விமலாக்ருதியின் கீழ் வில்லிபுத்தூரான்!

விமலாக்ருதியின் கீழ் வில்லிபுத்தூரான்!
Published on

கே.சூரியோதயன்

'கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர்' எனப் போற்றப்படும் தலம் ஸ்ரீவில்லிபுத்தூர்! ஸ்ரீ என்றால் லக்ஷ்மி. இவளே ஆண்டாளாக அவதாரம் செய்தாள்.
வில்லி என்பது இவ்வூரை ஆண்ட மன்னனின் பெயர். பாம்புப் புற்று நிறைந்த பகுதியாக இது இருந்ததால், 'புத்தூர்' எனப் பெயர் வந்தது. பிற்காலத்தில், இவற்றை மொத்தமாகத் தொகுத்து 'ஸ்ரீவில்லிபுத்தூர்' என அழைத்தனர். சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாம்
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், அவளது தந்தை விஷ்ணு சித்தர் ஆகியோரின் அவதாரத் தலம்!

விஷ்ணு சித்தர், பெருமாளுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்ததும், அவரது நந்தவனத்தில்
ஸ்ரீ ஆண்டாள் அவதரித்ததும், பெருமாள் மீதான காதல் கலந்த பக்தியால், அவருக்கான மாலையை ஆண்டாள் சூடிக்கொடுத்ததுமான அற்புதத் திருத்தலம்!

இக்கோயில் உத்ஸவப் பெருமாள் வித்தியாசமாக பேண்ட், சட்டை அணிந்து காட்சி தருவது விசேஷம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ரங்கமன்னார் சுவாமி, வலது கையில் பெந்துகோல் (தற்காப்பு கோல்), இடக்கையில் செங்கோல், இடுப்பில் உடைவாளும் தரித்து, ராஜ கோலத்தில் காட்சி தருகிறார். இவரது காலில் செருப்பு அணிந்திருப்பது சிறப்பு. ஆண்டாள் கிழக்கு நோக்கி தனிச் சன்னிதியில் அருளுகின்றாள். பொதுவாக, கிழக்கு நோக்கிக் காட்சி தரும் பெண் தெய்வங்களை வழிபட, கீர்த்தி உண்டாகும் என்பர். எனவே, இவளிடம் வேண்டிக்கொள்பவை அனைத்தும் நடக்கும் என்பது ஐதீகம். திருமண வரம், குழந்தை பாக்கியம், கல்வி ஞானம், வியாபார விருத்தி, ஜஸ்வர்யம் கிடைக்க, விவசாயம் செழிக்க இத்தலத்து பெருமாளிடம் பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.

ண்டாள் நாச்சியாரை மணம் புரிய வந்த பகவானை ஒரே சமயத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்ததால், விஷ்ணு சித்தரின் மனதில் ஓர் அச்சம். 'எங்கே பெருமாளுக்கு திருஷ்டி பட்டுவிடுமோ?' என்று. அதனால், 'பல்லாண்டு பல்லாண்டு' எனத் துவங்கும், 'திருப்பல்லாண்டு' பாடினார். அவரது பக்தியை மெச்சிய பெருமாள், 'அனைவரிலும் உயர்ந்தவர்' என்ற பொருளில் அவருக்கு, 'பெரியாழ்வார்' எனப் பெயர் சூட்டினார். இக்கோயில் ஆடித்திருவிழாவின் 7ம் நாளில் ஸ்ரீ ரங்கமன்னார், ஆண்டாள் மடியில் சயனக் கோலத்தில் அருளுவதைக் காணலாம். இவ்வூர் கிருஷ்ணன் கோயிலில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இந்த அற்புத தரிசனம், தம்பதியரிடையே ஒற்றுமையை வலுப்படுத்தக் கூடியது.

ஆண்டாள் நாச்சியாரை ஸ்ரீ ரெங்கமன்னாருக்கு திருமணம் செய்து கொடுத்த பெரியாழ்வார், தனது மகளைப் பிரிந்த ஆற்றாமையால், 'ஒருமகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால்தான் கொண்டுபோனான்' என்று பாடினார். 'தனது இல்லத்தில் மகாராணியாக வாழ்ந்தவள், தற்போது பெருமாளை மணம் முடிக்கின்றாளே! அவள் இங்கே இருந்தது போல சிறப்புடன் அங்கே வாழ்வாளா?!' என்று தந்தையின் மன பதைபதைப்புடன் இப்பாடலை பாடினார். ஆண்கள், இப்பாடலை பாடி இறைவனைத் தொழுதால் தங்களது குழந்தைகள் மீது பாசம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

ருவறையில் விமலாக்ருதி விமானத்தின் கீழ், வடவிருசத்தினடியில், அரவணைப் பள்ளியில் ஸ்ரீதேவி பூதேவி அடி வருட, சயனக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். விமானத்தைச் சுற்றி வர, விமானத்திலே ஒரு சிறு 'விட்டவாசல் பிரகார'மும் உண்டு. இதில் திருமுடியையும் திருவடிகளையும் சேவிக்க சிறிய திட்டி வாசல்கள் உள்ளன. இவை மார்கழித் திருநாள் ஆரம்பத்திற்கு முதல் நாள் பிரியாவிடையன்று யாவரும் வழிபட திறந்து வைக்கப்படுகின்றன. இக்கோயில் தேரில் மிகச் சிறந்த தொழில் நுட்பத்துடன் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. 'சாலி வாகன சகாப்தம் கொல்லம் 1025 வருஷம் சௌமிய வருடம் ஆவணி 13 குருவாரம்' என்று எழுதப்பட்டுள்ளது. இதிலிருந்து இதன் பழைமையை புரிந்து கொள்ளலாம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் புராண வரலாறு மெய்சிலிர்க்கச் செய்பவை என்றால், ஓங்கி உயர்ந்து நின்று எழிலூட்டுகிற ராஜகோபுரத் தகவல்கள் சுவாரஸ்யமானவை. விஷ்ணு சித்தருக்கு, 'பெருமாள் குடிகொண்டிருக்கும் இந்த ஆலயத்துக்கு ஓர் கோபுரம் எழுப்ப வேண்டும்!' என்று ஆசை! ஸ்ரீவல்லபதேவ பாண்டிய மன்னர், பரம்பொருளை விளக்கும்படி ஒரு போட்டி வைத்தார். அதில் வெற்றி வாகை சூடி, பொற்கிழி பரிசினைப் பெற்றார் விஷ்ணு சித்தர். அத்துடன், கோபுரம் எழுப்புகிற தனது ஆசையையும் மன்னரிடம் தெரிவித்தார். இதைக் கேட்ட மன்னர், அழகிய, ஓங்கி உயர்ந்த ராஜகோபுரத்தைக் கட்டிக் கொடுத்தார்.

பெரிய தேர், பெரியாழ்வார், பெரிய குளம்என அமைந்த இந்தத் தலத்தில் மன்னர் பெருமான் கட்டித் தந்த கோபுரமும் மிகப்பெரியது. இன்றைக்கும் அழகு குறையாமல், பொலிவுடன் காட்சி தருகிறது இக்கோயில் ராஜகோபுரம்! கவிச்சக்கரவர்த்தி கம்பர், அந்தக் கோபுரத்தின் உயரம் மற்றும் கட்டுமானங்களைக் கண்டு வியந்து பாடியிருக்கிறார். கோபுரத்தின் முன்பக்கத் தோற்றம் எப்படி அமைந்திருக்கிறதோ, அதேபோல் கோயிலின் பின்பக்கத் தோற்றமும், அதாவது கோயிலில் இருந்து பார்க்கின்ற கோபுரப் பகுதியும் அமைந்துள்ளது இன்னொரு சிறப்பு!

ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோபுரம், சுமார் 196 அடி உயரமும், தெற்கு வடக்காக சுமார் 120 அடி, கிழக்கு மேற்காக சுமார் 82 அடி அகலமும் கொண்டது; 11 நிலை; 11 கலசங்கள் கொண்டது! கிருஷ்ண தேவராயர், திருமலை நாயக்கர் என மன்னர்கள் பலராலும் திருப்பணி செய்யப்பட்டு பராமரிக்கப்பட்ட ஆலயம் இது. பெரியாழ்வாரின் பரம்பரையினர் இந்தக் கோயிலின் கைங்கர்யப் பணியில் இன்றளவும் ஈடுபட்டு வருகின்றனர். இக்கோயில் கோபுரம் தமிழக அரசின் சின்னமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோடி அதிசயங்களையும் அற்புதங்களையும் ஒருங்கே கொண்டுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தை தரிசியுங்கள்; கோடி புண்ணியங்களைப் பெறுங்கள்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com