தீச்சுடராக ஜுவாலாமுகி!

தீச்சுடராக ஜுவாலாமுகி!
Published on

5

ராஜி ராதா

மாசலப் பிரதேசம், காங்கரா பள்ளத்தாக்குக்கு தெற்கே 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஜுவாலாமுகி திருக்கோயில். இங்கே அன்னை சக்தி தேவியின் திருவுருவம் வித்தியாசமானது! தன்னை உருவம் இல்லாத தீச்சுடராக வெளிப்படுத்திக்கொள்கிறாள். லக்கான்பால்ஸ், தாகூர்ஸ், குஜ்ரால் மற்றும் பாட்டியர்களுக்கு ஜுவாலமுகியே குலதெய்வம்.

சக்தி தாட்சாயணி தனது தந்தை தட்சனிடம் கோபம் கொண்டு, அவன் வளர்த்த அக்னி குண்டத்தில் குதித்துக் கருகுகிறாள். அதுகண்டு பொறுக்க முடியாத சிவன், தாட்சாயணியை தூக்கிக்கொண்டு ருத்ர தாண்டவம் ஆடுகிறார். அப்போது விஷ்ணு, தன்னுடைய சக்கரத்தால் சக்தியை பல கூறுகளாக்கி, பூமியில் விழச் செய்கிறார். இவற்றில் சக்தி தேவியின் நாக்கு விழுந்த இடம் ஜுவாலாமுகி.

விழுந்தது தெரியும்ஆனால், எங்கே விழுந்தது என யாராலும் கண்டுபிடிக்க இயலவில்லை. அச்சமயம் ஒரு நாள், பசு மேய்ப்பன் ஒருவன் தன்னுடைய பசுக்களில் ஒன்று மேய்ந்து விட்டுத் திரும்புகையில், பால் இல்லாமல் வருவது கண்டு திகைக்கிறான். இதனால், அடுத்த நாள் அந்தப் பசுவை கண்காணிக்கிறான். அப்போது அந்தப் பசுவின் மடியிலிருந்து ஒரு இளம் பெண் பால் குடிப்பதைக் காண்கிறான். ஆனால், அவன் பார்த்த அடுத்த கணமே, அவள் மறைந்து விடுகிறாள். இதனை மாடு மேய்ப்பவன், மன்னனிடம் சென்று கூறுகிறான். அதைக்கேட்டு அதிசயித்த மன்னன், உடனே அதனைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறான். ஆனால், சிக்கவில்லை.

சில நாட்கள் கழித்து பசு ஒரு இடத்தில் எரியும் தீச்சுடர் மீது தனது பாலை பீய்ச்சுவதைப் பார்க்கிறான் மாடு மேய்ப்பவன். அதனை, மன்னரும் வந்து பார்க்கிறான். பூமியின் பாறைகளுக்கு இடையில் சக்தி தேவியின் நாக்கு விழுந்துள்ளது எனவும், அதிலிருந்து எழும் ஜுவாலைதான் வெளியே தெரிகிறது என்பதையும் உணர்ந்து, சக்தி தேவிக்கு அங்கே ஒரு கோயிலைக் கட்டினான்.

இதனையே சற்று மாற்றி அன்னை துர்கா தேவி, மன்னரின் கனவில் தோன்றி ஜுவாலை எரியும் இடத்தைக் கூறி, ''அது எனது நாக்கிலிருந்து எழும் ஆக்ரோஷ ஜுவாலை! அதனைச் சுற்றி ஒரு கோயில் எழுப்பி வழிபடு" எனக் கூறியதாகவும், அன்னை சக்தியின் உத்தரவுப்படி, மன்னர் அங்கே கோயில் எழுப்பினார் எனவும் கூறப்படுவதுண்டு.

அடுத்ததாக, ஜலந்தரா என்ற அரக்கன் இந்தப் பகுதியை கொடூரமாக நடத்தியதாகவும், மக்கள் அதனை சிவனிடம் முறையிட, சிவபெருமான் ஜலந்தராவைக் கொன்றதாகவும், தற்போது எரியும் ஜுவாலை ஜலந்தராவின் நாக்கிலிருந்து வருபவை எனவும் கூட ஒரு கதை உண்டு. எது எப்படியோ ஜுவாலை தொடர்ந்து வருவது உண்மை!

ந்தக் கோயிலில் ஒன்பது இடங்களில் இருந்து ஜுவாலை வருகிறது. இதில் பெரிய, நிலையான ஜுவாலையையே காளியாக நினைத்து பக்தர்கள் வணங்குகின்றனர். இதனால் ஜுவாலாமுகி திருக்கோயில் மிகவும் பிரபலமானது. பல்லாயிரக்கணக்கில் மக்கள் வர ஆரம்பித்தனர்.

அக்பர் காலத்தில் அவர் இதனை நம்பவில்லை. இதனால் அதனை ஒரு உலோகத் தகடு கொண்டு மூடிப் பார்த்தார். தீச்சுடரை நிறுத்த இயலவில்லை. பிறகு, தீச்சுடர் வரும் துவாரத்தில் தண்ணீரை குழாய் மூலம் பீய்ச்சி அடித்து நிறுத்தப் பார்த்தார். இயலவில்லை. இதனால் கடும்கோபம் கொண்ட அக்பர், அந்த இடத்தையே இடித்துத் தள்ளினார். பிறகு, மனம் மாறி, தீச்சுடரின் மீது பிடிக்க தங்கக் குடை ஒன்றைக் காணிக்கையாகக் கொடுத்து, கூடவே ஒரு கோரிக்கையும் வைத்தார். ஆனால், அதனை ஜுவாலாமுகி ஏற்கவில்லை. மேலும், தங்கக் குடையும் ஜுவாலை பட்டதும், சாதாரண உலோகக் குடையாக மாறியது. இதைக் கண்டு திகைத்த அக்பர், பிறகு அந்தப் பக்கமே வரவில்லை. அதன் பின்பு, சம்பா பகுதி மன்னர் சன்சார்சந்த் என்பவர் கோயிலைத் திரும்பக் கட்டினார். ரஞ்சித்சிங் காலத்தில் கோயிலின் மேல் கவிகை மாடங்களுக்கு (dome) தங்க முலாம் பூசப்பட்டது. பிறகு அவருடைய மகள் ஷெர்சிங் வாசற் கதவுக்கு வெள்ளிக் கவசம் போட்டார். இன்றும் தினமும் கோயிலுக்கு நல்ல கூட்டம் வருகிறது.

னி, கோயிலுக்குப் போவோம். கோயிலின் மேலே கவிகை மாடங்கள் மட்டும் இல்லாவிடில், இது ஹால், ரூம்களைக் கொண்ட ஒரு வீடுதான். உள்ளே நுழையும் இடத்தில் ஒரு பெரிய மணி உள்ளது. இதனை நேபாள மன்னர் வழங்கியுள்ளார். ஜுவாலைகளில் மிகப் பெரிய வழிபட்டுக்கு உரிய ஜுவாலையைச் சுற்றி ஒரு சதுர தொட்டி கட்டி, உள்ளே ஒரு கேஸ் பைப் மூலம் இயற்கை வாயு வருகிறது. அதனை கோயில் குருக்கள் ஏற்றுகிறார். பிறகு தொடர்ந்து எரிகிறது. அது நீல நிற ஜுவாலையாக உள்ளது. இப்படி கருவறையில் மொத்தம் ஒன்பது இடங்களில்
தீ ஜுவாலைகள் வருகின்றன
.

மைய ஜுவாலையே காளி தேவியின் அம்சமான ஜுவாலாமுகி என வணங்கப்படுகிறது. மற்ற ஜுவாலைகளையும் நமக்குத் தெரியும்படி அமைத்துள்ளனர். ஜுவாலைகளை மகாகாளி, அண்ணபூர்ணா, சண்டி, ஹிங்லாஜ், வித்யா, பாசினி, மகாலட்சுமி, சரஸ்வதி, அம்பிகா மற்றும் அஞ்சுதேவி எனப் பெயரிட்டு அழைக்கின்றனர். கருவறையை மூடிச் செல்ல ஏதுவாக மடக்கு எவர்சில்வர் கதவு அமைத்துள்ளனர். இந்தக் கோயிலுக்கென்று தனி நூலகம் ஒன்றும் உள்ளது.

பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர் இந்தக் கோயிலுக்கு அதிக அளவில் விஜயம் செய்வதோடு, அங்கே சுற்றும் மந்திரவாதிகளிடம் சிகிச்சையும் பெறுகின்றனர். அம்மனுக்கு நேர்த்திக்கடன் பாலும், நீரும்தான்.

இமாசலப் பிரதேசத்தின் தரம்சாலாவிலிருந்து 55 கிலோ மீட்டர் தொலைவில் ஜுவாலாமுகி நகரில் ஆட்சி செய்கிறாள் அன்னை ஜுவாலமுகி.

தரிசன நேரம் : காலை 4 முதல் இரவு 11 மணி வரை. தினமும் காலை 8 மணிக்கும் இரவு 8 மணிக்கும் ஆரத்தி உண்டு. கூட்டமும், கட்டுப்பாடுகளும் அதிகம் இருந்தாலும், பிரதான ஜுவாலையை அனைவரும் நிச்சயம் தரிசித்து விட்டு வரலாம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com