மற்றும் கருஞ்சீரக டீயைப் பற்றிப் படித்ததும் இந்த மழை நேரத்தில் சுடச் சுட ஒரு கருஞ்சீரக டீ குடித்தது போன்று அருமையாக இருந்தது. காலத்துக்கேற்ற அழகான தகவல்களைப் பார்த்து பிரசுரிக்கும் 'மங்கையர்மலரின்' இந்த சேவைக்கு ஈடு இணையே இல்லை. பாராட்டுக்கள்.
– லக்ஷ்மி ஹேமமாலினி, சென்னை

அனுஷா அவர்களின், 'ஒரு வார்த்தை' உண்மையின் உரைகல். 'Self Love', 'Self worth', 'Self admiration' போன்ற எண்ணங்களை நாம் கடைப்பிடிக்க வேண்டும். நம் குழந்தைகளுக்கும் சொல்லித்தர வேண்டும் என்று மிக அழகாகவும் தெளிவாகவும் சொன்னது பாராட்டுக்கு உரியது. 'நாம் ஒவ்வொருவரும் ஒரு விதமான அழகுதான். கடவுள் ஒருபோதும் தவறு செய்யவில்லை' என்று எல்லோருக்கும் புரியும்படி மிகவும் தெளிவாகச் சொன்ன அனுஷாவின் அணுகுமுறைக்கு ஒரு ராயல் சல்யூட்.
– உஷா முத்துராமன், திருநகர்

'மாசி பிறை' சிறுகதை படித்து மனம் மகிழ்ந்தது. ஆச்சியைப் பற்றி அம்மா சொன்னதை கேட்டு, சாவித்திரியின் மனம் ஆறுதல் அடைந்ததில் ஒன்றும் வியப்பில்லை. அருமையான சிறுகதை. ஆச்சி போன்றவர்கள் இருப்பதால்தான் நாம் மகிழ்ச்சியுடன் இருக்க முடிகிறது. நல்ல சிறுகதையை பிரசுரித்த, 'மங்கையர் மலருக்கு' பாராட்டுக்கள்.
– வெ.முத்துராமகிருஷ்ணன், மதுரை

'கடவுள் உங்கள் முன் வந்தால் என்ன செய்வீர்கள்?' என்று ஒரு வாசகி கேட்ட கேள்விக்கு அருமையான பாட்டையே பாடி, அந்தக் கடவுளே நிச்சயம் வந்து விடுவார் என்று நினைக்க வைத்த அருமையான பதில். அனுஷா அவர்களால் மட்டுமே இதுபோன்ற வித்தியாசமான முறையில் எல்லாவற்றையும் சிந்திக்க முடியும் என்பதை, 'அன்பு வட்டம்' கேள்வி பதில்கள் மூலம் நிரூபித்து விடுகிறார்.
– நந்தினி கிருஷ்ணன், மதுரை

'ஒரு வார்த்தை' பகுதியில், 'ஆற்றலும், அறிவும், அறமும் ஓங்கியிருக்கும் பெண்ணிடம் அழகு தானாகவே மண்டியிடும்' என்று சித்தரித்து, பெண்களுக்கு அழகு என்றால் என்ன என்பதை ஒவ்வொரு வரியிலும் அழகாகக் கூறி, ஆர்வத்தோடு படிக்கத் தூண்டியது மிகவும் அழகுதானே!
– வி.கலைமதி சிவகுரு, நாகர்கோவில்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com