சிவா-விஷ்ணு கோபம் தணித்த சாந்ததுர்கா!

சிவா-விஷ்ணு கோபம் தணித்த சாந்ததுர்கா!
Published on

– லதானந்த்

துர்கையம்மன் கோபத்துடன் அரக்கர்களை அழிப்பவர் என்பது பொதுவான கருத்து. ஆனால், கோவாவில் எழுந்தருளியிருக்கும் துர்கையம்மன் சாந்தமே வடிவானவர். அதனால் இவர், 'சாந்ததுர்கா' என அழைக்கப்படுகிறார். உள்ளூர் மக்கள் இந்த அம்மனை, 'சாந்தேரி' என அழைக்கின்றனர்.

ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகள் போர்ச்சுக்கீசியர்களால் ஆளப்பட்டிருந்தாலும், அவர்களால் பல ஆலயங்கள் சிதைக்கப்பட்டிருந்தாலும், புராணப் புகழ் பெற்ற ஆலயங்கள் பலவும் கோவாவில் இருக்கின்றன. கடற்கரைகள் மற்றும் கொண்டாட்டங்களுக்குப் பேர்பெற்ற கோவாவில், அருளமுதம் தந்து அரவணைக்கும் ஆலயங்களில் முக்கியமானது சாந்ததுர்கா ஆலயம்.

ரு காலத்தில் சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவருக்கும் இடையில் சண்டையேற்படக்கூடிய நிலைமை உண்டானதாம். அப்போது சிவபெருமான் தம்முடைய பாசுபத அஸ்திரத்தை பிரயோகிக்க முடிவெடுத்து விட்டாராம். இதனைத் தவிர்க்க விரும்பிய பிரம்மன், துர்கையிடம் முறையிட, அவர் சிவன், விஷ்ணு இருவரையும் தமது இரு கரங்களிலும் ஏந்தி, இருவருக்கும் இடையில் சமாதானம் செய்துவைத்தாராம். அதன்பின் அங்கே சாந்தி நிலவியதாகக் கூறப்படுகிறது. சமாதானம் அடைந்த சிவன் மற்றும் விஷ்ணு இருவரும் பாம்பு வடிவில் இன்றும் சாந்ததுர்கையம்மன் பின்னிரு கரங்களில் மிளிர்கிறார்கள். முன் வலது கை அபய முத்திரை காண்பிக்க, இடது முன் கை வரத முத்திரையோடு அருள்பாலிக்கிறாள் துர்கை அன்னை.

மக்களுக்குத் தொல்லை கொடுத்துவந்த காலாந்தகன் என்ற அரக்கனை வதம் செய்ததால் இந்த அம்மனுக்கு விஜயதுர்கா என்ற இன்னொரு பெயரும் உண்டு. கொங்கணி மொழி பேசும் அந்தணர்களின் குலதெய்வம் சாந்த துர்கை விளங்குகிறாள்.

பீஹாரைச் சேர்ந்த லோமசர்மா என்ற வைதீகர் தம்முடைய உறவினர்களோடு குலதெய்வமான துர்காதேவி விக்ரஹத்தையும் எடுத்துக்கொண்டு, காவெலம் கிராமத்துக்கு வந்து தேவியின் திருவுருவத்தைப் பிரதிஷ்டை செய்ததாக இப்பகுதி மக்கள் சொல்கின்றனர்.

சாந்ததுர்கா ஆலயம், 'கௌட் சரஸ்வத் ப்ரமன் சமாஜ்' என்ற தனியார் அமைப்புக்குச் சொந்தமானது. இது, கோவாவின் தலைநகர் பனாஜியில் இருந்து முப்பது கி.மீ. தொலைவில் பாண்டா தாலுகாவில் இருக்கும் கவெலம் என்ற கிராமத்தின் மலையடிவாரத்தில் அழகுற அமைந்திருக்கிறது. அழகிய மரம், செடி, கொடிகளால் சூழப்பட்ட ரம்மியமான இடமாக இது திகழ்கிறது.

முதலில் இந்த ஆலயம் தெற்கு கோவா மாவட்டத்தில் இருக்கும் கெலோஷி என்ற இடத்தில் இருந்திருக்கிறது. இந்த இடத்தை, 'டெவூல்படா' என்றும் சொல்வார்கள். போர்ச்சுகீசியர்களின் ஆக்கிரமிப்பை ஒட்டி, 1566ஆம் ஆண்டு இது தரைமட்டமாக்கப்பட்டிருக்கிறது. மூலவர் விக்ரஹத்தை கவேலம் என்ற கிராமத்துக்குக் கொண்டு சென்று பக்தர்கள் வழிபட்டிருக்கிறார்கள். தற்போதைய ஆலயம் மராட்டிய மன்னர் சத்ரபதி ஷாஹு மஹராஜ் என்பவரால் 1713 முதல் 1738 வரை பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இதற்குத் தூண்டுகோலாக விளங்கியவர் அவரது அமைச்சரவையில் இருந்த நாரோ ராம் என்பவராவார். காவெலம் கிராமத்தையே இந்த ஆலயத்துக்கு தானமாக அளித்திருக்கிறார் மன்னர்.

ருவறைச் சுற்றிலும் மூன்று திசைகளிலும் தலா ஓர் ஆலயம் எழுப்பப்பட்டிருக்கிறது. பிரமிடு வடிவத்தில் கூம்பு அமைப்புடன் கூடிய மேற்கூரையுடன் எழிலாக நிற்கிறது ஆலயம். தூண்களும், தரையும் காஷ்மீரத்துக் கற்களால் செய்யப்பட்டிருக்கின்றன. மிகப்பெரிய தொட்டி, தீபஸ்தம்பம் மற்றும் தங்குமிடங்கள் எனப்படும் அக்ரசாலாக்களும் உள்ளன. இங்கே உள்ள ஜன்னல்களில் அழுத்தமான சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை போன்ற கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருக்கின்றன். சீரமைப்புப் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவருவதால் இந்த ஆலயம் எழிலோடு திகழ்கிறது.

ஆலயத்துக்குள் ஆட்சேபத்துக்குரிய வகையில் ஆடைகள் அணிந்து வந்ததாலும், நடந்துகொண்டதாலும் வெளிநாட்டவர்களைச் சமீப காலங்களில் அனுமதிப்பதில்லை.

மண்டபத்தில் தொங்கும் சர விளக்குகள், வாயில் தூண்கள், கைப்பிடிகள் போன்றவை நுணுக்கமான வேலைப்பாடுகளோடு திகழ்கிறது. மெரூன் வண்ணம் பூசப்பட்ட பகுதிகள் ஆலயத்துக்குத் தனியழகைக் கொடுக்கின்றன.

மஹாபஞ்சமி போன்ற சிறப்பு தினங்களில் தங்கப் பல்லக்கில் உத்ஸவ தேவி வலம் வருவது மிகவும் விசேஷமாகும்.

ஆலயத்தின் பல இடங்களில் கோவா மாநிலத்துக்கே உரிய, 'லேட்டரைட்' என்னும் கற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இங்குள்ள தீபஸ்தம்பத்தில் திருவிழா காலங்களில் ஏராளமான விளக்குகள் ஏற்றப்படுவது கண்கொள்ளாக் காட்சி. பக்தர்கள் அதை, 'நயனமனோஹர் தீபஸ்தம்போ' எனச் சொல்லி வழிபடுகிறார்கள்.

ஆலய வளாகத்திலேயே கருடன், அனுமன், லட்சுமி நாராயணர், பகவதி தேவி ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. ஆலயத்தின் அருகிலேயே திருக்குளம் ஒன்றும் உள்ளது. சாந்த துர்கை அம்மன் திருச்சிலைக்கு முன்பு சிவலிங்கம் ஒன்றும் காட்சி தருகிறது.

தினமும் நண்பகலில் தேவிக்கு ஆரத்தி காண்பிக்கப்படும்போது, கருவறைக்கு எதிரில் உள்ள கம்பத்தில் கண்ணாடி ஒன்றைப் பொருத்தி வைக்கிறார்கள். சூரிய ஒளி அதிலே படுகிறது; அன்னையின் மேல் அது பிரதிபலிக்கிறது. சூரியனே வணங்கும் இந்தத் திருக்காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.
மங்கலப் பொருட்கள் கொண்டு துர்கா தேவியை பெண்கள் வழிபடுகின்றனர். தங்களது வீடுகளில் நடைபெறும் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் முதல் அழைப்பு இந்த அம்மனுக்குத்தான் என்பது இவர்கள் காலங்காலமாகக் கடைப்பிடிக்கும் வழக்கம்.
தோஷ நிவர்த்திக்காகவும், விரைவில் திருமணம் நடந்தேறவும், மழலைச் செல்வம் வேண்டியும் பக்தர்கள் சாந்த துர்கையம்மனை மனப்பூர்வமாக வேண்டி பலன் பெறுகின்றனர். ஸ்ரீராமநவமி, நாகபஞ்சமி, தசரா, துளசி பூஜா,
மஹா சிவராத்திரி போன்ற சிறப்பு தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அன்னையைத் தரிசித்து அருள் பெறுகின்றனர்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com