மகாசிவராத்திரி செய்திகள்

மகாசிவராத்திரி செய்திகள்
Published on

சிவராத்திரி பெருமை

சிவராத்திரி ஈசன் தமது காலால் காலனை உதைத்த நாள். தேவர்கள் சிவனை அர்ச்சித்த நாள். பதினொரு கோடி ருத்ரர்கள் ஈசனை வழிபட்ட நாள். பார்வதி தேவி, சிவபெருமானை பூஜை செய்த சிறப்புமிக்க நாளாகும்.

லிங்கோத்பவ காலம்

சிவராத்திரியன்று இரவு 11.30 மணி முதல் 12.30 மணி வரையுள்ள காலம் லிங்கோத்பவ காலமாகும். இந்த நேரத்தில்தான் ஈசன் சிவலிங்க வடிவில் தோன்றியதாக ஐதீகம். எனவே, சிவராத்திரியன்று இந்த நேரத்தில் கண் விழித்து இறைவனை தரிசனம் செய்வது மிகப் புண்ணியமாகும்.

மூங்கில் அரிசி பொங்கல்!

தேனி மாவட்டம், முத்துதேவன்பட்டியில் உள்ள நாககாளியம்மன் கோயிலில் சிவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று அம்மனுக்கு மூங்கில் அரிசியில் கரும்புச் சாறு கலந்து பொங்கல் நைவேத்தியம் படைக்கப்பட்டு, பிறகு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

க்ஷேத்ர பாலிகா உத்ஸவம்!

திருமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடாசலபதி கோயிலில் மகாசிவராத்திரியன்று, 'க்ஷேத்ர பாலிகா' என்ற உத்ஸவம் நடைபெறுகிறது. அன்று மலையப்ப ஸ்வாமி (உத்ஸவர்)க்கு வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெறுகிறது.

எஸ்.ராஜம், திருச்சி

சிவராத்திரி நிருத்யம்!

கேரள மாநிலம், ஆலப்புழா பகுதியில் மன்னார் என்ற ஊரில் அமைந்துள்ள திரிகுரட்டி மகாதேவர் ஆலயத்தில் சிவராத்திரி உத்ஸவம், 'சிவராத்திரி நிருத்யம்' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அன்று சீவேலி உத்ஸவ விக்ரகத்தை தலையில் தாங்கிக்கொள்ளும் அர்ச்சகர் நான்கு முறை பிரதட்சணம் வருவார். ஐந்தாவது முறை மேற்கு வாசலிலிருந்து கிழக்கு வாசல் வரை பக்தர்களின் கோஷங்களுக்கு இடையே நிருத்யம் ஆடிக்கொண்டு செல்வார். பின்னர் காணிக்கையை ஏற்றவாறு கோயிலை இருமுறை வலம் வருவார்.

வீரபத்ரர் விழா

ந்திர மாநிலம், கடப்பா அருகில் உள்ள தலம் ராயக்கோட்டி. தட்ச யாகத்தைச் சிதைத்த வீரபத்ரருக்கு இங்கு தனிக் கோயில் அமைந்துள்ளது. சிவராத்திரியை முன்னிட்டு பதினொரு நாட்கள் நடைபெறும் பிரம்மோத்ஸவத்தில் எட்டாம் நாள், 'தட்சம் வதம்' என்ற பெயரில் விழா நடத்தப்படும். அப்போது 365 படி அரிசியை சாதமாக்கி கிழங்கு வகைகள், அதிரசம், வேக வைத்த பூசணிக்காய் ஆகியவற்றை வீரபத்ரரின் சன்னிதியில் மலை போல் குவித்து வைப்பார்கள். பூசாரி வீரபத்ரரின் ஆயுதம் கொண்டு அதைக் கிளறி சன்னிதி முழுவதும் சிதறச் செய்வார். பின்னர் அதைப் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குவார்கள். இது, தட்சனின் யாகத்தை வீரபத்ரர் சிதறடித்ததை உணர்த்துவதாகக் கருதப்படுகிறது.

ஐவகை சிவராத்திரிகள்

சிவராத்திரி ஐந்து வகைப்படும். அவை : மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

மகா சிவராத்திரி : மாசி மாதத்தில் தேய்பிறையில், கிருஷ்ணபட்ச சதுர்த்தசி அன்று வருவது மகா சிவராத்திரி எனப்படும். அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் முக்தியை அடைவார்கள் என்பது இதற்கான பலனாகும்.

யோக சிவராத்திரி : திங்கட்கிழமை முழுவதும் வரும் அமாவாசையானது யோக சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

நித்ய சிவராத்திரி : ஆண்டின் பன்னிரெண்டு மாதங்களிலும் வரும் தேய்பிறை சதுர்த்தசி பன்னிரெண்டு, வளர்பிறை சதுர்த்தசி பன்னிரெண்டு என இருபத்து நான்கு சிவராத்திரிகளும் நித்ய சிவராத்திரி எனப்படும்.

பட்ச சிவராத்திரி : தை மாதத்தில் தேய்பிறையில் வரும் பிரதமை திதியில் இருந்து பதிமூன்று நாள் வரையில், நியமத்துடன் ஒரு பொழுது மட்டும் உணவு உண்டு, பதினான்காவது நாளான சதுர்த்தசி அன்று உபவாசம் இருப்பது பட்ச சிவராத்திரியாகும்.

மாத சிவராத்திரி : மாதம் தோறும் அமாவாசைக்கு முன்தினம் வரும் சதுர்த்தசி திதியில் வருவது மாத சிவராத்திரி ஆகும்.

இவற்றில் ஒன்றையோ, இரண்டையோ, மூன்றையோ, நான்கையோ அல்லது ஐந்தையுமோ அவரவர் சக்திக்கு ஏற்ப கடைப்பிடித்து வரலாம். அதற்கு தக்க பலன் கிடைக்கும்.

வசந்தா மாரிமுத்து, சென்னை

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com