
மனிதன் தோன்றியபோதே, அவனது உணவுக்கான தேவையும் பிறந்துவிட்டது. அப்படியிருக்க ஐ.நா. சபை, உலக உணவு நாளாக அக்டோபர் 16ம் தேதியை கொண்டாடுவதேன்?
ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு தனது இருபதாவது பொதுக்கூட்டத்தை நவம்பர் 1979ல் கூட்டியது. இதில் முக்கியப் பங்காற்றினார் ஹங்கேரியின் உணவு அமைச்சரான பால் ரோமேனி. அவரது ஆலோசனைதான் உலக உணவு தினமாக ஒன்றை நிச்சயித்து, அதைக் கொண்டாடலாம் என்பது. பல்வேறு உலக தினங்களை மனதில் கொண்டு ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 16 அன்று இதைக் கொண்டாடலாம் என்று ஐ.நா.வில் தீர்மானிக்கப்பட்டது.
ஐ.நா.வின் மேற்படி அமைப்பு மட்டுமல்ல; உலக உணவு திட்டம், சர்வதேச வேளாண் முன்னேற்ற நிதியம் ஆகிய அமைப்புகளும் இந்த நாளைக் கொண்டாடுகின்றன. இன்று 150 நாடுகளில் உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது.
அதென்ன உலக உணவு தினம்? விதவிதமாகக் கிடைக்கும் உணவு வகைகளை அதிகம் தின்று தீர்ப்பதற்கான நாளா? அதுவும்தான். ஆனால், தினமும் ஒரு வேளை உணவுக்குக் கூட வழியில்லாதவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பதற்கான நாளாகவும் இதை நாம் கொள்ள வேண்டும்.
மிக அதிக முதலீடு தேவைப்படும் ஒரு துறை விவசாயம். ஆனால், பல நாடுகளில் தனியார் மற்றும் பொதுத்துறை முதலீடுகள் என்பது இந்தத் துறையில் குறைவாகவே உள்ளன. போதிய உணவு இல்லாக் காரணமாக, ஏழை நாடுகளில் உடல் ஆரோக்கியம் கெடுகிறது என்றால், மக்களின் தவறான உணவுப் பழக்கம் காரணமாக பணக்கார நாட்டு மக்களின் ஆரோக்கியமும் தொலைந்து கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
பொருளாதார பரிவர்த்தனைகளைப் பொறுத்தவரை, உலக அளவில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. மக்கள் தொகையைப் பொறுத்தவரை உலகில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது. நாட்டில் சுமார் நான்கில் ஒருவர் வறுமைக்கோட்டுக்குக் கீழேயே இருக்கிறார். பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே இருக்கும் வருமான இடைவெளி என்பது மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
உலகில் உண்ணும் வகையில் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தாவரங்கள் இருந்தாலும், அவற்றில் ஒன்பது தாவரங்கள்தான் நம் உணவில் அறுபத்தி ஆறு சதவிகிதத்தைப் பிடித்து வைத்திருக்கிறது. இதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. உணவு தானியங்களும் உணவுப் பொருட்களும் பல விகிதத்தில் வீணாகிக் கொண்டிருக்கிறன என்பதும் மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று. பதினான்கு சதவிகிதம் உணவு வீணாகிறது என்கிறார்கள்.
ஐ.நா. அறிவித்துள்ள பல சிறப்பு தினங்களில் பல்வேறு நாடுகளிலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது உணவு உலக தினம். அரசுகள், வணிக நிறுவனங்கள், அரசுசாரா அமைப்புகள், ஊடகங்கள், பொதுமக்கள் என்று பலரும் இதைக் கொண்டாடுகிறார்கள். பசியால் வாடும் மக்களைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கங்களை வலியுறுத்துதல் ஆகியவை இந்த தினத்தின் முக்கிய நோக்கங்கள்.
உலக உணவுப் பரிசு என்ற ஒன்றும் உண்டு. இது ஒரு பன்னாட்டு விருது. இது மனித வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல பாடுபடும் தனிநபர்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த வளர்ச்சி உணவின் தரத்தையும், அளவையும், கிடைக்கும் தன்மையையும் கொண்டு அளவிடப்படுகிறது.
நோபல் பரிசு பெற்ற நார்மன் போர்லாக் என்பவரால் 1985ம் ஆண்டு இந்த பரிசுத் திட்டம் தொடங்கப்பட்டது. சஞ்சயா ராஜாராம், மோடடகு விஜய் குப்தா, சுரீந்தர் வசால், பி.ஆர்.பர்வாலே, குருதேவ் குஷ், வர்கீஸ் குரியன், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகிய இந்தியர்கள் இந்தப் பரிசைப் பெற்றுள்ளனர்.
——————————
நீங்கள் உணவுப் பிரியராக இருக்கலாம். அதீத ரசனையோடு உணவை உட்கொள்பவராக இருக்கலாம் என்றாலும், உணவுப் பொருட்களைப் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும் என்பதை அறிந்துகொள்ள இதோ சில தகவல்கள் :
——————————
உணவுக்கும் குணங்களுக்கும் சம்பந்தம் உண்டு என்று பழைய நூல்களும் ஆய்வுகளும் கூறுகின்றன.
சாத்விக உணவு : பால், பழம், தேன், பருப்பு போன்றவை சாத்விக உணவுகளாகும். இவை உடல் நலத்துக்கு ஏற்றவை. இவை நற்குணங்கள் உருவாகவும் உதவுகின்றன.
ராஜச உணவு : காரம், புளிப்பு, துவர்ப்பு, மணமுள்ள பொருட்கள் ராஜச குணம் தருபவை. இதை அளவுக்கு மீறி உண்பதால், உடல் நலம் கெடும். மனஅமைதி கிடைக்காது.
தாமச உணவு : சமைத்து மூன்று மணி நேரத்துக்கு மேலானால் உணவின் சுவையும், சத்தும் குறையும். ஆறிய உணவு சோம்பல் தரும். தூக்கம் வரும். இதை கடவுளுக்கு படைக்கக் கூடாது. நாமும் உண்ணக் கூடாது.
– ஆர்.பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்
—————-