
– ரேவதி பாலு
மார்கழி மாதம் சைவம், வைணவம் இரண்டையும் இணைக்கும் உன்னதமான மாதமாக விளங்குகிறது. இம்மாதத்தில் வைணவக் கோயில்களில் திருப்பாவையும், சிவன் கோயில்களில் திருவெம்பாவையும் பாடப்படுகிறது. அதேபோல, சிவனுக்கு உகந்த ஆருத்ரா தரிசனமும், விஷ்ணுவுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசியும் மார்கழியில்தான் வருகின்றன.
விஷ்ணுவை வேண்டி வழிபடும் விரதங்களில் முதன்மையானதாகத் திகழ்வது,'ஏகாதசி விரதம்.' இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பது, 'அஸ்வமேத யாகம்' செய்த பலனைக் கொடுக்கும் என்கின்றன புராணங்கள். 'காயத்ரிக்கு ஈடான மந்திரம் இல்லை; தாய்க்கு சமமான தெய்வம் இல்லை; கங்கைக்கு ஈடான தீர்த்தம் இல்லை; ஏகாதசிக்கு சமமான விரதம் இல்லை' என்று இந்த விரதத்தின் மகிமையைப் பற்றி அக்னி புராணம் எடுத்துரைக்கிறது.
விரதத்திலேயே சிறந்த விரதம் என்று ஏகாதசி விரதத்தைச் சொல்வார்கள். ஏகாதசி விரதம் மாதத்திற்கு இரண்டு முறை வருவதாகும். ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசி தினத்தன்று இருக்கும் விரதத்திற்கு ஏற்றவாறு நற்பலன்கள் கிடைக்கும் என்றாலும், மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி விரதமே அனைத்து ஏகாதசி விரதத்திலும் சிறந்தது. வைகுண்ட பதவிக்கே இந்த ஏகாதசி வழி வகுக்கும் என்பதால் இதற்கு, 'மோட்ச ஏகாதசி' என்ற பெயரும் வந்தது.
மார்கழி மாதத்தில் நம் மனதைக் குளிர வைக்கும் விரதம்தான் வைகுண்ட ஏகாதசி விரதம். மார்கழி மாதம் வளர்பிறை பதினொன்றாம் நாள் வைகுண்ட ஏகாதசியாக இந்துக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. பகல் பத்து, இராப்பத்து என இருபது நாட்கள் திருவிழாவாகக் கொண்டாடப்படும்போது, பகல் பத்து முடியும் பத்தாம் நாள் வைகுண்ட ஏகாதசி என்று சிறப்பித்துக் குறிப்பிடுகிறார்கள். அன்றுதான் பெருமாளின் பக்தர்களுக்காக வைகுண்டத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன என்று நம்பப்படுகிறது.
இந்து சமயத்தவர்கள், குறிப்பாக வைணவர்கள் வைகுண்ட ஏகாதசி அன்று கண்டிப்பாக விரதம் இருந்து பெருமாளை வழிபடுகின்றனர். கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் என்னும் பதினொரு இந்திரியங்களால் செய்யப்படும் தீவினைகள் எல்லாம் இந்த வைகுண்ட ஏகாதசி திதியில் விரதம் இருந்து பெருமாளைத் தொழுதால் அழிந்து விடும் என்பது இந்துக்களின் உறுதியான நம்பிக்கை. இந்த விரதம் இருக்கும்போது உணவு உண்பதை முற்றிலுமாகத் தவிர்த்து விட்டு, முழுப் பட்டினியாக இருந்து வழிபாடு செய்கிறார்கள். வைகுண்ட ஏகாதசியன்று விடியற்காலையில் பெருமாள் கோயில்களில் வடகிழக்கு மூலையில் அமைக்கப்படும், 'சொர்க்க வாசல்' என்னும் வாயில் வழியாகச் சென்று பெருமாளை தரிசிப்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருப்பதன் பலன்கள் எண்ணற்றவை. வருடத்துக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசியன்று திறக்கப்படும் பரமபத வாயிலின் படியை நாம் தாண்டிச் சென்று பெருமாளை சேவிக்கும்போது அதுநாள் வரை நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் அழிகின்றன. வருங்காலத்திற்குத் தேவையான, அறிவு, ஆற்றல், விவேகம் எல்லாம் கிடைப்பதோடு, இந்த உலக வாழ்வு முடிந்த பின் வைகுண்டப் பிராப்தியும் கிடைக்கும். இந்த நாளில் பெருமாளின் நினைவில் மட்டும் மூழ்கி அவன் புகழைப் பாடி விரதம் இருந்தால் மனக்கவலைகள் நீங்கி, மன நிம்மதியோடு கூடிய வாழ்க்கை அமையும். இப்பேர்ப்பட்ட பாக்கியங்கள் நமக்குக் கிடைக்கக் காரணமானவர்கள் யார் தெரியுமா? மது, கைடபர் என்னும் இரண்டு அசுரர்கள்தான்.
முற்காலத்தில் பிரம்மாவுக்கு ஏற்பட்ட அகங்காரத்தை ஒடுக்க நினைத்த மகாவிஷ்ணு, தனது காதுகளிலிருந்து மது, கைடபர் என்னும் இரண்டு அசுரர்களை வெளிப்படச் செய்தார். அவர்கள் பிரம்மாவைக் கொல்ல முயன்றபோது, அவர்களைத் தடுத்த மகாவிஷ்ணு, பிரம்மாவை விட்டு விடச் சொல்லி, அவர்கள் கேட்கும் வரத்தை தான் தருவதாகச் சொல்கிறார். ஆனால் அந்த அசுரர்கள், மகாவிஷ்ணுவை தங்களிடம் வரம் கேட்கும்படி சொல்லி, தங்களால் அவர் விரும்பும் எந்த ஒரு வரத்தையும் தர முடியும் என்றும் சொல்கிறார்கள். இதைத்தானே விஷ்ணு பகவானும் எதிர்பார்த்திருந்தார்? உடனே தன்னால் அவர்கள் வதம் செய்யப்பட வேண்டும் என்னும் வரத்தை அவர்களிடம் கேட்கிறார். அசுரர்களாக இருந்தாலும், தாங்கள் சொன்ன சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவருக்குக் கொடுத்த வரத்தின்படி அவரால் வதம் செய்யப்படுகிறார்கள். அப்போது அந்த அசுரர்கள் தாங்கள் விஷ்ணு பகவானின் பரமபதமான வைகுண்டத்தில் நித்தியவாசம் செய்ய வேண்டும் என்று அவரிடம் ஒரு கோரிக்கை வைக்கிறார்கள்.
மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று வைகுந்தத்தின் வடக்கு வாசலைத் (சொர்க்க வாசல்) திறந்து, அதன் வழியாக மது, கைடபர் என்னும் இரு அசுரர்களை பகவான் பரமபதத்தில் சேர்த்துக் கொண்டார். அந்த அசுரர்கள் இரு கரம் கூப்பி, "பகவானே! தாங்கள் எங்களுக்கு இன்று செய்த அனுக்ரஹத்தை ஒரு உத்ஸவமாகக் கொண்டாட வேண்டும். வருடந்தோறும் இந்த நாளில் பெருமாள் ஆலயங்களின் சொர்க்க வாசல் வழியாக வரும் பக்தர்களுக்கு மோட்சம் கிடைக்க அருள வேண்டும்" என்று வரம் கேட்டனர். இவ்வாறாக வைகுண்ட ஏகாதசி வைபவம் ஆலயங்களில் கொண்டாடுவது பழக்கத்தில் வந்தது. பாவங்களைக் களைந்து, காக்கும் கடவுளாகத் திகழும் மகாவிஷ்ணுவை வைகுண்ட ஏகாதசியன்று வழிபட்டு மோட்ச வாழ்வுக்கு வழி தேடுவோம்.