
உலக வரலாறு பற்றிக் குறிப்பிடும் பொழுது, கி.மு., கி.பி. எனக் குறிக்கப்பட்டு வழங்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு காலகட்டத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் வரலாற்றுச் சம்பவங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட கி.மு., கி.பி. எனக் குறிப்பிடுவது உண்டு. அந்த வகையில் எத்தனையோ பேரிடர்கள் இந்த உலகை எட்டிப் பார்த்திருந்தாலும், ஒட்டுமொத்த உலகையும் ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாகப் புரட்டிப்போடவும், முடக்கி வைக்கவும் முடியும் என்றால் அது தன்னால்தான் முடியும் என கொரோனா நிரூபித்துக் காட்டியிருக்கின்றது.
இத்தகைய சூழலில் நம்மை ஆண்ட, ஆளுகின்ற அரசானது பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் துணையாக இருந்தும் வந்திருக்கின்றது, இருக்கவும் முயற்சி செய்து கொண்டிருக்கிறது.அரசாங்கம் என்பது கடவுள் அல்ல என்பதை அனைவரும் உணர்ந்தும் புரிந்தும் வைத்திருக்கின்றோம். உண்மை எதுவாக இருந்தபோதும் வாழ்கின்ற மக்களைக் காக்கின்ற பொறுப்பும், கடமையும், அரசாங்கத்திற்கு உண்டு. அந்த வகையில் எல்லோருக்கும் உதவிட, ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒன்றை அரசு செய்து கொண்டுதான் இருக்கிறது.
அரசுக்காகப் பணியாற்றும் அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரையும் தாங்கிப் பிடித்த அரசாங்கம், அரசை நம்பி வாழும் பொதுமக்களின் பாதிப்புகளைப் போக்குகின்ற அரசாங்கம் தனியார் பள்ளிகளில் பணியாற்றி இன்று வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்து நிற்கின்ற தனியார்பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களை மட்டும் காணாமல் விட்டுவிட்டதோ என்னும் பேரச்சம் தனியார் பள்ளி ஆசிரியர்கள் இடையே வெகுவாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆட்சியில் தனியார்பள்ளி ஆசிரியர்களுக்கென தனியே நிவாரணமோ இழப்பீடோ எதுவும் வழங்கப்படவில்லை. தற்போது புதிய அரசு பொறுப்பேற்ற பிறகாவது தங்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கின்றனர் தனியார்பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள். ஆனால் இவர்களுக்கான எவ்வித நிவாரணமும் கிடைப்பதற்கு உரிய சூழலோ அறிவிப்போ காணப்படவில்லை என்னும்பொழுது அவர்களுடைய எதிர்காலம் பெருத்த கேள்விக்குறியோடு நிற்கின்றது.
தனியார் பள்ளி, கல்லூரிகளில் கிடைக்கும் மிகக் குறைவான ஊதியத்தை நம்பி வீடு கட்டுவதற்கும், தங்களுடைய குழந்தைகளுடைய கல்விக்கும், தங்களுடைய அன்றாட செலவினங்களுக்கும், தங்கள் பிள்ளைகளின் திருமணத்திற்குமென பலவிதமான கடன்களை வங்கிகளிலும், தனியார் நிறுவனங்களிலும் பெற்று தனியார் பள்ளி ஆசிரியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில் கொரோனா என்னும் பெருந்தொற்றின் காரணமாக, கடந்த 18 மாதங்களுக்கு மேலாக இவர்களுடைய வாழ்வாதாரம் பெருத்த கேள்விக்குறியானதால், பெரும்பாலான தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களது நிலை அன்றாடங் காய்ச்சிகளைவிட, மோசமான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதே எவராலும் மறுக்கமுடியாத உண்மை.
மீண்டும் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் சூழலில்கூட அப்பள்ளிகளில், கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை, மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்துகின்ற தன்மை, பள்ளியானது மீண்டும் இயல்பான சூழலில் இயங்குகின்ற வாய்ப்பு, இவற்றை பொறுத்தே இவர்களுடைய ஊதியம் நிர்ணயம் செய்யப்படவும், மீண்டும் பழைய ஊதியம் வழங்கப்படும் வாய்ப்பும் அமையும்.
தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் இன்றைய நிலையும், வருங்காலச் சூழலும் இப்படியிருக்க இவர்களது நிலைமை பற்றியும், எதிர்காலம் பற்றியும் அக்கறைப்பட வேண்டியது அரசினுடைய கடமை ஆகும். நிதிநிலை அறிக்கையில் இவர்களைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், நிதிநிலை சீராகும்வரை, எத்தனை பேர் தாக்குப்பிடிப்பார்கள் என்பது சற்றே கவலைக்குரிய விஷயமாக இருக்கின்றது. இளங்கலை, முதுகலை எல்லாம் முடித்து, அரசுப்பணி கிடைக்கும்வரை தனியார் பள்ளிகளில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்களில் பலர் இன்றைக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி தேடிக்கொண்டிருக்கும் அவலம் நெஞ்சைப் பிழிகின்றது.
தமிழக முதல்வர் தனிக்கவனம் கொண்டு, உரிய தீர்வைத்தர வேண்டும் என்பதே தனியார் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களது எதிர்பார்ப்பு மட்டுமல்ல, கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஏனெனில் இது வளர்ச்சிக்கான கோரிக்கை அல்ல. அவர்களது வாழ்க்கைக்கான கோரிக்கை.