‘அதை வெளிப்படுத்துபவனே நல்ல நடிகன்’

‘அதை வெளிப்படுத்துபவனே நல்ல நடிகன்’
Published on

lll

ஒரு கலைஞனின் பயணம் முடிந்தது

– வினோத்

மிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் நெடுமுடி வேணு, அண்மையில் கொரோனா கொடூரத்துக்குப் பலியானார்.

கலகலப்பான சுபாவம் கொண்டவரான வேணு, தமது எளிமையான அணுகுமுறை மூலம் எண்ணற்ற ரசிகர்களைக் கொண்டவர். நடிப்புத்துறை தவிர, கிராமியப் பாடல்கள், மிருதங்கம் இசைக் கருவியைக் கையாளுவதிலும் அவர் தேர்ச்சி பெற்றிருந்தார். 1978 முதல் மேடை நாடகங்களில் மும்முரமாகக் கவனம் செலுத்தி வந்தார். திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு 'காலகமுடி' பத்திரிகையில் செய்தியாளராகப் பணிபுரிந்த அவர், நாடக கலைஞராகவும் இருந்திருக்கிறார்.

திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தவுடன் தன் கிராமத்திலிருந்து திருவனந்தபுரம் வந்து வசித்தவர். சில படங்களில் நடித்து மக்களிடையே நன்கு அறிமுகமான நடிகராக இருந்த போதும், திருவனந்தபுரத்தில் எந்தவித பந்தாவும் இல்லாமல் எளிமையாக இருந்தவர்.

வங்கிக்குச் சென்று செக் மாற்றுவது, அஞ்சல் அலுவகத்துக்குச் செல்வது போன்ற பணிகளைத் தானே செய்வார். ஸ்கூட்டர் வாங்கும் முன் நகரப் பஸ்சில் பயணம் செய்தவர். தன் மகளைப் பள்ளியில் சேர்க்கச் சென்றவர் விண்ணப்பத்தில் 'தொழில் நாடகக் கலைஞன்' என்று எழுதியிருந்தார். அதைப் பார்த்து 'இப்போது சினிமாவிற்கு வந்துவிட்டீர்களே' என்று கேட்தற்கு 'நாடக நடிப்புதான் என் பிழைப்பு. நாளை சினிமா வாய்ப்புகள் இல்லாது போனால் என் நிரந்தரத் தொழிலான நாடகத்துக்குப் போய்விடுவேன்' என்றவர், திரைத்துறையில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துத் தனியிடம் பெற்றவர். 3 படங்களுக்குக் கதை, வசனம், ஒரு படம் டைரக்‌ஷன் எனத் தன் திறமையை வெளிப்படுத்தியவர்.

அய்யப்பப் பணிக்கர், கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் போன்ற  கவிஞர்களின் கவிதைகளை அவர் சொல்லும் பாங்கு கவிதைகளுக்கு இன்னொரு பரிமாணத்தையே அளிக்கும். இந்த இலக்கிய ஈடுபாடுதான் அவரை திரைக்கதை எழுத்தாளராக்கியது.

மூன்று தேசிய விருது பல மாநில விருதுகள் வாங்கியவர். ஓர் ஆங்கிலப் படத்திலும் நடித்திருக்கிறார்.

கலைப் படங்களில் நடிப்பதில் ஆர்வம் கொண்ட இவரைப் புனா ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கு வகுப்பு நடத்த விருந்தினராகக் கிரிஷ் கர்னாட் அழைத்தபோது வேணு சொன்ன பதில்: " எனக்கு நடிக்கத்தான் தெரியும்; சொல்லிக்கொடுக்கத் தெரியாது"

ஒரு படத்தில் வேணு ஏற்றிருந்த பாத்திரம் இறந்த நிலையில் கால் நீட்டிக் கிடப்பதாகக் காட்சி. காட்சி படமாக்கப்படும் வரை அசையாமல் கிடந்தார். காட்சி முடிந்ததும் சிரித்துக்கொண்டே எழுந்தார்.  'அசையாமல் படுத்துக் கிடப்பதைச் சுலபமாக நடித்துவிடலாம், இல்லையா?' என்று ஒரு நண்பர் குறிப்பிட்டார். 'இல்லை… அதுவும் சிரமமானதுதான். சும்மா கட்டைபோலக் கிடப்பதல்ல நடிப்பு. அந்தப் பாத்திரம் இறக்கும்போது என்ன மனநிலையில் இருந்தது என்பதையும் நடிகன் முகத்தில் காட்ட வேண்டும். நிம்மதியான சுக வாழ்க்கை நடத்தியவரென்றால் சிரித்த முகமாக இறந்திருப்பார். கடன்பட்டு நொந்துபோனவரானால் அந்தச் சலிப்பும், நோயாளியாக இருந்தால் அந்த வாதையும் முகத்தில் தென்படும். அதை வெளிப்படுத்துபவனே நல்ல நடிகன்' என்று பதில் சொன்னார் வேணு.

குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் நடித்திருந்தாலும் நெடுமுடி வேணுவுக்குத் தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் உண்டு.

'மோக முள்'ளில் தான் ஜானகிராமன் உயிரும் உடலுமாகக் கற்பனை செய்த 'ரங்கண்ணா' வேடத்துக்கு, வேணுவைத் தவிர பொருத்தமான இன்னொரு நடிகர் இருந்திருக்க வாய்ப்பில்லை.

கடைசியாகத் தமிழில் வேணு  'நவரசா' இணையத் தொடரில் நடித்திருந்தார், தமிழில் வெளிவர இருக்கும் 'இந்தியன் 2' படத்தில் நடித்திருக்கிறார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வந்த சூப்பர் ஹிட்டான 'இந்தியன்' படத்தின் முதல் பாகத்தில் 'கிருஷ்ணசாமி' என்ற போலிஸ் கதாபாத்திரத்தில் இவர் நடித்தது பரவலாகப் பேசப்பட்டது. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர் நடித்திருக்கிறார்.

திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு 'காலகமுடி' பத்திரிகையில் செய்தியாளராகப் பணிபுரிந்தானாலோ என்னவோ பத்திரிகைக்காரிகளிடம் தனி மதிப்பு. எளிதாக எந்தப் பத்திரிகையாளரும் அவரிடம் போனில் பேசலாம்.

தென்னிந்தியக் கலையுலகம் ஒரு நல்ல கலைஞனை இழந்துவிட்டது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com