ஆணுக்கும் உண்டு கற்பு!

ஆணுக்கும் உண்டு கற்பு!
Published on

ராவண வதத்துக்குப் பிறகு ஸ்ரீராமர் ஒரு பாறையின் மீது தமது கால்களை நீட்டி அமர்ந்து, கண்களை மூடியிருந்தார். அப்போது அவருக்கு முன்பு ஒரு உருவத்தின் நிழல் விழுந்தது. ஏதோ ஒன்று உறுத்த, கண் விழித்துப் பார்த்த அவர் அது ஒரு பெண்ணின் நிழல் என்பதை உணர்ந்தார். உடனே அவர் தமது கால்களை மடக்கிக் கொண்டு அமர்ந்தார். அருகே வந்த அந்தப் பெண்ணின் நிழல் உருவம் யாருடையது என்பதை அவர் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. உடனே அந்த நிழல் உருவம் வந்த வழியே திரும்பிச் சென்றது.
அதைக் கண்ட ஸ்ரீராமர், "யார் அது?" என்றார்.
"நான் மண்டோதரிராவணனின் மனைவி" என்றது அந்த நிழல் உருவம்.
"சரிஎதற்காக என்னைப் பார்க்க வந்தீர்கள்" என்றார் ஸ்ரீராமர்.

"என் கணவர் சர்வ வல்லமை படைத்தவர். அவரை இதுவரை யாரும் வென்றதில்லை. அப்பேற்பட்டவரை வென்ற உங்களுக்கு அப்படி என்ன சிறப்பு உள்ளது என்பதைக் காண வந்தேன். கண்டு விட்டேன்" என்றது மண்டோதரியின் நிழல் உருவம்.
"என்னிடம் என்ன கண்டு விட்டீர்கள்?" என்று கேட்டார் ஸ்ரீராமர்.

"கண்டு கொண்டேன். என் நிழல் கூட உங்கள் மீது விழக் கூடாது என்று, நீட்டியிருந்த உங்கள் காலை மடக்கியபோதே புரிந்து கொண்டேன் நீங்கள் யார் என்பதை" என்றது அந்த நிழல் உருவம்.
"என்ன புரிந்து கொண்டீர்கள் என்னைப் பற்றி…" என்றார் ஸ்ரீராமர்.

"நீங்களோ, உங்கள் மனைவி சீதாவின் நிழலைத் தவிர்த்து, மற்றெந்த பெண்களின் நிழலைக் கூட உங்களை நெருங்க விடாதவர்" என்பதைப் புரிந்து கொண்டேன் என்றாள் மண்டோதரி.
"அதனால் என்ன…?" என்றார் ஸ்ரீராமர்.

"எனது கணவரோ, தோற்கடித்த ஒரு ஆணின் மனைவியை உடனே தனது நிழலில் கொண்டு வருபவர். ஆனால் நீங்களோ, வெற்றி பெற்ற பின்பும் மற்றவர் மனைவியின் நிழல் கூட தன் மீது பட விரும்பாதவர். இதுதான் உங்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசம்" எனக் கூறிவிட்டு, ஸ்ரீராமனின் பதிலுக்குக் காத்திராமல் சென்று விட்டது மண்டோதரியின் நிழல் உருவம்.

ஸ்ரீராமன் ஏகபத்னி விரதன் என்பதற்கு, இதைவிட சிறந்த ஒரு உதாரணத்தைக் கூற முடியாது.

ஸ்ரீ உ.வே.வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி உபன்யாசத்திலிருந்து
சங்கரி வெங்கட், பெருங்களத்தூர்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com