மந்தாகினி கரையில் சிந்தாபூரணி!

மந்தாகினி கரையில் சிந்தாபூரணி!
Published on

6

– ராஜி ராதா

மாசலப் பிரதேசத்தை கடவுள் மற்றும் பெண் தெய்வங்கள் வாழும் பூமி என அழைப்பர். இதற்கேற்ப இங்கு ஏராளமான சக்திமிகு அம்மன் கோயில்களுக்கு பஞ்சமில்லை. இம்மாநிலத்தின், 'உனா'ஜில்லாவிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் சிந்தாபூரணி என ஒரு சிறு நகரம் உள்ளது. காங்கரா பகுதியிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இப்பகுதியில், 'சின்னமஸ்தா' என அழைக்கப்படும் சிந்தாபூரணி அம்மன் அருள்பாலிக்கிறாள்.

இந்த அம்மனுக்கு இரு வேறு கதைகள் கூறப்படுகின்றன. ஒன்று வழக்கமான தாட்சாயணி கதை. தட்சனின் மகள் தாட்சாயணிக்கு தவம் செய்து கொண்டிருந்த சிவன் மீது அளவிட முடியாத அன்பு. இதனால் தந்தை தட்சனின் விருப்பத்தையும் மீறி சிவனை மணந்துகொண்டாள். இதனால் வெறுப்புற்ற தட்சன், தான் நடத்திய மிகப்பெரிய யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. இதனால் வருந்திய தாட்சாயணி, தந்தையிடம் நியாயம் கேட்க வந்தபோது, தந்தை தட்சன் அவளை மேலும் அவமானப்படுத்தினான்! இதனால் கடும் கோபம் கொண்ட தாட்சாயணி, அக்னி குண்டத்தில் குதித்து கருகுகிறாள். அப்போது அங்கு வந்த சிவன், தாட்சாயணியின் கருகிய உடலைத் தூக்கிக் கொண்டு நடனம் ஆடுகிறார்!
இதைப் பார்த்த மகாவிஷ்ணு, தாட்சாயணியின் உடலை தனது சக்கராயுதத்தால் வெட்டி, பல கூறுகளாக பூமியில் விழும்படி செய்கிறார். இதில் தாட்சாயணியின் பாதம் விழுந்த இடமே சிந்தாபூரணி என்கின்றன புராணங்கள்.

இனி, மற்றொரு கதையைப் பார்போம். இந்தப் பகுதியில் அரக்கர்களின் அட்டூழியம் அதிகரிக்க, அன்னை சக்தி தேவி பகவதியாக இங்கு ஆவிர்பவித்து அவர்களை ஒழித்துக் காட்டுகிறாள்! அன்னை பகவதிக்கு துணையாக ஜெய – விஜயா என இருவர் உதவி புரிகின்றனர். அப்போது அன்னை பகவதி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த சமயம் ஜெய – விஜயாக்கள், 'தங்களுக்குப் பசிக்கிறது. உணவு வேண்டும்' எனக் கேட்கின்றனர்.

அதற்கு பகவதி, 'பொறுங்கள்… இருப்பிடம் சென்று தருகிறேன்' எனக் கூறிவிட்டு நடந்து சென்று கொண்டிருக்கிறாள். ஆனால், ஜெய – விஜயாக்கள் தங்களுக்கு உடனே உணவு வேண்டும் என அடம் பிடிக்கின்றனர்! பகவதி மீண்டும் அவர்களை சமாதானப்படுத்தியும் கேட்காததால், கடும் கோபம் கொண்ட பகவதி, தனது கோர நகத்தினால் தன்னுடைய தலையை கழுத்துடன் வெட்டுகிறாள். அறுபட்ட கழுத்திலிருந்து மூன்று திசைகளிலும் ரத்தம் பீறிட்டு வருகிறது.  ஒன்றை தாயே குடிக்கிறாள். மற்ற இரண்டு ரத்த சிந்தல்களையும் ஜெய – விஜயாக்கள் குடிக்கின்றனர். இதனால் அன்னை சக்தி தேவிக்கு, 'சின்ன மஸ்தா' என சிறப்புப் பெயர்.

ந்தத் தாய் பக்தர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுகிறாள். தன்னை நம்பியவர்களுக்காக தனது தலையையே கொடுத்த சக்தி தேவி கூறுவதன் உண்மைதான் என்ன? முக்திக்கு வழி தேட வேண்டுமானால், முதலில் நமது ஆசாபாசங்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். அதற்குக் காரணமாக இருப்பது தலையில் உள்ள மூளை. ஆக, அதனை தாறுமாறாக செயல்பட விடாமல் காப்பதன் மூலமே நம்மைக் காத்துக்கொள்ள இயலும் என்கிறது அன்னையின் கதை என்கின்றனர் பக்தர்கள்.

இக்கோயில் கருவறையில் பிண்டிதான் உள்ளது. அதற்குத்தான் தலை, கண் என அலங்காரம் செய்வித்து வழிபடுகின்றனர். பண்டிட் மாய்தாஸ் என்பவர்தான் இந்தப் பிண்டியை, சுமார் 900 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்து, கோயில் கட்டினார். அதோடு, காலம் காலமாக அவருடைய குடும்பத்தினரே இக்கோயிலின் பூஜையையும் செய்து வருகின்றனர்.

அன்னை சக்தி தேவி அரக்கர்களைக் கொன்றதும் மந்தாகினியில் மூழ்கி எழுந்தாள் என்பது தல வரலாறு! இதனால் இந்தக் கோயிலுக்கு வருபவர்கள் மந்தாகினியில் ஸ்நானம் செய்துவிட்டு அம்மனை தரிசிக்க வருகின்றனர்.

மிகவும் பிரபலமான இந்த அம்மன் கோயில் எளிமையானது. ஒரு நீண்ட மண்டபம். அதில் உள்ள ஒரு சன்னிதியே கருவறை. மேலே மூன்று தாழி (Dome)கள் மட்டும் இல்லாவிடில் கோயில் என கண்டுபிடிப்பதே கடினம். கோயில் வாசலில் ஒரு பிரம்மாண்ட மரம் உள்ளது. வடநாட்டுக்கே உரிய சிவப்பு ஜிகுஜிகு துணியை மக்கள் வேண்டுதலாகக் கட்டுகின்றனர். இந்த அம்மனிடம் வேண்டிய காரியம் நிச்சயம் நிறைவேறும் என நம்பப்படுவதால் மரத்தில் எங்கு பார்த்தாலும் சிவப்பு வண்ணத் தூணிகள் தொங்குகிறது.

உள்ளே பூக்களினால் அம்மனுக்கு அலங்காரம்! ஒரு முறைக்கு இரு முறை தரிசனம் செய்துவிட்டு வெளியே வருகிறோம். அம்மனுக்கு மகாதேவ்வின் பாதுகாப்பு நான்கு பக்கமும் உண்டு. ஒரே தொலைவில் கிழக்கே காலேஸ்வர் மகாதேவ், மேற்கே நரகன் மகாதேவ், வடக்கே மிச்குண்ட் மகாதேவ் மற்றும் தெற்கே சிவபாரி மகாதேவ் என்ற பெயரில் பைரவர்கள் உள்ளனர்.

கோயிலில் சங்கராந்தி, ஆங்கிலப் புது வருடம், இரு நவராத்திரிகள் மற்றும் அஷ்டமி தினங்கள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இரு நவராத்திரிகளின்போதும் (வசந்த நவராத்திரி, சாரதா நவராத்திரி) பிரம்மாண்ட மேளா நடைபெறுகிறது. வடநாட்டிற்கே உரிய செயற்கை பூக்கள், பலூன் அலங்காரம் கோயில் முழுவதும் ஜொலிக்கிறது. தினமும் காலை 6 முதல் இரவு 10 மணி வரை கோயில் திறந்துள்ளது. காலை மற்றும் மாலை 6.30 மணிக்கு சிறப்பு ஆரத்தி உண்டு.

டெல்லி, சண்டிகர், ஜலந்தர் என பல இடங்களிலிருந்தும் உனா நகருக்கு பேருந்து, ரயில் வசதிகள் உண்டு. தங்குவதற்கு ஏதுவாய் அரசு தங்கு விடுதிகளும் உள்ளன.

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com